search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குருவையே சீடராக மாற்றிய மெய்கண்டார் திருக்கோவில்
    X

    குருவையே சீடராக மாற்றிய மெய்கண்டார் திருக்கோவில்

    குழந்தைகளுக்கு இளவயதில் நோய் தாக்கம் ஏற்படக்கூடிய பாலாரிஷ்டம் எனும் ஜாதக ரீதியான அமைப்பு மெய்கண்டார் திருக்கோவிலின் திருநீறு அணிவதால் நீக்கம் பெறுகிறது
    கயிலாயத்தில் சிவபெருமானிடம் உபதேசம் பெற்றவர்கள், அகச்சந்தான குரவர்கள் எனப்படுவர். விண்ணிலேயே இருக்கும் இவர்கள், திருக்கயிலாய பரம்பரை எனவும் அழைக்கப்படுவர். முதன் முதலாக இந்த பரம்பரை பூமியில் (மண்ணில்) தோன்ற காரணமானவர் மெய்கண்டார்.

    விருத்தாச்சலம் அருகே உள்ள பென்னாகடத்தில் அச்சுத களப்பாளர் எனும் சிவபக்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இறையருளால் பிறந்தவர் மெய்கண்டார். இவரது இயற்பெயர் சுவேதனப்பெருமான் என்பதாகும். இவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போது, தனது மாமனார் ஊராகிய திருவெண்ணைநல்லூரில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பொதிகை மலையில் இருக்கும் அகத்தியரை காணும் பொருட்டு, அகச் சந்தான ஆச்சாரியருள் ஒருவரான பரஞ்சோதி முனிவர் ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்தார்.

    திருவெண்ணைநல்லூரை நெருங்கியபோது, அவரது பயணம் தடைபட்டது. பூமியில் 2 வயது குழந்தை ஒன்று, பக்குவ நிலையில் இருப்பதை கண்டு தரையிறங்கிய அவர், அந்தக் குழந்தைக்கு தனது ஞான ஆசிரியரிடம் பெற்ற சிவஞான போதத்தை உபதேசித்தார். சத்யஞான தரிசினி எனும் தமது ஞான ஆசிரியர் பெயரை, தமிழில் மொழி பெயர்த்து, ‘மெய்கண்டார்’ என்று அந்தக் குழந்தைக்கு பெயரும் சூட்டினார்.

    சந்தான ஆச்சாரியர்களுள் முதன்மையானவராக போற்றப்படும் மெய்கண்டார், 18 சைவ ஆதீனங்கள் தோன்ற காரண கர்த்தா ஆவார். 13-ம் நூற்றாண்டில் சித்தாந்த சைவநெறி உபதேசமாக திருக்கயிலாயப் பரம்பரை என்று அழைக்கப்படும் 18 சைவ ஆதீனங்கள் மெய்கண்டாரையே முதன்மையாக கொண்டுள்ளது.

    சிவஞானபோதம் :

    மெய்கண்டார் தமது குருநாதரிடம் பெற்ற உபதேசத்தை சிவஞான போதம் எனும் தலைப்பில் தமிழில் நூலாக இயற்றினார். இது 12 சூத்திரங்கள் 40 வரிகள் 216 சொற்கள் 624 எழுத்துகள் உடையது. உலகில் தோன்றிய தத்துவ நூல்களுள் மிகவும் சுருக்கமான நூலாகும். இச்சிவஞான போதத்தை மணிமகுடமாகக் கொண்டு சித்தாந்த சாத்திரங்கள் பதிநான்கும் மெய்கண்ட சாத்திரம் என இன்றளவும் வழங்கப்படுகிறது.

    மெய்கண்டார் தமது நூலை, தன்னுடைய சீடர்களுக்கு உபதேசம் செய்து வந்தார். அப்போது மெய்கண்டாரின் குலகுருவாகிய சகல ஆகம பண்டிதருக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டது. ‘நம் வழிகாட்டுதல்படி பிறந்த குழந்தை, நம்மைக் கண்டு வணங்கி ஆசிபெறவில்லையே’ என்று வருந்தினார். மேலும் அந்தக் குழந்தை தானே குருவாக இருந்து உபதேசம் செய்வதும் அவருக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து தனது மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து, திருவெண்ணைநல்லூருக்கு சென்று விவரம் அறிந்து வரும்படி அனுப்பிவைத்தார்.

    ஆனால் சென்றவர்கள் யாரும் திரும்பி வரவில்லை. அவர்கள் அனைவரும் மெய்கண்டாரின் உபதேசத்தைக் கேட்டு, அவரிடமே சீடர்களாக சேர்ந்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சகல ஆகம பண்டிதர், தானே நேரடியாக மெய்கண்டாரைச் சந்திக்க வந்தார். அவர் வந்த நேரத்தில், மெய்கண்டார் தன்னுடைய சீடர்களுக்கு ஆணவம் (அறியாமை) பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

    அதை நிதானத்துடன் கேட்ட சகல ஆகம பண்டிதர், ‘ஆணவத்துக்கு ஒரு வடிவை காட்ட இயலுமா?’ எனக் கேட்டார்.

    உடனே மெய்கண்டார், ‘28 ஆகமங்களும் கற்று, ஆணவத்திற்கு வடிவம் இல்லை எனும் உண்மை உணராத நீங்கள்தான், ஆணவத்தின் வடிவம்’ என்று சுட்டிக் காட்டும் வகையில், அவரை தலை முதல் கால் வரை நோக்கினார்.

    மெய்கண்டாரின் ஞானப்பார்வை பட்ட மாத்திரத்தில், சகல ஆகம பண்டிதரின் அறியாமை நீங்கியது. ‘இவரே என்னை ஆட்கொள்ளும் குருநாதர்’ எனக் கருதிய அவர், மெய்கண்டாரின் திருவடியில் விழுந்து தம்மை சீடராக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

    மெய்கண்டாரும், சகல ஆகம பண்டிதருக்கு திருநீறு இட்டு, அருள்நந்திசிவம் என்னும் தீட்சாநாமத்தைச் சூட்டி, தன்னுடைய தலைமை சீடராக ஏற்றுக்கொண்டார். அவரோடு சேர்த்து 49 பேர், மெய்கண்டாரிடம் உபதேசம் பெற்றனர். மெய்கண்டார் ஒரு ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தின் போது திருவெண்ணெய்நல்லூரில் முக்தி அடைந்தார்.

    மெய்கண்டார் திருக்கோவில் :

    திருவெண்ணெநல்லூரில் மெய்கண்டாருக்கு திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவானதேசிக பரமாசாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆலயத்தில் மூலவராக அமைந்துள்ள மெய்கண்டாரை வணங்கினால், திருமணத் தடை, குழந்தை பேறின்மை, உடல் நலக்குறைவு முதலிய இடர்பாடுகள் நீங்கும் என்று தலபுராணம் கூறுகிறது.

    இங்கு சுமார் 500 ஆண்டுகள் பழமையான 2 யந்திரங்கள் உள்ளன. இவை யந்திரங்களில் தலைமையான திரு அம்பலச்சக்கரம் என்பவையாகும். வேண்டுபவர் களுடைய நோய்களை நீக்குவதும், வேண்டுவதை அருள்வதும் இந்தச் சக்கரங்களே என நம்பப்படுகிறது.

    ஆலயத்தின் வெளிப்பிரகார சுற்றுச்சுவரில் வடக்கு நோக்கிய நிலையில், சட்டைநாதர் வடிவில் ஒரு பைரவர் புடைச்சிற்பமாக அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும். இவருக்கு தினமும் நித்ய பூஜையும், அஷ்டமிகளில் விசேஷ பூஜையும், மாலை நேர பூஜையும் நடைபெறுகிறது.

    கட்டிடச் சிறப்பு :

    கோவிலின் மகாமண்டப மேற்கூரையின் நடுவில், ஒரு பிரமிடு வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கே சக்தி ஆற்றல் குவிக்கப்பட்டு மன ஒருமைப்பாடு நடக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைந்ததுபோல், இங்கேயும் அதற்கும் சற்று பெரியதான பஞ்சாட்சர படி அமைந்துள்ளது. ‘நமசிவாய’ என்ற 5 அட்சரங்களும் யந்திரங்களாக இப்படிகளின் கீழே அமைந்திருப்பதால், இவை பஞ்சாட்சரபடி என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சுவாதி அன்று மெய்கண்டார் குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு குருபூஜை விழா வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 11 மணி அளவில் சிறப்பு வழிபாடும், இரவு 7 மணிக்கு மேல் பூப்பல்லக்கில் திருவீதி உலாவும் நடைபெற இருக்கிறது.

    ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றும், ஒவ்வொரு மாதமும் வரும் சுவாதி நட்சத்திர நாள் மற்றும் வியாழக்கிழமை அன்றும் குரு வழிபாடு விசேஷமாக நடைபெறும். மெய்கண்டாருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படும்.

    மெய்கண்டார் சன்னிதியில் வைக்கப்பட்டுள்ள சங்கில், தீர்த்தம் நிரப்பப்பட்டு பூஜை செய்யப்படும். இந்த சங்கு தீர்த்தம் மகிமை வாய்ந்தது. உடல் நலம் இல்லாத குழந்தைகளுக்கு இந்த தீர்த்தத்தை கொடுத்தால் உடனே குணம் அடைவார்கள் என்பது நம்பிக்கை. உடல் நலிவுற்ற ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் இந்த சங்கு தீர்த்தம் அருமருந்தாக வழங்கப்படுகிறது.

    திருநீற்று பிரசாத மகிமை :

    குழந்தைகளுக்கு இளவயதில் நோய் தாக்கம் ஏற்படக்கூடிய பாலாரிஷ்டம் எனும் ஜாதக ரீதியான அமைப்பு மெய்கண்டார் திருக்கோவிலின் திருநீறு அணிவதால் நீக்கம் பெறுகிறது. குழந்தைபேறு வேண்டி வழிபடுவோருக்கு உறுதியாக அவ்வரம் கிடைக்கப்பெறுகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வரக்கூடிய நோய்கள் அனைத்திற்கும் மெய்கண்டாரின் திருநீறு அணிவதால் குணம் அடைகிறது.

    இங்கு வழங்கப்படும் திருநீற்று பிரசாதம் மனிதர்கள் மட்டும் அல்லாது ஆடு, மாடு முதலிய விலங்கினங்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களை தீர்க்கும் மருந்தாக விளங்குவது வியப்புக்குரியது. மிகுந்த மன அழுத்தம் மற்றும் மனக்கவலை உடையவர்கள் இங்கே வழிபடுவதன் மூலம் மன அமைதி பெறுகிறார்கள். இங்கே மகா மண்டபத்தில் உள்ள விநாயகரை வழிபடுவதன் மூலம் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கப் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அமைவிடம் :

    திருவெண்ணைநல்லூர் மெய்கண்டார் கோவில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவில் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து அரசூர் கூட்டு ரோடு வழியாக 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திருக்கோவிலூரில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருவெண்ணைநல்லூர் திருத்தலம். ரெயிலில் வருபவர்கள் விழுப்புரத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், கார் மூலம் திருவெண்ணைநல்லூரை அடையலாம். திருவெண்ணைநல்லூரின் வடக்கு வீதியில் மெய்கண்டார் கோவில் உள்ளது.
    Next Story
    ×