search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நன்மைகள் அருளும் பச்சையம்மன் சமேத மன்னாதீஸ்வரர் ஆலயம்
    X

    நன்மைகள் அருளும் பச்சையம்மன் சமேத மன்னாதீஸ்வரர் ஆலயம்

    இந்த உலகில் நிலைபெற்று இருக்கும் கடவுள் என்னும் பொருளில் இத்தல இறைவனுக்கு மன்னாதீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
    கயிலாயத்தில் ஒருநாள் சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் சிறு பேச்சு முரண்பாடு ஏற்பட்டது. சண்டையை தவிர்ப்பதற்காக, சிவபெருமான் தான் உலக உயிர்களுக்குப் படியளக்கச் செல்வதாக கூறி வெளியே சென்றுவிட்டார்.

    சிவனை சோதிக்க நினைத்த பார்வதிதேவி ஒரு எறும்பைப் பிடித்து, சிமிழ் ஒன்றுக்குள் அடைத்து வைத்தார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தார் சிவபெருமான். அவரிடம், ‘உங்களின் படியளக்கும் வேலை முடிந்ததா?’ என்று கேட்டார் பார்வதி.

    ‘ஆமாம்’ என்று பதிலளித்தார் ஈசன்.

    உடனே பார்வதிதேவி, தான் அடைத்து வைத்திருந்த எறும்பை காட்டுவதற்காக சிமிழை திறந்தார். அதற்குள் ஒரு அரிசி இருந்தது. அதை அந்த எறும்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து பார்வதிதேவி அதிர்ந்தார். ஈசனின் பெருமையை எண்ணி வியந்தார்.

    அப்போது சிவபெருமான், ‘எல்லாம் சரி.. என்னை சோதிக்க ஒரு பாவமும் அறியாத எறும்பை சிறைவைத்து பாவத்தை சேர்த்துக் கொண்டாயே.. அதற்கு என்ன செய்யப் போகிறாய்’ என்றார்.

    தன் தவறை உணர்ந்து வருந்திய பார்வதியிடம், ‘நேரம் வரும்போது இதற்கான தண்டனையை நீ அடைவாய்’ என்று கூறினார்.

    பிருங்கி மாமுனிவர் தீவிர சிவபக்தர். அவர் சிவனை மட்டும் வழிபடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். சிவனின் அருகில் இருக்கும் பார்வதியை தவிர்த்து, சிவனை மட்டுமே வலம் வந்து வழிபட்டுச் செல்வார்.

    இது பார்வதிதேவிக்கு மனக்கவலையை அளித்தது. அவர் இறைவனிடம், ‘சுவாமி! பிருங்கி முனிவர் உங்களை மட்டும் வணங்குவது என்ன நியாயம். எல்லாம் உணர்ந்த முனிவரே இப்படிச் செய்யலாமா? அவர் மீண்டும் இந்தத் தவறை செய்யாமல் இருக்க உங்கள் உடலில் சரிபாதி எனக்கு வேண்டும்’ என்று வேண்டினார்.

    அதற்கு சரியான வழி தவம் ஒன்றே என்பதை உணர்ந்து சிவ பெருமானை நினைத்து தவம் இயற்ற முடிவு செய்தார் பார்வதி தேவி. இதற்காக பூலோகம் வந்த பார்வதி, இமயம் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து தலங்களிலும் நீராடி, ஈசன் குடிகொண்டுள்ள தலங்களில் எல்லாம் தரிசனம் செய்ய விரும்பினார். அவருடன், அவரது தோழியரான 64 யோகினியர் துணையாகச் சென்றனர்.

    அன்னையானவள், கேதாரம், காசி போன்ற தலங்களை தரிசித்து விட்டு, உஜ்ஜயினி வந்தடைந்தார். அந்த நகரை அக்னி வீரன், ஆகாச வீரன் உள்ளிட்ட 7 சகோதரர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் பெண் பித்தர்களாகவும், அநீதி இழைப்பவர்களாகவும் இருந்தனர். பார்வதிதேவியின் படை பரிவாரங்கள் கிளப்பிய புழுதி, அந்த அசுரர்களை கோபம் கொள்ளச் செய்தது. பார்வதியின் அழகைக் கண்டு, அவளை மோகிப்பதாகக் கூறினான் அக்னி வீரன். அவனை சினந்து கடிந்த பார்வதி, சிவபெருமானை வேண்டினார். இதையடுத்து திருமால், பிரம்மா மற்றும் மகரிஷிகள், அசுவினி தேவர்கள் அவளுக்கு துணையாக வந்தனர்.

    தன் சகோதரியிடம் தகாத வார்த்தை பேசிய அக்னி வீரனைக் கண்டு கோபமடைந்து, பிரமாண்ட உருவம் கொண்டார் திருமால். அவர் வான் அளவு வளர்ந்து அக்னி வீரனை அழித்தார். எனவே வான் முனி என்று அழைக்கப்பட்டார். அதுவே காலப்போக்கில் மருவி, வாழ்முனி என்று ஆனது. உடன் வந்த பிரம்மா, மகரிஷிகள் ஆகியோரும் திருமாலைப் போன்று பெரிய உருவம் கொண்டு மற்ற அரக்க சகோதரர்களுடன் போரிட்டனர். அக்னி வீரன், ரண வீரன், ரத்த வீரன் போன்றவர்கள் சாகாவரம் பெற்றிருந்ததால், அவர்களை பூமிக்குள் அழுத்தி செயல்படாதவாறு செய்தனர் மகரிஷிகள்.

    அக்னி வீரனின் மகனான வீரமுத்துவிற்கு இந்த தகவல் கிடைத்தது. தன் தந்தை மற்றும் சிறு தந்தைகள் அனைவரும் துன்புறுத்தப்பட்டதை அறிந்த அவன் வெகுண்டெழுந்து போரிட வந்தான். அவனை வாழ்முனியான திருமால், அழிக்க முற்பட்டபோது, வீர முத்துவின் மனைவி குறுக்கிட்டு மடிப்பிச்சை கேட்டாள்.

    இதையடுத்து அவனை அம்பிகையின் கோவில் காவலராக இருக்கும்படி உத்தரவிட்டார் திருமால். தேவர்கள் தம்மிருப்பிடம் திரும்ப, திருமால் நீ வேண்டும் போது நாங்கள் துணைக்கு வருவோம். தற்போது உனக்குத் துணையாக மகாலட்சுமி என்கிற வேங்கடமலை நாச்சியார், சரஸ்வதி எனும் பூங்குறத்தி நாச்சியார், இந்திராணி ஆகிய ஆனைக்குறத்தி, ரதி எனப்படும் முடியால் அழகி, வள்ளியாகிய வனக்குறத்தி ஆகியோர் இங்கு தங்கி இருப்பார்கள் எனக்கூறிச் சென்றார்.

    பின்னர் அன்னை வடநாட்டில் ஒவ்வொரு இடமாக சிவபெருமானை நினைத்து வழிபட்டு வந்தார். பின் தமிழகத்தில் உள்ள காஞ்சி நகரின் கம்பை நதிக்கரையில் சிறிது காலம் தங்கியிருந்து தவம் இயற்றினார். அங்கிருந்து திருவண்ணாமலையில் உள்ள பவழப்பாறை என்ற இடத்திற்குச் சென்று ஈசனை நினைத்து தவம் செய்தார். அவரது தவத்திற்கு துணை நிற்க நினைத்த திருமால், வாழ்முனியாக அன்னை தவம் செய்த இடத்திற்கு வந்தமர்ந்தார். மற்ற முனிவர்களும் அவருக்கு காவலாக வந்தனர். தேவேந்திரன் தேவலோகத்தில் இருந்து யானை, குதிரை போன்றவற்றைக் கொண்டுவந்தான்.

    பவழப்பாறையில் அன்னை செய்த கடுமையான தவம், அக்னி பிழம்பாக சிவலோகத்தை எட்டியது. தவத்தின் தீவிரத்தை உணர்ந்த சிவபெருமான் கார்த்திகைப் பவுர்ணமியில் தன் உடலின் இடப் பாகத்தில் பார்வதிக்கு இடம் தந்து, ‘அர்த்தநாரீஸ்வரராக’ மாறி சந்தியா நிருத்தம் என்னும் நடனம் ஆடினார். பார்வதியின் கடும் தவத்தால் முன்பு அவர் செய்த தவறுகள் நிவர்த்தியானதுடன், ஈசனின் இடப்பாகமும் கிடைத்தது. இதையடுத்து அன்னை கயிலாயம் சென்றடைந்தார்.

    இமயமலையிலிருந்து திருவண்ணாமலையில் இறைவனுடன் சேரும் இடம் வரை, ஈசனை அன்னை தரிசித்த இடங்களில் எல்லாம் அவருக்கு கோவில்கள் எழுப்பப்பட்டன. அன்னை தவம் இயற்றிய இடங்களில் ஒன்றான காஞ்சீபுரம் பாலாற்றங்கரையில் உள்ள இடத்தில்தான் அன்னைக்கு ஞானம் கிடைத்தது. இதனால் அந்த இடம் ஞானகிரி என்றும் பெயர் பெற்றது. அந்த இடத்தில் அன்னை தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று தேவர்கள் அனைவரும் விரும்பினர். அதற்கு அன்னையும் ஒப்புக்கொள்ள, அன்னைக்கு அங்கு பச்சையம்மன் என்ற பெயரில் கோவில் எழுப்பப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

    ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த இந்த ஆலயம், தற்போது மலையின் பின்புலத்தில் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. பச்சையம்மன் சமேத மன்னாதீஸ்வரர் ஆலயம் என்று இந்தக் கோவில் அழைக்கப்படுகிறது. ‘மன்னுதல்’ என்றால் நிலைபெற்று இருத்தல் என்று பொருள். இந்த உலகில் நிலைபெற்று இருக்கும் கடவுள் என்னும் பொருளில் இத்தல இறைவனுக்கு மன்னாதீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.

    கோவிலின் நுழைவிடத்தில் வேங்கைப்புலி உருவம் உள்ளது. ஆலய முன்புறத்தில் வடக்கு நோக்கியவாறு பெரிய வாழ்முனி மட்டும் அமைந்துள்ளது. மற்ற முனிவர்கள் இல்லை. கருவறையில் பார்வதி என்று அழைக்கப்படும் பச்சையம்மன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். அதே கருவறையில் விநாயகர், காத்தாயி, வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகியோரும் எழுந்தருளி இருக்கின்றனர். கருவறையில் அம்பிகையின் பெரிய சுதைச் சிற்பம் உள்ளது.

    வெளி மண்டபத்தில் ஒரே கருவறையில் மன்னாதீஸ்வரரும், பச்சையம்மனும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இருவரும் ஒரே கருவறையில் இருப்பதால், அதற்கு முன்பாக சிம்மமும், நந்தியும் ஒரு சேர அமைந்துள்ளன.

    செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஆலயத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை ஏராளம். தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 11 மணி வரையும் தரிசனத்திற்கென திறந்து வைக்கப்படுகிறது. விழாக்காலங்களில் தரிசன நேரம் அதிகரிக்கப்படுகிறது. பச்சையம்மன் தவம் செய்த இடமாதலால், இங்கு அம்பாளுக்குத் திருமணம் கிடையாது. மாறாக, செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்குத்தான் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

    செங்கல்பட்டு பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், ரெயில் நிலயத்திலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது. செங்கல்பட்டு பைபாஸ் சாலையில் காஞ்சீபுரம் செல்லும் வழியில் பாலத்தின் கீழ் இறங்கி சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.
    Next Story
    ×