search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு - கேது தோஷத்திற்கு சிறந்த பரிகார தலம் திருப்பாம்புரம்
    X

    ராகு - கேது தோஷத்திற்கு சிறந்த பரிகார தலம் திருப்பாம்புரம்

    ராகு-கேதுவுக்கு தனிச் சன்னிதி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருவாரூரில் அமைந்துள்ள திருப்பாம்புரம் திருத்தலம்.
    பாம்புகள் அனைத்தும் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற பூமி, ராகு-கேதுவுக்கு தனிச் சன்னிதி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பாம்புரம் திருத்தலம்.

    புராண வரலாறு :

    கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமானை, விநாயகர் வழிபட்டார். அப்போது சிவனின் கழுத்தில் இருந்த நாகம், விநாயகர் தன்னையும் வழிபடுவதாக எண்ணி கர்வம் கொண்டது. இதையறிந்த ஈசன், நாகங்கள் தங்களின் சக்தியை இழக்கச் சாபமிட்டார். ஒரு நாகத்தின் கர்வத்தால் நாக வம்சம் அனைத்துமே சாபத்தில் சிக்கித் தவித்தது. அவை அனைத்தும் சாப விமோசனம் வேண்டி பல்வேறு தலங்களைத் தரிசித்ததும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் திருப்பாம்புரம் தலம் வந்து, அங்கிருந்த ஈசனை வழிபட்டு தங்களின் சக்தியை மீண்டும் பெற்றன.

    இதே போல, உலகைத் தாங்கிய சுமை பொறுக்காமல் உடல் நலிவுற்ற ஆதிசேஷன், இத்தலத்து இறைவனைச் சரணடைந்தார். ஈசனின் வழிகாட்டுதலின்படி, மகாசிவராத்திரியன்று கும்பகோணம், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், நாகூர் என நான்கு தலங்களையும், நான்கு காலங்களில் வழிபட்டுப் பேறு பெற்றது ஆதிசேஷன் என்கிறது தல புராணம்.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய ஆலயம். மூன்று நிலை ராஜகோபுரங்களைக் கொண்டுள்ளது. எதிரே ஆதிசேஷன் தீர்த்தம் இருக்கிறது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியம் பெருமான் காட்சி தருகின்றார். இதனையடுத்து நேரே இறைவன் திருப்பாம்புரநாதர் சன்னிதி உள்ளது. கருவறை விமானத்தில் சட்டைநாதர் வீற்றிருக்கிறார்.

    தென் பிராகாரத்தில் மலையீசர் சன்னிதி தனிக் கோவிலாக அமைந்துள்ளது. சிறிய மலை போன்ற அமைப்புடைய இதில் ஏறப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மீதேறி நின்றால் மலையீசரையும் வணங்கலாம். இறைவன் கருவறை விமானத்தையும் கண்டு மகிழலாம். கருவறையைச் சுற்றி அகழி போன்ற அமைப்பு காணப்படுகிறது. அகழியை மூடி, மூன்று புறங்களிலும் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்கே கன்னி மூலையில் ராஜராஜ விநாயகர் சன்னிதியும், அருகே வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதியும் அமைந்துள்ளன. இதன் அருகே தல விருட்சமான வன்னி மரம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. இதன் அடியில் வன்னியீஸ்வரர் அமர்ந்துள்ளார்.

    திருப்பாம்புரநாதர் :

    கிழக்கு நோக்கிய இறைவன் லிங்க வடிவில் ராஜகோபுரத்தை நோக்கியவாறு காட்சி தருகின்றார். உற்சவ மூர்த்தியான ஆதிசேஷன் இறைவனைத் தொழுத வண்ணம் அமைந்துள்ளார். வடக்கில் அன்னை வண்டுசேர் குழலி சன்னிதி கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஒரு கையில் தாமரை, மறு கையில் ருத்திராட்ச மாலை கொண்டு வரத, அபய முத்திரையுடன் அருள் வழங்குகின்றாள்.

    உற்சவமூர்த்திகள்:

    இறைவன் சன்னிதியில் மகாமண்டபத்தில் விநாயகர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள், நடராஜர், சோமாஸ்கந்தர், முருகப்பெருமான் என அனைத்தும் கலைநயத்துடன் அமைந்துள்ளன. இதில் முருகப்பெருமான் சிலை வள்ளி தெய்வயானையோடு கையில் வஜ்ராயுதம் தாங்கி, இடது காலால் மயிலை மிதித்தபடி காட்சி தருவது ரசிக்கும்படி உள்ளது.

    ராகு- கேது சன்னிதி :

    ராகுவும், சேதுவும் ஒரே உடலெடுத்து ஈசனை நெஞ்சில் நிறுத்தி வணங்கி பேறு பெற்ற தலம் இது. ராகு காலங்களில் இங்குதான் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. ஜாதகத்தில் கால சர்ப தோஷம், களத்திர தோஷம், திருமணத்தடை, புத்திரதோஷம் என ராகு- கேதுவின் கடுமையான தோஷங்கள் எதுவாக இருந்தாலும், இத்தலம் வந்து பரிகார பூஜையை மேற்கொண்டால், அனைத்தும் விலகி நன்மை பெறலாம்.

    விழாக்கள்:

    சிவாலய விழாக்கள் அனைத்தும் நடைபெற்றாலும், மகாசிவராத்திரி மிகவும் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. அதிலும் ஆதிசேஷன் வணங்கிய மூன்றாம் காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதிசேஷன் உற்சவராக புறப்பட்டு இறைவன் திருமுன் வந்தபின்பு, அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். மாசி மாதத்தில்,பஞ்சமூர்த்தி அபிஷேகம் சிறப்புடன் நடத்தப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    ராகு கேது தோஷம் உள்ளவர்கள் பலன்பெற, நம்பிக்கையோடு வந்து செல்ல வேண்டிய தலம் திருப்பாம்புரம் என்றால் அது மிகையல்ல.

    அமைவிடம் :

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் திருப்பாம்புரம் அமைந்துள்ளது. கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழித் தடத்தில், கற்கத்தி என்ற ஊரின் தெற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து 25 கிலோமீட்டர், பேரளத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. ரெயில் வழியில் வர விரும்புவோர் மயிலாடுதுறை - திருவாரூர் வழித்தடத்தில் பேரளம் ரெயில் நிலையம் இறங்கி, பேருந்து மூலம் எளிதில் வரலாம்.
    Next Story
    ×