search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோடி நன்மை அருளும் கோதண்டராமர் திருக்கோவில்
    X

    கோடி நன்மை அருளும் கோதண்டராமர் திருக்கோவில்

    கோதண்டராமர் நின்றக் கோலம், கிடந்த கோலம், அமர்ந்த கோலம் ஆகிய மூன்று கோலங்களிலும் அருளும் பெருமாளை தரிசிப்பது தெய்வீக பலனை அளிக்கக் கூடியதாகும்.
    சென்னை மாம்பலம் ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ½ கிலோமீட்டர் தொலைவிலும், மேட்லி ரோடு சுரங்கப் பாதைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற கோதண்டராமர் திருக்கோவில்.

    கோதண்டராமர் கோவில் :

    இத்திருத்தலம் பத்ராசலம் ராமதாசர் வம்சாவழியில் வந்த, ஆதிநாராயண தாசரால் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. சிறிய அளவில் அமைந்திருந்த இந்த ஆலயத்தை வங்காலய குப்பைய செட்டியார் என்பவர் 1926-ம் ஆண்டு பெரிய அளவில் கட்டி, கோதண்டராமரை பிரதிஷ்டை செய்தார்.

    ஸ்ரீமாபில ஷேத்திரம், தட்சிண பத்ராசலம் என்ற திருநாமங்களால், இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இந்தத் திருக்கோவிலில் மூன்று நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கிறார். நின்றக் கோலம், கிடந்த கோலம், அமர்ந்த கோலம் ஆகியவை அந்த மூன்று கோலங்களிலும் அருளும் பெருமாளை தரிசிப்பது தெய்வீக பலனை அளிக்கக் கூடியதாகும்.

    இந்த ஆலயத்திற்கு இன்னுமொரு சிறப்பும் உள்ளது. அது யாதெனில், இந்த ஆலயத்திற்கான கும்பாபிஷேகம் நடைபெற்ற போது, திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள் எழுந்தருளி மங்களாசாசனம் செய்தார் என்று கூறப்படுகிறது. பட்டாபிராமர், தனது இடப்பக்கத்து மடியில் சீதாப்பிராட்டியை வைத்தபடி அருள்பாலிக்கிறார். வலது பக்கத்தில் லட்சுமணன் குடை பிடித்து சேவை செய்ய, சிறிய திருவடி அனுமன் ராமரின் பாதங்களை தாங்கியபடி மெய்மறந்த நிலையில் வீற்றிருக்கும் கோலத்துடன் பெருமாள் அருள்புரிகிறார்.

    கோவிலின் வடகிழக்கு மூலையில் நின்று தரிசனம் செய்தால், பெருமாளின் மூன்று விமானங்களையும் ஒரு சேர தரிசிக்கலாம். கொடி மரம் முன்பாக அமைந்துள்ள விமானத்தில், சுதைச் சிற்பமாக ராமர், சீதாப்பிராட்டி, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரது சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. பட்டாபிராமர் சீதாப்பிராட்டியாரை மடியில் அமர்த்தியவாறு காட்சி தரும் சிற்பம், ரெங்கநாதர் சயனத் திருக்கோலம், யோக நரசிம்மப் பெருமாள் போன்றவர்களை சுதைச் சிற்பமாக விமானத்தில் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இவைத் தவிர அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து செல்லும் காட்சி, பஞ்ச முக ஆஞ்சநேயர் போன்ற சிற்பங்களும் வண்ணமயமாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

    கோவில் பிரகாரம், பக்தர்கள் நெருக்கடி இன்றி வலம் வருவதற்கும், பெருமாளை வழிபடுவதற்கும், பெருமாள், தாயார், ஆழ்வார், மற்றும் ஆசாரியர்கள் உள் புறப்பாடு செய்யும் வகையிலும் விசாலமாக கட்டப்பட்டுள்ளது.

    அனுமன் சன்னிதியைக் கடந்து சென்றால், இடது புறம் தெப்பக்குளம் உள்ளது. அதன் அருகில் தனிச் சன்னிதியில் அரங்கநாயகி தாயார் அமர்ந்து கோலத்தில் காட்சியளிக்கிறார். தாமரை போன்று மலர்ந்த முகத்துடனும், சவுந்தர்யத்துடனும் சாந்த சொரூபினியாகவும், வருவோர் குறைகளை தீர்ப்பவளாகவும் அன்னை அருள்புரிகிறார். தலைமுறை தலைமுறையாக இந்த தாயாரின் அபிமானிகள் இங்கு வந்து தாயாரின் அனுக்கிரகம் பெற்றுச் செல்கின்றனர்.

    தாயார் சன்னிதியை விட்டு வெளியே வருகையில், நம் கண்ணில் கருவறை மண்டபம் தென்படுகிறது. இந்த கருவறையில் நின்ற கோலத்துடன் கோதண்டராமர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். வலது பக்கம் சீதாப்பிராட்டியும், இடது பக்கம் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருகணனும் உள்ளனர்.

    கோதண்டராமருக்கு முன்பாக உள்ள மற்றொரு கருவறையில், பட்டாபிராமர் இடப்பக்கம் மடியில் சீதாப்பிராட்டியாரை வைத்தபடி அமர்ந்திருக்க, வலது புறம் லட்சுமணன் குடை பிடிக்க, சிறிய திருவடி அம்சமான அனுமன் ராமரின் பாதங்களைத் தாங்கியபடி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். கோதண்டராமர் சன்னிதிக்கு வலப்புறமாக அமைந்துள்ளது ரெங்கநாதப் பெருமாள் சன்னிதி. இந்த சன்னிதியில் ரெங்கநாதர் பாம்பணையில் பள்ளி கொண்டபடி சயன கோலத்தில் உள்ளார். அவரது திருவடியின் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருவரும் வீற்றிருந்து சேவை சாதிக்கின்றனர். பிருகு மகரிஷி சயன கோல பெருமாளை வணங்கியபடி உள்ளார்.

    கோதண்டராமர் சன்னிதிக்கு இடப்புறமாக யோக நரசிம்மப் பெருமாள் சன்னிதி இருக்கிறது. நரசிம்மப் பெருமாள் யோகப்பட்டத்துடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றார். கருவறை மண்டபத்திலிருந்து வெளியே வருகையில் பிரகாரத்தின் இடப்புறத்தில் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகின்றார். பெண்கள் திருமணம் நடைபெறவும், வாழ்வில் ஏற்றம் பெறவும் ஆண்டாளை பிரார்த்தித்து பயனடைகின்றனர்.

    இது தவிர விஷ்வக்சேனர், சேனை முதலியார், கருடாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், உடையவர் மற்றும் மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு தனித்தனிச் சன்னிதிகள் உள்ளது. ஆலயத்தின் தல விருட்சமாக அரச மரம் உள்ளது. இந்தக் கோவிலின் விமானம் அஷ்டாங்க விமானம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தக் குளம் அனுமன் தீர்த்தம் என்றும், திருமடப்பள்ளி அருகில் உள்ள கிணறு, லட்சுமி தீர்த்தம் என்று பெயர் பெற்றுள்ளது.

    திருவிழாக்கள் :

    சித்திரை மாதம் 10 நாட்கள் பிரமோற்சவம், 10 நாட்கள் உடையவர் உற்சவம், வைகாசி மாதம் வசந்த உற்சவம், தோட்ட உற்சவம், நம்மாழ்வார் சாற்றுமறை, ஆனி மாதம் யோக நரசிம்மர் கருட சேவை, ராமர் ஜேஷ்டாபிஷேகம், ஆடி மாதம் கஜேந்திர மோட்சம், ரெங்கநாதர் கருட சேவை, ஆடிப்பூரம், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி, புன்னைமர வாகன உற்சவம், குடமுழுக்கு தினம், மூலவர் புஷ்பாங்கி சேவை, புரட்டாசி மாதம் திருபவித்திர உற்சவம், நவராத்திரி உற்சவம்,

    ஐப்பசி மாதம் 10 நாட்கள் மணவாள மாமுனிகள் சாற்றுமறை, சேனை முதலியார் சாற்றுமறை, கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை, திருமங்கை ஆழ்வார் சாற்றுமறை, மார்கழி மாதம் திருப்பாவை உற்சவம், வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் திறப்பு, அனுமன் ஜெயந்தி, போகி, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், தை மாதம் 5 நாட்கள் தெப்ப உற்சவம், தை அமாவாசையன்று லட்ச தீபம், மாசி மகம், ராமர் கருட சேவை, குலசேகர ஆழ்வார் சாற்றுமறை, பங்குனி மாதம் ராமநவமி, பங்குனி உத்திரம், தாயார் திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட பல விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.

    காலை சந்தி, சாயரட்சை என இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கிறது.  

    முன்னேற்றம் தரும் ஆஞ்சநேயர் :

    கோவிலின் நுழைவு வாசலைக் கடந்து செல்லும்போது, சஞ்சீவி பர்வத ஆஞ்சநேயர் சன்னிதியை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த சன்னிதியானது, கோதண்டராமர் சன்னிதியை நோக்கிய திசையில் அமைந்திருக்கிறது.

    வலது திருக்கரத்தில் சஞ்சீவி மலையையும், இடது கையில் அபய முத்திரை காட்டியபடியும் ஆஞ்சநேயர் காட்சியளிக்கின்றார். இவர் வடக்குப் புறமாக குபேர மூலையை நோக்கி பார்த்த வண்ணம் காட்சி தருவது ஒரு விசேஷமானதாகும்.

    சங்கடங்கள், பயம் நீங்கவும், இழந்த செல்வத்தை பெறவும், வாழ்வில் முன்னேற்றம் அடையவும், எதிரிகள் தொல்லை விலகவும் பக்தர்கள் இந்த ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்து பலனடைவதாகக் கூறுகின்றனர்.
    Next Story
    ×