search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோபம் குறைக்கும் நெல்லிவனநாதர் திருத்தலம்
    X

    கோபம் குறைக்கும் நெல்லிவனநாதர் திருத்தலம்

    நெல்லி மரத்தை தல விருட்சமாக கொண்டு விளங்கும் ஆலயம் உள்ள திருத்தலம் தான் திருநெல்லிக்கா ஆகும். இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவன் நெல்லி வனநாதர் என்பதாகும்.
    கோபம் என்பது நோயல்ல என்றாலும், அது பிணியை விடக் கொடியது. நோய் வந்தால், அதனால் பீடிக்கப்பட்டவன் மட்டுமே பாதிக்கப்படுகிறான். ஆனால் கோபமானது, கொண்டவனை மட்டுமல்லாது அவனைச் சேர்ந்தவர்களையும் சாகடித்துவிடும்.

    இதைத்தான், ‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்றும், ‘தன்னையே கொல்லும் சினம்’ என்றும் பத்துக் குறள்களை வெகுளாமை என்ற அதிகாரத்தின் கீழ் வழங்கி, மனிதர்களை கோபம் கொள்ளாதீர்கள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

    சினம் என்னும் கோபம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு; ஒரு மனிதன் கொந்தளித்துக் கோபம் கொள்ளும் போது, அவனது உடலின் இயக்கு நீர்களின் சுரப்பு மாறுபடுகிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் மூளையில் குருதிக் கசிவு, இதய தாக்கம் போன்ற உடல் இயக்கக் கோளாறுகளையும், மன நிலையில் மாறுபாடுகளையும் ஏற்படுத்தி, அவனைக் கொன்றுவிடும் குணமுடையது.

    எனவே கோபத்தை விட வேண்டும். உடனே விடமுடியவில்லை எனினும், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் இன்று யோகா, தியானப் பயிற்சிகள் வாயிலாக கோபத்தைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறார்கள்.

    நெல்லியின் மகிமை :

    முரட்டுக் குணம், முன்கோபம் போன்றவை இருப்பின் அதனைப் பரணிதோஷம் என்பார்கள். நெல்லி மரம் பரணி நட்சத்திரத்தின் நல்ல மின்காந்த கதிர் வீச்சுகளை உள்வாங்கி சேமித்து வைத்து, குளிர்ச்சியைத் தரும். நெல்லி இலையும், காயும் குளிர்ச்சிப் பொருள் என்பதால், அதனை அரைத்து தலைக்கு தேய்த்துக் கொண்டால் கண்களும், உடலும் குளுமை பெறும்.

    அரிதான நெல்லிக்கனியை அவ்வைக்கு அதியமான் கொடுத்தான் என்றால், தமிழ் வளர்த்த அந்த மூதாட்டியின் ஆயுளை நீட்டிக்கும் அரிய பொருள் அது என்பது புலனாகிறதல்லவா?

    இத்தகைய நற்குணங்கள் கொண்ட நெல்லி மரத்தோடு தொடர்பு கொண்டால், நம் உடல் சூடு தணிந்து கோபம் குறையுமல்லவா?

    நெல்லிவனநாதர் :

    இந்த நெல்லி மரத்தை தல விருட்சமாக கொண்டு விளங்கும் ஆலயம் உள்ள திருத்தலம் தான் திருநெல்லிக்கா ஆகும். இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவனின் நாமம் நெல்லி வனநாதர் என்பதாகும். வடமொழியில் ஆம்லவனநாதர் (ஆம்லா என்றால் நெல்லி) என்று வழங்கப்படுகிறார். திருவானைக்கா, திருக்கோலக்கா, திருக்கோடிக்கா, திருக்குரங்குக்கா போல, இத்தலமான திரு நெல்லிக்காவும் சிறப்பு பெற்றது.

    மேற்கு நோக்கி எழுந்து நிற்கும் ஐந்துநிலை ராஜகோபுரத்தின் முன்பே, வெளியில் கொடிமரமும், நந்தி மண்டபமும் இருப்பது வித்தியாசமான அமைப்பாக உள்ளது. உள்ளே சுயம்பு மூர்த்தியான மூலவர் நெல்லிவனநாதரும், மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்.

    ஆண்டுதோறும் மாசி மாதம் 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை, ஏழு நாட்கள், மாலை 5 மணி அளவில் சிவலிங்கத்தை, சூரியக் கதிர் தழுவிச் செல்லும் காட்சியைக் காணலாம். இது பக்தர்களை பரவசம் கொள்ளச் செய்யும் நிகழ்வு மட்டுமின்றி, சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் வானவியல் அறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ் கிறது. தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பிகை மங்களேஸ்வரி என்ற பெயரில் அருள்புரிகிறாள். இந்த அம்மனுக்கு ஒரு வரலாறு உண்டு.

    திருவாரூரை ஆண்டு வந்த உத்தம சோழனும், அவனுடைய மனைவியும் சிறந்த சிவ பக்தர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு நெடுங்காலமாக குழந்தைப் பாக்கியம் இல்லை. இதனால் அவர்கள் இருவரும் திருவாரூர் சிவபெருமானை உருகி வேண்டினர். அப்போது மன்னன் மடியில் மூன்று வயதுச் சிறுமி வந்து அமர்ந்தாள். ‘உமக்கு மங்களம் வழங்க, பராசக்தியே மகளாக வந்துள்ளாள். அவளுக்கு ‘மங்கள நாயகி’ என்று பெயரிட்டு அழைத்து வா’ என்று ஒரு அசரீரி ஒலித்தது.

    மன்னன் மகளாக மாறிய மங்கள நாயகி வளர்ந்து பெரியவள் ஆனாள். அப்போது ஆரூர் ஆலயத்தில் மங்கள நாயகி வழிபட்டுக் கொண்டிருந்தபோது, ‘ஆவணி முதல் வெள்ளிக்கிழமையன்று திருநெல்லிக்காவில் உம்மை மணமுடிப்போம்’ என்ற வாக்கு, ஈசனின் கருவறையில் இருந்து ஒலித்தது. அதன்படியே திருநெல்லிக்காவில் தெய்வத் திருமணம் நடைபெற்றது.

    எனவே இந்தத் திருத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால், திருமணத் தடை உள்ளவர்களுக்கு தடை நீக்கும், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை, விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன், சனீஸ்வரர் ஆகியோர் வழிபட்டு சாப-விமோசனம் பெற்றுள்ளனர். இத்தலத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சக்கர தீர்த்தம், நிவாரண தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் போன்றவை உள்ளன. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நெல்லிவனநாதரை வழிபாடு செய்த திவ்யரூபன் என்ற கந்தர்வன், தனது குஷ்ட நோய் நீங்கப்பெற்றான் என்பது தலவரலாறு கூறும் செய்தி.

    தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 181-வது தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.

    ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் தல விருட்சமான நெல்லி மரமும், அதன் அருகே சிறிய கோவிலில் சிவலிங்கமும் இருப்பது ஆலயத்தின் சிறப்பை உயர்த்துவதாக உள்ளது.

    கோபம் குறைந்த துர்வாசர் :


    முனிவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் யுக்திகளை அறிந்தவர்கள். பிறருக்கும் உபதேசித்தவர்கள். அவர் களில் ஒருவரான துர்வாச முனிவருக்கு, எதற்கெடுத்தாலும் கோபம் பொங்கி வந்து விடும். உடனடியாக சாபம் கொடுத்து விடுவார் என்பது புராணக் கதைகளில் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது.

    அப்படிப்பட்ட துர்வாச முனிவர், இந்த தலத்தில் கோபம் குறைந்து சாந்தமானார் என்று தல வரலாறு கூறுகிறது.

    இந்த ஆலயத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி, நெல்லிவனநாதரின் பாதத்தில் எல்லா பாரங்களையும் இறக்கி வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர் தல விருட்சமான நெல்லி மரத்தை சுற்றி வந்து அதன் அடியில் அமர்ந்து சற்று நேரம் கண்களை மூடி தியானிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கோபம் குறைந்து உள்ளம் சாந்தமாகும் என்று கூறுகிறார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :


    திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், மன்னார்குடியில் இருந்து கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருநெல்லிக்கா திருத்தலம்.
    Next Story
    ×