search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துயரங்களை களையும் மணலிபுதுநகர் அய்யா வைகுண்டர் கோவில்
    X

    துயரங்களை களையும் மணலிபுதுநகர் அய்யா வைகுண்டர் கோவில்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமை பதியான சாமிதோப்பு வைகுண்டபதியை அடுத்ததாக, வெகு விமரிசையாக திருவிழா நடத்தப்படுவது சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்டர் தர்மபதியும் ஒன்று.
    கலியுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச் செய்யும் நோக்கில் இறைவன் மறு அவதாரம் எடுத்து வந்தார் என்பது அய்யா வழியின் வரலாறு. உருவ வழிபாடு இல்லாத கண்ணாடி தத்துவம், இறைவன் ஒருவனே, மனிதர்கள் அனைவரும் சம உரிமையுடன் இருக்க வேண்டும் போன்ற உன்னத கோட்பாடுகளைக் கொண்டது அய்யா வழி.

    மனிதர்களின் மனதில் புகுந்து கெட்டச் செயல்களைச் செய்யத் தூண்டும் ‘கலி’ என்னும் உருவம் இல்லாத அரக்கனை அழிப்பதற்காகவே, இறைவன் மனித அவதாரம் எடுத்து வந்தார். தர்மத்தின் வழி நடப்பதையும், தர்மம் செய்வதையும், பிறரிடம் அன்பாக இருப்பதையும் வலியுறுத்தியவர் அய்யா வைகுண்டர். அவ்வாறு தர்மத்தின் வழி செல்வதால், மாயையான கலியை அழிக்க முடியும் என்று அவர் நம்பினார். அந்த நம்பிக்கையை தன்னைச் சார்ந்திருந்த மக்களுக்கு வலியுறுத்தினார். அவரே ‘அய்யா வைகுண்டர்’ என்று அகிலத்திரட்டு புராண வரலாறு தெரிவிக்கிறது.

    குறோணி அசுரன் :

    நீடிய யுகத்தில் குறோணி என்ற அசுரன் தோன்றினான். உலகையே விழுங்கி விடும் அளவுக்கு பெரிய தோற்றத்தில் இருந்தான். அவனது பசிக்கு இந்த உலகம் இரையாகி விடாமல் தடுப்பதற்காக ஈசனும், திருமாலும் சேர்ந்து அந்த அசுரனை ஆறு துண்டுகளாக்கினர். இந்த ஆறு துண்டுகளும் யுகம் தோறும் ஒவ்வொரு அரக்கனாக மாறி தேவர்களையும், முனிவர்களையும், உலக உயிர்களையும் துன்பத்தில் ஆழ்த்தி வந்தன. நீடிய யுகம், சதுர் யுகம், நெடிய யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகிய ஆறு யுகங்களிலும் தோன்றிய அரக்கர்களை நாராயணமூர்த்தி பல அவதாரங்கள் எடுத்து அழித்தார். தற்போது நடந்து கொண்டிருப்பது கலி யுகம்.

    ஆசைகளால் அழிவு :

    இந்தக் கலியுகத்தில் அசுரன் உருவம் இல்லாதவனாக, ‘கலியனாக’ பிறப்பெடுத்தான். அவன் மக்களின் மனதிற்குள் புகுந்து, அவர்களிடம் தேவையில்லாத ஆசைகளையும், அடிமைப்படுத்தும் எண்ணத்தையும் விதைத்து பிரிவினையை உண்டாக்கி, அதன் மூலம் உலகை அழிக்க முடிவு செய்தான். உருவ வடிவம் இல்லாமல் தோன்றியதால், இந்த யுகத்தில் கலியனை நேரடியாக நின்று இறைவனால் அழிக்க முடியவில்லை. இதையே ‘முன்னின்று கொல்ல மூவராலும் அரிது’ என்கிறது அகிலத் திரட்டு.

    அதனால் கலியுகத்தில், அய்யா வைகுண்டராக மனித அவதாரம் எடுத்தார் இறைவன். தவ முனியைப் போல் வாழ்ந்து, மக்களிடம் பல போதனைகளை எடுத்துரைத்தார். ‘அன்பு, பொறுமை, தர்மம் இவற்றை ஆயுதமாக மக்களுக்கு கொடுத்து அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, தர்மம் செய்பவர்களாக, சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக மாற்றுவதன் மூலம், கலி தன்னாலேயே அழிந்துபோகும். தர்மயுகம் பிறக்கும்’ என்று அய்யா வைகுண்டர் நம்பினார்.

    கடலில் தோன்றினார் :

    இதற்காகவே கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல், வைகுண்டர் திருச்செந்தூர் பதியில் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமி தோப்பை அடைந்த அவர், அங்கு ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும், மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. முதல் இரண்டு வருடங்கள் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் தரையில் இருந்து மேலெழுந்த நிலையிலும் தவம் இருந்தார். அவர் தவம் செய்த இடம் சுவாமிதோப்பில் உள்ள ‘வடக்கு வாசல்’ ஆகும்.



    அய்யா வைகுண்டர் அடிமைத்தனத்தில் இருந்து சான்றோர் மக்களை விடுவிக்க போராடினார். அவர்களுக்கு பல போதனைகளை வழங்கினார். இதைப்பொறுக்க முடியாத சிலர், அய்யா வைகுண்டருக்கு விஷம் கொடுப்பது, சுண்ணாம்புக் களவாயில் வைத்து நீற்றுவது, புலிக்கூண்டில் அடைப்பது என்று பல்வேறு துன்பங்களைக் கொடுத்தனர். இவையாவும் இறைவடிவான வைகுண்டரை எதுவும் செய்ய முடியவில்லை. இப்போதும் கலியை அழிக்க மக்களின் மனதில் நிலைத்து நின்று அரசாட்சி செய்து வருகிறார்.

    மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, திருவிழாக்கள் நடத்தி மகிழ்ந்திருந்தால், மனதைக் கலைக்கும் கலி மாய்ந்து போகும் என்ற வைகுண்டரின் வார்த்தைகளை நிறைவேற்றும் வகையிலேயே அய்யா வைகுண்ட பதிகள் அனைத்திலும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

    இவற்றில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமை பதியான சாமிதோப்பு வைகுண்டபதியை அடுத்ததாக, வெகு விமரிசையாக திருவிழா நடத்தப்படுவது சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்டர் தர்மபதியும் ஒன்று. அய்யா வைகுண்டர் தொட்டில் வாகனத்தில் பதி வலம் வருவது சாமி தோப்பு பதியைத் தொடர்ந்து இந்த பதியில் மட்டுமே நடைபெறும் தினசரி நிகழ்வாகும்.

    மற்ற அய்யா வைகுண்டர் பதிக்கு இல்லாத மேலும் ஒரு சிறப்பு மணலிபுதுநகர் பதிக்கு உண்டு. அது அய்யா வழி பதிகளிலேயே முதன் முதலில் ராஜகோபுரம் கட்டப்பட்டது இங்குதான். அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 யுகங்களை குறிக்கும் விதமாக, 7 நிலைகளுடன் இந்த ஆலய ராஜ கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் தர்மம் செய்வதை முன்னுறுத்திய அய்யா வைகுண்டரின் வாக்கை நிறைவேற்றும் வகையில், இங்கு தினமும் அன்னதானம் செய்யப்படுகிறது.

    திருவிழா :

    மணலி புதுநகர் தர்மபதியில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்த் திருவிழா நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு திருத்தேரில் அய்யா வீதி வலம் வருவார். அய்யா வைகுண்டர்பதி அமைந்த இடங்களிலேயே, மிகப்பெரிய தேர் இருக்கும் இடம் என்ற சிறப்பையும் மணலி புதுநகர் தர்மபதி பெற்றுள்ளது. 36 டன் எடையுடன், 36 அடி உயரம் கொண்டது இந்தத் தேர்.

    தேர்த் திருவிழாவை தொடர்ந்து அன்று இரவு 10.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும், பின் இரவு 1.45 மணிக்கு பூப்பல்லக்கு வாகனத்தில் அய்யா பதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    தலைப்பாகை ரகசியம் :

    அய்யா வைகுண்டரை வழிபடுபவர்கள் தலைப்பாகை அணியும் வழக்கம் உள்ளவர்கள். இதற்கு காரணம், மன்னர்கள் ஆட்சி காலத்தில் உயர் சாதியினர் எதிரில் வந்தால், மற்ற சாதியை சேர்ந்த ஆண்கள் துண்டை இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும் அல்லது கை இடுக்கில் வைத்து குனிந்து நிற்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. கலி அடிமைத் தனத்தை உடைத்தெறியும் பொருட்டு, சாதி, பேதமின்றி எல்லோரும் இந்த நாட்டு மன்னர்கள் என்ற அடிப்படையில் தனது பக்தர்கள் தலையில் துண்டை தலைப்பாகையாகக் கட்ட வைத்தார் அய்யா வைகுண்டர். ‘என் முன்பு கூட நீ தலைப்பாகையோடு தான் நின்று பேச வேண்டும்’ என்று அய்யா சொன்னதும் இங்கே நினைவு கூரத்தக்கது.

    தாமரையும்.. ஜோதியும்..

    அய்யா வழியின் சமயச் சின்னமானது, சுடரை தாங்கும் தாமரையாகும். இந்தத் தாமரையானது 1000 இதழ்களைக் கொண்டதாகும். மனிதனின் நெற்றி மையத்தில் தலை, மூளை நரம்புகளின் சங்கமம் இருப்பதாக அறிவியல் கூறுகிறது. இவற்றின் எண்ணிக்கையும் ஆயிரத்தைக் கொண்டதுதான். ஒருவரை எளிதாக மெஸ்பரிசம் செய்யக் கூடிய இடம் நெற்றிதான். மெஸ்பரிசம் போன்ற செயல்களை தடுக்கவே அய்யா வழியில், நெற்றில் திருநாமம் இடுவதாக கூறப்படுகிறது.

    அதே போல் தாமரை மீது உள்ள சுடர், மனிதனின் ஆன்ம ஜோதியாகி பரம்பொருளைக் குறிக்கும். தீச்சுடரானது கீழ்நோக்கி பிடித்தாலும், மேல்நோக்கியே எரியும் தன்மை கொண்டது. அதே போல எப்போதும் மேல் நோக்கிய நிலையிலேயே மக்கள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே தாமரையின் மீதான சுடர் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர தாமரையின் மீதுள்ள நாமம், ஒன்று என்ற எண்ணைப் போல் காட்சியளிக்கும். இதற்கு எப்போதும் முதன்மையானவனாக இருக்க வேண்டும் என்பது பொருளாகும்.

    சென்னை அடுத்த திருவொற்றியூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மணலிபுதுநகர். சென்னை உயர்நீதிமன்றம் பஸ் நிலையத்தில் இருந்து மணலி புதுநகருக்கு நேரடியாக பஸ் வசதி உள்ளது.

    Next Story
    ×