search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூவாய்நாதர் திருக்கோவில் - திருவாரூர்
    X

    தூவாய்நாதர் திருக்கோவில் - திருவாரூர்

    தூவாய்நாதர் திருக்கோவில் ‘பிறந்தாலே முக்தி கிடைக்கும் தலம்’ என்ற பெருமைக்குரியது.
    மனுநீதிச் சோழனின் மகன் வீதிவிடங்கன். இவன் ஒரு நாள் தேரோட்டி சென்றபோது, வழியில் நின்ற கன்றின் மீது தேரை ஏற்றிக் கொன்று விட்டான். கன்றை இழந்த தாய்ப் பசு, மனுநீதிச் சோழனின் அரசாட்சியில் நீதி கேட்பவர்களுக்காக கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை அடித்தது.

    இதையடுத்து நடந்த விசாரணையில் இளவரசன் வீதிவிடங்கன், கன்றைத் தேர் ஏற்றிக் கொன்றது தெரியவந்தது. கன்றைப் போலவே, தனது மகனையும் தேர் சக்கரத்தில் வைத்து கொன்றான் மன்னன். அந்த நீதி வழுவாத அரசனுக்கு, இறைவன் காட்சி கொடுத்து, இறந்த கன்றையும், இளவரசனையும் மீட்டுக் கொடுத்தார். இந்த அதிசயம் நடந்த இடம் திருவாரூர். இது ‘பிறந்தாலே முக்தி கிடைக்கும் தலம்’ என்ற பெருமைக்குரியது.

    பஞ்சபூதத் தலங்களில் நிலத்திற்கான திருத்தலமாக கருதப்படும் தியாகராஜ பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. இந்தத் திருவாரூரில் உள்ள தூவாய்நாதர் ஆலயம் சிறப்பு வாய்ந்ததாகும். மூவரின் தேவாரப் பாடல் பெற்றத் தலமாக விளங்கினாலும், இந்தத் தலம் சுந்தரருக்கு மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஆலயமாக திகழ்கிறது. ஏனெனில் சுந்தர மூர்த்தி நாயனாரின் வலது கண் பார்வையை மீண்டும் வழங்கிய திருத்தலம் இதுவாகும்.

    தல வரலாறு :

    ஒரு முறை பிரளய காலம் வந்தது. அப்போது கடல் பொங்கி எழுந்தது. இதையடுத்து உலகை காப்பாற்றக் கோரி, தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் துர்வாச முனிவரிடம், தற்போதைய தூவாய்நாதர் திருக்கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைத்து வழிபட்டால், கடல் அமைதி அடையும். உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறினார். அதன்படி துர்வாச முனிவரின் தலைமையில், மற்ற முனிவர்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி குளம் அமைத்து ஈசனை வழிபட்டு வந்தனர்.

    முனிவர்கள் செய்த பூஜையில் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், பொங்கி வந்த கடலை, அக்னி மூலையில் முனிவர்கள் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்துக் கொண்டார். துர்வாச முனிவர் பூஜித்து வழிபட்டவர் என்பதால், இத்தல இறைவன் ‘துர்வாச நாதர்’ என்ற பெயரையும் பெற்று சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.

    கண்பார்வை பெற்ற சுந்தரர் :

    இந்த ஆலயம் சுந்தரர் பெருமானுக்கு கண்பார்வையை பெற்றுக்கொடுத்த திருத்தலம் என்ற சிறப்புடன் திகழ் கிறது. சுந்தரமூர்த்தி நாயனார், முன்பிறவியின் பயனாக சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்டு திருவொற்றியூரில் வசித்து வந்தார். அப்போது அவர் சங்கிலி நாச்சியாரிடம், ‘உன்னை விட்டு பிரியமாட்டேன்’ என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தார். ஆனால் சில காலம் கழித்ததும், திருவாரூரில் இருக்கும் தனது முதல் மனைவியான பரவையாரைப் பார்க்கும் ஆவல் சுந்தரருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் அங்கிருந்து திருவாரூர் நோக்கிப் புறப்பட்டார். செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால், சுந்தரரின் கண்பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர், அடியார்களின் உதவியுடன் ஒவ்வொரு சிவாலய மாகச் சென்று தனக்கு கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று சிவபெருமானை மனமுருக வேண்டினார். அவர் காஞ்சீபுரம் வந்தபோது, காமாட்சி அம்மனின் கருணையால், ஏகாம்பரேஸ்வரநாதர், சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் கிடைக்கும்படி அருளினார்.

    ஒருகண் பார்வை கிடைத்ததும், அங்கிருந்து புறப்பட்ட சுந்தரர், வழியில் இருந்த பல சிவன் கோவில்களில் தரிசனம் செய்து விட்டு, இறுதியாக திருவாரூர் வந்தடைந்தார். பின்னர் இத்தலத்துக்கு வந்து, ‘மீளா அடிமை உமக்கே ஆளாப் பிறரை வேண்டாதே’ என்று தொடங்கி செந்துருத்திப் பண்ணில் அமைந்த 11 பதிகங்களைப் பாடினார். இதில் ‘கண்பார்வையைத் திருப்பித்தா’ என்று அவர் ஈசனிடம் உரிமையுடன் உருகி வேண்டிய பாடல்களுக்கு இது ஓர் உதாரணம்.

    ‘விற்று கொள்ளீர் ஒற்றி அல்லேன்
    விரும்பி ஆட்பட்டேன்
    குற்றம் ஒன்றும் செய்த தில்லை
    கொத்தை ஆக்கினீர்
    எற்றுக் கடிகேள் எண்கண் கொண்டீர்
    நீரே பழிபட்டீர்
    மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
    வாழ்ந்து போதீரே’ என்பது அந்தப் பாடல்.

    சுந்தரரின் வேண்டுதலைக் கேட்ட இறைவன், ‘இத்தலத்தில் உள்ள அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி என்னை வணங்கு. உனக்கு கண்பார்வை கிடைக்கும்’ என்றார். அதன்படியே செய்த சுந்தரருக்கு மற்றொரு கண்ணின் பார்வையும் கிடைத்தது.

    திருவாரூர் தேர் அழகு என்பார்கள். அந்த ஆழித்தேர் நிறுத்தப்பட்டிருக்கும் கிழக்கு ரத வீதியில், சற்று தெற்குப் புறத்தில் கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் உள்ளது தூவாய்நாதர் திருக்கோவில். இந்த ஆலயத்தை ‘பரவையுண் மண்தளி’ என்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.

    ‘தூவாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள்
    காவாயா கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும்
    நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேன்
    காவாஎன் பரவையுண் மண்டளி அம்மானே’ என்று சுந்தரர் பாடும் தூவாய்நாதர்தான் இங்கு மூலவராக வீற்றிருக்கிறார்.

    இந்த ஆலயத்தில் உள்ள அனைத்து விக்கிரகங்களும், விஸ்வகர்மாவால் செய்யப்பட்டது என்கிறது தல புராணம். சனி பகவான் தெற்கு நோக்கியபடி, அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சுந்தரருக்கு இங்கு கண் பார்வை கிடைத்ததன் அடையாளமாக, இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது, அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதைக் காணமுடியும். சிவபெருமானின் சன்னிதியை ஒட்டி தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பாள் திருஉருவம் அமைந்துள்ளது. இந்த அம்மனை சுந்தரர், ‘பஞ்சேரும் மெல்லடி யாளை ஓர் பாகமாய்’ என்று கூறுகிறார். இதற்கு இந்தத் தலத்து அம்பாள், பஞ்சை விடவும் மென்மையான பாதங்களை உடையவள் என்பது பொருள்.

    மூலவரின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பெருமாள், நான்முகன், துர்க்கை ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் தெற்கில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐயப்பன் சன்னிதியும், துர்வாச முனிவர் வழிபட்ட சிவலிங்கமும், கன்னி மூலையில் கணபதியும், வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமானும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். வடக்கில் நந்தவனமும், அதன் அருகே தீர்த்தக் கிணறும் உள்ளன.

    சுவாமியின் மகாமண்டபத்திற்கு முன் உள்ள மண்டபத்தில், கயிலாயநாதரும், அவர் அருகே சுந்தரரும், பரவை நாச்சியாரும், சுந்தரரின் தோழர் சேரமான் பெருமானும் கைகூப்பியபடி நிற்கின்றனர்.

    எதிரே மேற்கு நோக்கிய நிலையில் பைரவர் காட்சியளிக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சர் ஒரு வேளை பூஜை திட்டத்தின் கீழ் வழிபாடு நடைபெறுகின்றது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் பலா மரம், தல விருட்சமாக உள்ளது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

    திருவாரூர் கீழராஜ வீதியில் தூவாய்நாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.

    Next Story
    ×