search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆனந்தம் தரும் கோதண்ட ராமசுவாமி திருக்கோவில்
    X

    ஆனந்தம் தரும் கோதண்ட ராமசுவாமி திருக்கோவில்

    கோயம்புத்தூர் மாநகரின் மையப்பகுதியில் ராம் நகர் என்ற இடத்தில் அமைந்துள்ளது கோதண்ட ராமசுவாமி திருக்கோவில்.
    கோயம்புத்தூர் மாநகரின் மையப்பகுதியில் ராம் நகர் என்ற இடத்தில் அமைந்துள்ளது கோதண்ட ராமசுவாமி திருக்கோவில். இந்த ஆலயத்தில் சீதா, லட்சுமண சமேதராக கோதண்ட ராமசுவாமி அழகிய திருக்கோலத்துடன் வீற்றிருந்து, நம்பிக்கையுடன் வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வருகிறார்.

    ராமபிரானின் சன்னிதிக்கு எதிராக, ராமனை வணங்கும் நிலையில் ஆஞ்சநேயரின் சன்னிதி அமைந்துள்ளது. ராமநாமத்தை சொன்னாலே நன்மைகள் கோடி பெறலாம் என்பதை இங்கு வந்து ராமனை தரிசனம் செய்யும் பக்தர்கள் உணர்வார்கள். இங்குள்ள ராமர் மற்றும் ஆஞ்சநேயர் அருள் பெற வரும் பக்தர்கள் கூட்டம் ஏராளம்.

    பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கட்டப்பட்ட கோதண்ட ராமசுவாமி கோவிலுக்கு 5.2.1933-ந் தேதியன்று முதல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ராமர் கோவிலின் விரிவாக்க பணிகள் படிப்படியாக நடத்தப்பட்டது. 1941-ம் ஆண்டு ராமர் கோவிலில் நவக்கிரகத்திற்கு தனி சன்னிதி கட்டப்பட்டது. இதன் பின்னர் ராமர்கோவிலின் பல்வேறு திருப்பணிகள் படிப்படியாக செய்யப்பட்டது.

    தொடர்ந்து ராமர் கோவிலுக்கு 5 நிலை ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலரின் நன்கொடையால் இந்தப் திருப்பணி இனிதாக முடிவடைந்து, கடந்த 2013-ம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ராஜகோபுரத்தின் கீழ், சிவபெருமானை வழிபடும் பக்தர் களுக்காக, வில்வலிங்கேஸ்வரர் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள அரச மரத்தடியில் கோவிலின் ஆரம்ப காலத்தில் இருந்தே பக்தர்கள் வழிபட்டு வரும் விநாயகர் பெருமான் மற்றும் நாகர் சன்னிதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    கோவில் நடை தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு 6.15 மணிக்கு முதல் கால பூஜையும், 7.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், 10.45 மணிக்கு 3-ம் கால பூஜையும் நடைபெறுகிறது. பின்னர் பகல் 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு 4-ம் கால பூஜையும், இரவு 7.30 மணிக்கு 5-ம் கால பூஜையும், இரவு 8.25 மணிக்கு 6-ம் கால பூஜை முடிந்ததும் 8.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
     
    ராமநவமி தினத்தன்று ராமருக்கு சிறப்பு அபிஷேகமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடைபெறும். மாலையில் சாமி திருவீதி உலா வருவார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை கோவிலில் உள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அன்று சீதா, லட்சுமணர் சமேதராக காட்சியளிக்கும் ராமர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று மகா சுதர்ஷன ஹோமம், தன்வந்த்ரி ஹோமம், ஹயக்கீரிவா ஹோமம் நடைபெறுகிறது. இதேபோன்று பவுர்ணமி தினத்தன்று சத்யநாராயணா பூஜை நடைபெறுகிறது. இந்த சிறப்பு ஹோமங்களில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றலாம். மேலும் பண்டிகை நாட்கள், விழா காலங்களில் ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    சிவன் சன்னிதி :


    கோதண்ட ராமசுவாமி கோவிலின் பின் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வில்வ மரத்தின் அடியில் வில்வ லிங்கேசுவரர் சன்னிதி உள்ளது. இங்கு வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் தினமும் பக்தர்களே நேரடியாக அபிஷேகம் செய்து வழிபடலாம். ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் வில்வலிங்கேசுவரருக்கு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பொருட்களை வைத்தே அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்து நெய் விளக்கேற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வழிபடலாம்.

    சிவராத்திரியின் போது வில்வலிங்கேசுவரருக்கு 4 கால அபிஷேகம் விடிய, விடிய நடைபெறும். இந்த பூஜையிலும் பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்து இறைவன் அருளை பெறலாம். அன்றைய தினம் கோவிலே விழாக்கோலத்துடன் காணப்படும். மார்கழி திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    Next Story
    ×