search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பங்களைத் தரும் திருமலை நாதீஸ்வரர் கோவில்
    X

    திருப்பங்களைத் தரும் திருமலை நாதீஸ்வரர் கோவில்

    இந்த கோவிலில் வழிபட்டால் தீராத நோய்கள், நரம்பு தொடர்புடைய கோளாறுகள் சரியாவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
    திருமலைக் கல்லில் தோன்றிய சிவன் வாழும் தலம், அகத்தியர் ஆசிரமம் மற்றும் யாக குண்டங்களையும் அமைத்து சிவ வழிபாடு செய்த ஊர், உயரமான சூரியன் சிலை உள்ள ஆலயம், பெரிய விஷ்ணு துர்க்கை விளங்கும் ஊர் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஊராகத் திகழ்வது மேலக்குண்டையூர். இந்த ஊரில் எழுந்தருளியுள்ள இறைவனே திருமலை நாதீஸ்வரர் ஆவார்.

    புராண வரலாறு :

    கயிலையில் நடந்த சிவன்- பார்வதி திருமணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், பூலோக மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுமே கயிலைக்குச் சென்றனர். அதன் காரணமாக வடதிசை தாழ்ந்தது. அகத்தியர் இறைவனின் வேண்டுகோள்படி பூமியைச் சமன் படுத்திட தென்திசை நோக்கிப் பயணமானார். பயணத்தின் போது திருமலையில் அவருக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்தது. இதை வைத்துப் பூஜை செய்ய ஒரு நல்ல இடத்தைத் தேடிய போது, நீர்வளமும் நிலவளமும் பொருந்திய ஒரு பசுமையான பகுதி தென்பட்டது. அங்கேயே ஓர் ஆசிரமம் அமைத்தார். அதன்மூலம் பல்வேறு கலைகள் வளர உதவினார். மேலும் மிகப் பெரிய யாக குண்டங்களை அமைத்து சிவபூஜையும் செய்து மகிழ்ந்தார்.

    யாக குண்டங்கள் நிறைந்த ஊராக இப்பகுதி விளங்கியதால், இவ்வூர் குண்டமூர் என்று அழைக்கப்பட்டது. இது நாளடைவில் மருவி குண்டையூர் என்றும் தற்போது மேலக்குண்டையூர் என்றும், கீழக்குண்டையூர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. அகத்தியரால் ஆசிரமம் மற்றும் குண்டங்கள் வளர்த்த இடத்தினை ஊர்மக்கள் இன்றும் அடையாளம் காட்டுகின்றனர்.

    விஷ்ணு துர்க்கை :

    இதே போல, இவ்வூரில் ஒரு இடம் மிகப்பெரிய மண்மேடாகக் காட்சி தருகிறது. இது மன்னர் கால அரண் மனையாக இருந்து பின்னர் அழிந்து போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த மணல் மேட்டில் அழகிய விஷ்ணு-துர்க்கை உருவம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் காட்சி தருகிறது. சிற்பக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இது விளங்குகிறது.

    ஏரிகள், குளங்கள், பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ளது மேலக்குண்டையூர். இனி ஆலயம் செல்வோம்.

    ஊரின் ஈசான்ய மூலையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, காமாட்சி அம்மன் உடனுறை திருமலை நாதீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் 144 அடி நீளமும், 96 அடி அகலமும் கொண்டு விளங்குகிறது. சூரியன், பைரவர், சண்டிகேஸ்வரர், விநாயகர், மகாவிஷ்ணு, பாலமுருகன் சன்னிதிகளும், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை போன்ற பரிவார தெய்வங்களின் சன்னிதிகளும் அமைந்துள்ளன. தனியே நவக்கிரக சன்னிதியும் உள்ளது. பழமையானகோவில் என்பதற்குச் சான்றாக இறைவனின் திருமேனியும், கருவறையும் காட்சி தருகின்றன.

    ஏழு பாறைகள் - சித்தர்கள்:

    சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந் திருந்த இந்த சிவன் கோவிலை, சிவனடியார் ஒருவர் ஊர் மக்களின் ஒத்துழைப்போடு சீரமைக்க விரும்பினார். அதன்படி சிவலிங்கம் மற்றும் அதன் பீடத்தினை நகர்த் தினார். என்ன ஆச்சரியம்! அங்கே பிரகாசமான ஒளி வீசிக்கொண்டிருந்தது. உள்ளே பெரிய சுரங்கப்பாதை அமைப்பில் குகை ஒன்று கீழ்நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மேலும் ஏழு பாறைகள் அடுத்தடுத்து காணப்பட்டன. குகையில் இருந்து ஓங்காரம் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. இது சித்தர் பூமி என்பதையும், சித்தர்கள் தவயோகத்தில் தியானம் செய்வதையும் உணர்ந்த சிவனடியார் மற்றும் ஊர்மக்கள், உடனடியாக சிவலிங்கத்தை அதன் பீடம் இருந்த இடத்தில் திரும்பவும் பொருத்திவிட்டனர். இந்த வரலாறு செய்தி வழிவழியாக இன்றும் இவ்வூரில் கூறப்பட்டு வருகிறது.

    சூரிய பகவான்:

    ஆலயத்தில் நுழைந்ததும் இடதுபுறம் சூரியன் சன்னிதி உள்ளது. கோவில் புனரமைப்பின் போது பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட இந்த சூரியபகவான் சிலை, மிகப்பெரிய உருவமாக காட்சியளிக்கிறது. இவ்வளவு பெரிய சூரியன் சிலை வேறு எங்கும் இல்லை என்றே பக்தர்கள் தெரிவிக்கின்றனர். புதிய 16 கால் கல் மண்டபம் வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

    ஆலயத்தின் தலமரமான வில்வத்தின் அடியில் சிறிய அனுமன், அவரது அருகே நால்வர், அடுத்து மூஷிக விநாயகர், மகாவிஷ்ணு, பாலமுருகன், சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள், சொர்ண பைரவர், சந்திரன் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறைக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளன.

    திருமலை நாதீஸ்வரர் :


    இதனைத் தாண்டினால் நந்திதேவர், சிவனை நோக்கிய வாறு காட்சி தருகிறார். எதிரே மூலவர் இறைவன் எளிய உருவில் கிழக்கு நோக்கி அருள் வழங்குகிறார். இவரின் திருமேனியைக் கண்டதும் நம் மெய் சிலிர்க்கிறது. வேண்டிய வரத்தைத் தர வல்லவர் இவர் என்ற எண்ணம் மனதில் ஆழமாய்ப் பதிகிறது. அருகே எழிலான கோலத்தில் அன்னை காமாட்சி தெற்கு முகமாகக் காட்சி தருகிறார். கீழ் இரு கரங்கள் அபய ஹஸ்தத்துடனும், மேல் இரு கரங்கள் பாசம், அங்குசத்துடனும் காணப்படுகின்றன.

    கருவறையின் வலப்புறத்தில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வில்வமரம், அகன்று நீண்டு வளர்ந்துள்ளது. இதன் இலைகள் பிணி தீர்க்கும் அருமருந்து என்ற அசையாத நம்பிக்கை நிலவுவதால், பக்தர்கள் அனைவரும் வில்வ இலையைப் பறித்துச் செல்ல மறப்பதில்லை. இதன் காய்கள் லிங்க பாண வடிவில் இருப்பது அதிசயமான ஒன்று. இந்தக் காய்களைத் தங்கள் இல்லங்களில் மஞ்சள் பூசி, அரிசி கிண்ணத்தில் வைத்து வழிபடுகின்றனர். இதன் மூலம் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

    ஆலய தரிசன நேரம் :

    காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் நடை திறந்தே இருக்கும். தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்ப தால் இத்தகைய ஏற்பாடு நிர்வாகத்தினரால் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஊர் சித்தர்கள் வாழும் பூமியாகத் திகழ்வதால், முதலில் நம் ஆன்மா தூய்மை பெறுகிறது. தீராத நோய்கள், நரம்பு தொடர்புடைய கோளாறுகள் சரியாவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    அமைவிடம் :


    ஆலயம் அமைந்திருக்கும் மேலக்குண்டையூர் என்ற ஊர், திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் தாலுகாவில் அமைந்துள்ளது. சென்னைக்கு மேற்கே சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த ஊர்.

    திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் திருநின்றவூரில் இருந்து வடக்கே 8 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். திருநின்றவூர் ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து பெரியபாளையம் செல்லும் பேருந்து மூலம் காவனூர் எனக் கேட்டு இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் மேலக்குண்டையூர் உள்ளது.

    ஊரைச் சுற்றி :

    இந்த ஆலயம் அமைந்திருக்கும் மேலக்குண்டையூரைச் சுற்றிலும் பல்வேறு ஆலயங்கள் அமைந்துள்ளன. இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலையில் தாமரைப்பாக்கம் என்ற இடத்தில் சர்வேஸ்வரர் கோவில் உள்ளது. வடகிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் திருமுல்லைவாயில் அம்மன் கோவில், வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் சுருட்டைப்பள்ளி சயனக்கோல சிவபெருமான் ஆலயம் போன்றவை அமைந்துள்ளன.
    Next Story
    ×