search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அற்புதங்கள் புரியும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
    X

    அற்புதங்கள் புரியும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்

    முத்து + ஆற்று + அம்மன், உடம்பில் உள்ள அம்மை முத்துக்களை ஆற்றும் அம்மன் முத்தாரம்மன்.
    அகத்தியரின் சாபத்தால் வரமுனி என்ற முனிவர், எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட ‘மகிஷ’ உருவத்தில் அழையும்படி ஆனது. அசுர குலத்தில் பிறந்த மகிஷன், கடுமையான தவம் இருந்து சிவபெருமானிடமும், பிரம்மதேவரிடமும் பல வரங்களை வரமாகப் பெற்றான். அந்த வரங்களின் காரணமாக அவன் தேவர் களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

    சிவபெருமான், பார்வதி தேவியை உதவி புரிய கோரினார். இதையடுத்து அன்னை தேவர்களுக்கும், முனிவர்களுக்கு அபயம் அளிக்க முன்வந்தாள். பின்னர் மகிஷா சுரனை வதம் செய்வதற்காக ஒன்பது நாட்கள் தவமிருந்து, பத்தாம் நாளில் காளி வடிவம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தாள்.

    தசரா திருவிழா :

    இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் ‘தசரா திருவிழா’ வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் 9 நாட்கள் அம்மன் தவம் செய்யும் நிகழ்வும், 10-ம் நாளான விஜயதசமி அன்று, மகிஷாசுரனை அன்னை வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றன. இந்த விழாவிற்காக பக்தர்கள் பலர் காப்பு கட்டி, பல்வேறு வேடங்கள் தரித்து அம்மனுக்கு விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது.

    புரட்டாசி மாத அமாவாசை கழிந்த மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது ‘தசரா திருவிழா’. மைசூர், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெறும் தசரா விழாவைப் போன்று தமிழகத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயம் சிறப்புக்குரிய இடமாக உள்ளது. இந்த ஆலயத்தில் ஒரே பீடத்தில் வடக்கு திசை நோக்கி ஈசன் ஞானமூர்த்தீஸ்வரராகவும், அம்பாள் முத்தாரம்மனாகவும் சுயம்புவாக இருந்து அருள்பாலித்து வரு கிறார்கள்.

    தல வரலாறு :

    குலசேகரப்பாண்டியன் என்னும் மன்னனே இந்த கோவிலை கட்டியுள்ளான். மேலும் இந்த ஊரில் உள்ள அறம் வளர்த்த நாயகி சமேத கச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவிலையும் இந்த அரசனே கட்டி முடித்துள்ளான். அக்கசாலை விநாயகர் கோவில், விண்ணகரப் பெருமாள் கோவில், சிதம்பரேஸ்வரர் கோவில், வீரகாளி, பத்ரகாளி, கருங்காளி, முப்புடாதி, உச்சினி, மகாகாளி, அங்காளம்மன், ஈஸ்வரி அம்மன், வண்டி மறித்த அம்மன் என அஷ்ட காளி கோவில்களும் குலசையில் அமைந்துள்ளன.

    மயிலாடியில் சிலை :

    முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரரின் சுயம்பு விக்கிரகங்களை ஆரம்ப காலத்தில் வழிபட்டு வந்த பக்தர்கள், அம்மையப்பன் இருவரையும் பெரிய திருஉருவில் வழிபட விருப்பம் கொண்டனர். அப்போது கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய முத்தாரம்மன், ‘எங்கள் திருமேனியை கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி என்ற ஊரில் உள்ள சிற்பி சுப்பையா என்பவரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்’ என கூறி மறைந்தாள்.

    அம்மனின் அருளால் சிலையை செதுக்கிய சிற்பியிடம் இருந்து அம்மையப்பனின் சிலையைப் பெற்று வந்து 1934-ம் ஆண்டு கருவறையில் பிரதிஷ்டை செய்தனர். பழைய சுயம்பு சிலைகள் தற்போது கருவறையின் அடியில் உள்ளதாக கூறப்படுகிறது. இத்தல கருவறையின் எதிரில் நின்றாலே ஆன்மிக அதிர்வுகளை பக்தர்கள் உணர்வார்கள்.

    இத்தல ஞானமூர்த்தீஸ்வரர் இடது காலை மடக்கிய நிலையில் இரண்டு திருக்கரங்களுடன், வலக்கரத்தில் செங்கோலும், இடக்கரத்தில் விபூதிக் கொப்பரையும் கொண்டு அருள்பாலிக்கிறார். முத்தாரம்மன் வலது காலை மடக்கிய நிலையில் நான்கு திருக்கரங்களுடன், வலது மேல் கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் திரி சூலமும், இடது மேல் கரத்தில் நாகபாசமும், கீழ் கரத்தில் விபூதி கொப்பரையும் கொண்டுள்ளாள்.

    வழிபாட்டு தெய்வங்கள் :

    முத்தாரம்மனுக்கு எலுமிச்சை பழ மாலையும், செவ்வரளி மாலையும் உகந்தவையாகும். ஆலய மகா மண்டபத்தில் கருப்பசாமி, பேச்சியம்மன், பைரவர் சன்னிதிகள் உள்ளன. பேய், பிசாசு, காத்து கருப்புகளை நம்மை அண்ட விடாது கருப்பசாமி காத்தருள்வார். மூன்று வயதாகியும் சரியாக பேச்சு வராத குழந்தைகளை இந்த தலத்திற்கு அழைத்து வந்து பேச்சியம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.

    இங்குள்ள பைரவரை அஷ்டமி நாட்களில் மாலை வேளையில் நெய் தீபம் ஏற்றி, வில்வ இலையால் அர்ச்சித்து, உளுந்துவடை மாலை சாற்றி வழிபட்டால் வறுமை அகலும். வளங்கள் பெருகும். கோவில் பிரகாரத்தை வலம் வரும் போது, விநாயகர், துர்க்கை, அர்த்த நாரீஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகிய தெய்வங்களையும் வழிபடலாம்.

    அம்மை நோய் :

    தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் சக்தியாக முத்தாரம்மன் வீற்றிருக்கிறாள். குறிப்பாக அம்மை நோய். உடலில் அம்மை நோய் முத்து முத்தாக இருந்தால், ஆமணக்கு விதை வாங்கி அம்மனுக்கு காணிக்கை செலுத்து கின்றனர். 

    பொடிப் பொடியாக இருந்தால் அரிசியும், தடிமனாக இருந்தால் பூசணிக்காயும் வாங்கி முத்தாரம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்கு உடனடி பலன் கிடைப்பதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். முத்து + ஆற்று + அம்மன், உடம்பில் உள்ள அம்மை முத்துக்களை ஆற்றும் அம்மன் முத்தாரம்மன்.

    செவ்வாய் தோஷம் நீங்க செவ்வாய்க்கிழமையில் அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும். ராகு தோஷம் அகல செவ்வாய்க் கிழமையில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும். எலுமிச்சை பழத்தின் மேற்புறத்தில் துவாரமிட்டு, சாற்றை எடுத்து விட்டு, அதனுள் சிறிது நெய்விட்டு, திரியிட்டு எலுமிச்சை பழ தீபமேற்ற வேண்டும்.

    ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள். ஆடி மாதம் 3-ம் செவ்வாய் அன்று திருவிழா நடைபெறும். சித்திரை வருடப் பிறப்பில் சிறப்பு வழிபாடு உண்டு. தசரா எனப்படும் நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்தி பெற்றதாகும்.

    தினம் ஒரு அலங்காரம் :

    புரட்டாசி மாத அமாவாசை அடுத்து வரும் பிரதமை திதியில் கொடியேற்றத்துடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடங்குகிறது. நவராத்திரி விழாவின் முதல் நாள் முத்தாரம்மன் துர்க்கையாகவும், இரண்டாம் நாள் விஸ்வகர்மேஸ்வரராகவும், மூன்றாம் நாள் பார்வதிதேவியாகவும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியராகவும், ஐந்தாம் நாள் கிருஷ்ணராகவும், ஆறாம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், ஏழாம் நாள் நடராஜராகவும், எட்டாம் நாள் மகாலட்சுமியாகவும், ஒன்பதாம் நாள் சரஸ்வதியாகவும் காட்சி தந்து வீதி உலா வருவாள்.

    பத்தாம் நாள் விஜயதசமி அன்று இரவு 11 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், சூரசம்ஹாரத்துக்குக் கொண்டு செல்லப்படும் சூலத்துக்கும் பூஜைகள் நடைபெறும். இரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் ஆலயத்துக்கு முன்பாக எழுந்தருள்வாள். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் முத்தாரம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்ய, சுற்றிலும் வாண வேடிக்கை நிகழ்த்தப்படும். தொடர்ந்து முத்தாரம்மன் திருத்தேர் மற்றும் பூச்சப்பரத்தில் வீதி உலா வருவாள். இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவர்.

    இந்த ஆண்டுக்கான தசரா விழா 2-10-2016 அன்று தொடங்குகிறது. 
    Next Story
    ×