search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மது மயக்கம் மாற்றும் திருப்பாம்புரம் திருத்தலம்
    X

    மது மயக்கம் மாற்றும் திருப்பாம்புரம் திருத்தலம்

    திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றத் தலமாக விளங்கும் திருப்பாம்புரத்தில், ராகுவும்- கேதுவும் ஏக சரீரம் எனப்படும் ஓருடலாய் இணைந்து வீற்றிருப்பது சிறப்புக்குரியதாக உள்ளது.
    மனிதர்களுக்கு சில பழக்கங்கள், வழக்கங்களாக மாறிப்போய் விட்டால், அந்தப் பழக்கத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும், அவை அவர்களை விட்டு விலக மறுக்கின்றன. அப்படிப்பட்ட பழக்கங்களில் ஒன்றுதான் மது குடிக்கும் பழக்கம். கடைசியில் அதற்கு அடிமையாகி உடல் நலம், மன நலம், வாழ்க்கை வளம் எல்லாவற்றையும் தொலைத்து நிர்க்கதியாக நிற்க வைத்து விடுகிறது. மது என்பது மகிழ்ச்சியில் மின்னி, துயரத்தில் தொலைவது என்று சொன்னால் மிகையல்ல.

    மதுவுக்கு அடிமையானவர்கள் இறுதியில் மது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்து விடுகிறார்கள். சமுதாயத்தில் கவுரவம், பணம் எல்லாவற்றையும் இழந்து தனது குடும்பத்தில் இருந்து தனித்து விடப்படுகின்ற அவலம் இன்று பெருகி விட்டது.

    அதுமட்டுமல்ல அவர்களது உடலில் நரம்புத் தளர்ச்சி, மூளை ஒருங்கிணையாமை, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட்டு கடைசியில் மரணத்தையே அரவணைக்கும் அவலம் ஏற்படுகிறது.

    இன்று மது அடிமை மறுவாழ்வு மையங்கள் வந்து அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் மட்டுமல்லாது, மனோதத்துவ ரீதியிலும் சிகிச்சை அளித்து மதுவினை மறக்க வைக்க முயல்கிறார்கள்.

    ஆன்மிக முறையில் போதைப் பழக்கம் ஒழியுமா? என்றால் முடியும் என்கிறார்கள் சில ஆன்மிக ஆன்றோர்கள்.

    ராகு- கேது போன்ற சர்ப்ப கிரகங்கள் ஜாதகத்தில் சரியான இடத்தில் இல்லாமல் தோஷம் இருந்தால் அவர்கள் மனநிலையில் ஒரு தெளிவில்லாமல் இருப்பார்கள். அதற்கு நாக தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் என்பது சிலரின் கூற்றாக உள்ளது.

    ஏக சரீர ராகு-கேது :

    ராகு - கேது திருநாகேஸ்வரம், பெரும்பள்ளம் போன்ற தலங்களில் தனித்தனியாக இருக்கிறார்கள். காளகஸ்தி போன்ற புகழ்பெற்ற திருக்கோவில்களில், சிவபெருமானே ராகு-கேதுக்களாக வீற்றிருந்து பக்தர்களின் தோஷம் நீக்கி அருள்பாலிக்கிறார்.



    திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றத் தலமாக விளங்கும் திருப்பாம்புரத்தில், ராகுவும்- கேதுவும் ஏக சரீரம் எனப்படும் ஓருடலாய் இணைந்து வீற்றிருப்பது சிறப்புக்குரியதாக உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இது 122-வது தலமாகும். மேற்கு பார்த்த சன்னிதியில் இருந்து இறைவனை நெஞ்சில் நிறுத்தி வணங்கிய நிலையில் ராகு-கேது உள்ளனர். இருவரும் ஒருவராய் வீற்றிருப்பதால், மற்ற நாக பரிகார தலங்களைக் காட்டிலும், இந்தத் தலம் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.

    இத்தல இறைவன் பாம்புரேஸ்வரர் என்றும், பாம்புரநாதர் என்றும், சேஷபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். நாகராஜனான ஆதிசேஷன் மட்டுமல்லாது அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் எனும் அஷ்ட நாகங்களும் வழிபட்ட சிறப்புக்குரிய தலம் இதுவாகும்.

    பாம்புரேசுவரர் வீற்றிருக்கும் விமானத்தின் அருகே, திருமலை ஈசுவரர் சன்னிதி படிக்கட்டு களுடன் இருப்பது சிறப்பு. சுவாமிக்கு இடதுபுறம் வண்டார்குழலி என்ற பெயரில் அம்பிகை நின்ற கோலத்தில் அருள்மழை பொழிகிறாள். அவளது சன்னிதிக்கு எதிரே தான் ஏக சரீர ராகு-கேது சன்னிதி அமைந்துள்ளது.

    திருக்கோவிலின் பின்புறம் தல விருட்சமாக பெரிய வன்னி மரம் உள்ளது. அந்த மரத்தின் அடியில் வன்னி ஈஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக் கிறார். இந்த வன்னி மர ஈஸ்வரரை, பிரார்த்தனை செய்து கொண்டு மஞ்சள் துணியில் முடிச்சு போட்டு மரத்தில் கட்டி தொங்க விட்டால், எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. காள சர்ப்ப தோஷம், ராகு- கேது சதுர்த்தி உள்ளவர்கள், இந்த தோஷங்களால் திருமணம் மற்றும் குழந்தை பேறு தடை உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

    பரிகாரம் :

    மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு பரிகாரம் இந்த ஆலயத்தில் செய்யப்படுகிறது. மது பாதிப்பு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சேஷ தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் கோவிலுக்குள் சென்று சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தனை செய்து விட்டு, ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் பலர் மது மயக்கத்தில் இருந்து மாறுதல் அடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு நம்பிக்கைதான் முக்கியம் என்றும் சொல்கிறார்கள்.

    தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு முறை இந்தத் திருத்தலத்திற்கு சென்று வரலாமே.

    அமைவிடம் :

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பாம்புரம் திருத்தலம். குடந்தை- காரைக்கால் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரில் இருந்து 4 கிலோமீட்டர் தூரம் வயல் பாதையில் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.  
    Next Story
    ×