search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மன அமைதி தரும் ஆவூர் திருவகதீஸ்வரர் கோவில்
    X

    மன அமைதி தரும் ஆவூர் திருவகதீஸ்வரர் கோவில்

    மனநோய் உள்ளவர்கள், வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள், தொழில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் மற்றும் மன அமைதியை தேடியவர்கள் இக்கோவிலுக்கு வந்து வணங்கி சென்றால் எல்லாம் கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.
    திருவண்ணாமலையில் இருந்து வேட்டவலம் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆவூர் கிராமம். இக்கிராமத்தின் பெரிய ஏரிக்கரையின் அருகே சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் திருவகதீஸ்வரர் கோவில் உள்ளது.

    சோழர் காலத்தில் (கி.பி.985-1014) திருமடப்பாறை உடையார் கோவில் எனவும், கி.பி. 1271-ல் ஆவூர் திருவகட்டீஸ்வரமுடைய நாயனார் கோவில் என்றும் அழைக்கப்பட்டுள்ளது இந்த ஆலயம். இதனை அங்குள்ள கோவில் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது.

    கோவில் அமைப்பு :

    இந்தக் கோவில் தெற்குப்புறமாக நுழைவு வாசல் கொண்டது. மதில் சுவர் 4 அடி கன அளவும், 34 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில் பிரகாரத்தில் திருவகதீஸ்வரர் சன்னிதி, லோகநாயகி அம்மன் சன்னிதி, விநாயகர் சன்னிதி, மடப்பள்ளி, திருக்கல்யாண மண்டபம் ஆகியவை உள்ளன. கோவில் கலை நயத்துடன் கல் சுவரால் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் சிறப்பும் காலமும் :

    இங்குள்ள கல்வெட்டு தகவல்கள் படியும், ஆய்வாளர் களின் கருத்துப்படியும் இந்த ஆலயம் 10-ம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது தெளிவாகிறது. கோவிலில் உள்ள கல்தூண்களில், குறிப்பாக திருக்கல்யாண மண்டபத்தின் கல்தூண்களில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள், அப்போதிருந்த சிற்பக் கலையின் உன்னத நிலையை அறிய உதவுகிறது. இதில் நாயக்க மன்னர்களின் சிற்பங்களும் உண்டு. இதிலுள்ள 28 கல்வெட்டுகளில் ராஜராஜசோழன் கால கல்வெட்டு ஒன்றும், பாண்டிய அரசர்கள் காலத்தை குறிக்கும் கல்வெட்டுகளும், பல்லவ மன்னர்கள் காலத்தை குறிக்கும் கல்வெட்டுகளும், ஹய்சாள மன்னர்கள் காலத்தை குறிக்கும் ஒரு கல்வெட்டும், விஜயநகர மன்னர்கள் காலத்தை குறிக்கும் ஒரு கல்வெட்டும் உள்ளன.

    15-ம் நூற்றாண்டில் மன்னர்கள் படையெடுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆலயம் சிதிலமடைந்து போனது. தற்போது இந்த ஆலயத்தில் பூஜை நடை பெறாமல் உள்ளது.

    மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு முன்பே இந்த ஆலயம் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள தீர்த்தக்குளம் ‘மகாதேவ தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. கோவிலுக்கு எதிரில் குளம் இருப்பது சிறப்பு அம்சமாகும். இந்தக்குளம் இதுவரை வற்றியது இல்லை.

    மேலும் மனநோய் உள்ளவர்கள், வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள், தொழில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் மற்றும் மன அமைதியை தேடியவர்கள் இக்கோவிலுக்கு வந்து வணங்கி சென்றால் எல்லாம் கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.

    அதேபோல் பவுர்ணமி நாட்களில் வேட்டவலம் ஸ்ரீஅகதீஸ்வரரை வணங்கிய பின்பு ஆவூரிலுள்ள திருவகதீஸ்வரரை வணங்கி விட்டுதான் திருவண்ணாமலைக்கு கிரிவலம் பக்தர்கள் செல்கிறார்கள்.



    இந்த நிலையில் கடந்த 8-ம் ஆண்டுக்கு முன் பூமியில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட லிங்கத்தை எடுத்து கோவில் முன்பு பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்குமுன் அறநிலையத்துறை சார்பாக கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்தப்பணி இன்னும் நிறைவு பெறவில்லை.

    திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டதன் மூலம் சத்தியத்தை மீறியதால் சுந்தரரின் இரு கண்பார்வையும் பறிபோனது.

    பிறகு அவரது உள்ளம் உருக்கும் தமிழ்ப்பதிகம் கேட்டு காஞ்சீபுரத்தில் இடது கண்ணையும், ‘மீளா அடிமை’ என்று பாடி வழிபட்டதால் திருவாரூர் தூவாநாயனர் கோவிலில் வலது கண்ணையும் வழங்கி கருணை செய்தார் இறைவன்.

    அத்தகைய சிறப்பு மிக்க திருவாரூர் திருத்தலத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர் ஊரில் இன்னொரு அற்புதத்தையும் நிகழ்த்தியிருக்கிறார் அம்பிகை துணைவனான சிவபெருமான்.

    கண் கொடுத்தவர் :

    முன்னொரு காலத்தில் சிவ பக்தை ஒருத்தி இருந்தாள். அவளுக்கு பிறந்த குழந்தை ஒன்று, பிறவியிலேயே இரு கண் பார்வையையும் இழந்திருந்தது. இதனால் அந்தப்பெண், தான் வணங்கும் சிவனை தினமும் பூக்களால் பூஜை செய்தும் பலனில்லையே என்று மனம் வருந்தினாள். மேலும் தனது குழந்தைக்கு கண் பார்வை வழங்கும்படி, தன்னுடைய கண்களையே காணிக்கையாக செலுத்தி பூஜை செய்தாள்.

    அவளது பக்தியில் மெய்சிலிர்த்து போன சிவபெருமான், உடனடியாக அவளுக்கு காட்சி கொடுத்தார். மேலும் அந்தப் பெண்ணின் குழந்தைக்கும் விழிகளின் பார்வையை வழங்கி பேரருள் செய்தார். இதன் காரணமாக அந்த ஊருக்கு, ‘கண் கொடுத்த வனிதம்’ என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இங்குள்ள சிவாலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறைவன் ‘நயன வரதேஸ்வரர்’ என்ற திருப்பெயருடன் அழைக்கப்படுகிறார்.

    நயனம் என்றால் கண். வரத ஈசுவரர் என்றால் அருள் தரும் இறைவன் என்று பொருள். எனவே சுவாமி கண் பார்வை கிடைக்க அருள் தந்த ஈசன் ஆனார்.

    வெண்ணாற்றின் கிளை ஆறான பாண்டவாற்றின் வடகரையில் உள்ளது கண் கொடுத்த வனிதம். அதன் மறுகரையில் தான் சம்பந்தரால் பாடல் பெற்றதாக கண்டுபிடிக்கப்பட்ட 275-வது தேவாரத்தலமான ‘விடைவாய் என்னும் திருவிடைவாசல்’ திருக்கோவில் இருக்கிறது.

    இந்தப் பகுதியில் தான், எண்கண் என்ற தலத்தில் பிரமபுரீசுவரர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் முருகன், மன்னனால் குருடாக்கப்பட்ட பின்னும் தனது சிலையை வடித்த சிற்பியின் கண்களை மீண்டும் உயிர்ப்பித்து ஒளிபெறச் செய்தார் என்பது வரலாறு.

    கண்கொடுத்த கோவில் :

    இவ்வளவு சிறப்பு மிகு தலங்களுக்கு இடையில் விளங்குகிறது கண் கொடுத்த வனிதம் திருக்கோவில். இந்த நயனவரதேஸ்வரர் திருக்கோவில், சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு நாளடைவில் சிதைவுற்று போனது. பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது. இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லை. வெட்ட வெளியில் நந்தி அமர்ந்துள்ளார்.

    விழிகளை ஒளி பெறச் செய்யும் விமலனான சிவபெருமான், கருவறையில் கிழக்கு பார்த்த வண்ணம் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தில் அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்று அனைத்தும் கற்கோவிலாகவே காட்சி தருகின்றன. பழைய கருங்கல் சன்னிதியில் தெற்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார் அம்மன். அம்பிகையின் பெயர் தேவநாயகி என்பதாகும்.

    இவ்விரு சன்னிதிகளையும் இணைத்து, கடந்த ஆண்டு நடந்த குடமுழுக்கின் போது புதிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கன்னி மூலையில் கணபதியும், அதை அடுத்து உயரமான புகழா பரமேஸ்வரர் லிங்கமும் உள்ளன. வட மேற்கு மூலையில் முருகப்பெருமான் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரும், அவர்களுக்கு எதிரே சண்டேஸ்வரர் தனிச் சன்னிதியிலும் வீற்றிருக்கின்றனர். ஈசானிய மூலையில் பைரவர், சனீஸ்வரர், சூரியன் ஆகியோர் புதிய மண்டபத்தில் இருக்கிறார்கள். இந்த ஆலயத்தில் நவக்கிரக சன்னிதி இல்லை.

    திருக்கோவிலுக்கு எதிரே பெரிய திருக்குளம் உள்ளது. அதன் கரையில் கொக்குமந்தாரை என்னும் ஒருவகை ஆத்தி மரம் உள்ளது. அதுதான் தலவிருட்சம் என்கிறார்கள். அதன் பூ, இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.

    பிரார்த்தனை :

    இத்திருக்கோவிலில் எந்த மாதிரியான பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படுகிறது என்பது பற்றி, திருக்கோவிலுக்கு அருகிலேயே குடியிருக்கும் அர்ச்சகர் கீழ்க்கண்ட விவரங்களைச் சொன்னார்.

    இத்தலத்தில் பிறவியிலேயே ஏற்பட்ட குருடைத் தீர்த்து கண்ணொளி வழங்கிய பெருமான், மனமுருக வேண்டி பிரார்த்திக்கும் பக்தர்களுக்கு கண் நோய்கள், பார்வைக் குறைபாடு போன்ற அனைத்தையும் நீக்கி அருள் செய்கிறார்.

    இத்தல இறைவனை பதினொரு ஞாயிற்றுக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, இறுதி வாரம் அபிஷேக ஆராதனை செய்தால் கண் கண்ட பலன் கிடைக்கும். தொடர்ந்து வர இயலாதவர்கள் முதல்வாரமும், கடைசி வாரமும் நேரில் வந்து இடைப்பட்ட வாரங்களில் அவர் பெயரால் அர்ச்சனை செய்து கொண்டால் போதும்.

    இத்திருக்கோவில் ஒரு ‘ஆப்தால்மிக் கிளினிக்’காகவும் இறைவன் கண் மருத்துவராகவும் இருப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக் கிறார்கள்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இத்திருக்கோவில், காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் கொரடாச்சேரி என்ற ஊர் உள்ளது. இங்குள்ள வெண்ணாற்றின் வாசல் என்னும் வெண்ண வாசலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் கண் கொடுத்த வனிதம். வெண்ணவாசலில் இருந்து மினி பஸ் மூலமாக இந்த திருக்கோவிலை அடையலாம். திருவாரூரில் இருந்து நகரப் பேருந்து காலை, மாலை இருவேளையும் இயங்குகின்றன. கமலாபுரம் என்ற ஊரிலிருந்து 6 கி.மீ தொலைவிலிருக்கும் இவ்வூருக்கு தனி வாகனத்திலும் வந்து சேரலாம்.
    Next Story
    ×