search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவக்கிரக தோஷம் நீக்கும் மதுர நாதீஸ்வரர் கோவில்
    X

    நவக்கிரக தோஷம் நீக்கும் மதுர நாதீஸ்வரர் கோவில்

    மதுர நாதீஸ்வரர் கோவில் உள்ள சுயம்பு மாணிக்க விநாயகரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
    திருவண்ணாமலை அருகே உள்ள வடமாத்தூர் கிராமத்தில் மரகதாம்பிகை உடனுறை மதுர நாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வடமாத்தூரில் வாழ்ந்த நிலக்கிழார் ஒருவரின் கனவில் தோன்றிய விநாயகப்பெருமான், தான் அங்குள்ள பூமிக்கடியில் இருப்பதாக கூறினார்.

    இந்த நிலையில் அந்த நிலக்கிழார் தனது நிலத்தை உழுதபோது, ஒரே அளவில் 1½ அடி உயரத்தில் 2 கற்கள் கிடைத்தன. அவை இரண்டையும் இணைத்துப் பார்த்தபோது அது விநாயகர் உருவில் காட்சிதந்தது. பின்னர் அந்த விநாயகரை சிறு கோவிலில் நிர்மாணித்து ‘சுயம்பு மாணிக்க விநாயகர்’ என்று பெயரிட்டு வழிபட்டு வந்தார்.

    இந்த விநாயகரால் ஊரில் பல நல்ல விஷயங்கள் நடைபெற்றதால், ஆலயத்தின் புகழ் பரவத் தொடங்கியது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆலயத்தை விரிவுபடுத்த எண்ணம் கொண்டனர். அதன்படி விநாயகரை அவரது குடும்பத்தோடு, அதாவது சிவபெருமான், பார்வதி சன்னிதிகளோடு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். அதன் படியே கோவில் பெரிய அளவில் கட்டப்பட்டது. இங்குள்ள மூலவர் சிவபெருமான், ‘மதுரநாதீஸ்வரர்’ என்ற பெயரில் அருள்புரிகிறார். அம்மாளின் திருநாமம் மரகதாம்பிகை என்பதாகும்.

    இந்தக் கோவில் புனரமைக்கப்பட்டு 7-2-1979 அன்று ‘குடமுழுக்கு விழா’ (கும்பாபிஷேகம்) நடந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஊரில் வறட்சி ஏற்பட்டது. இதனால் மக்கள் பிழைப்பு தேடி நகரங்களுக்குச் செல்லத் தொடங்கினர். கிராமத்தின் மக்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியதால், ஆலய விழா நடத்துவது முடங்கியது. 10 நாள் உற்சவம் என்பது ஒரு நாள் விழாவாக மாறியது. பிறகு அதுவும் இல்லாமல் போனது.

    இந்த நிலையில் ஊர்மக்கள் ஒத்துழைப்போடு கோவிலை மேலும் விரிவாக்கம் செய்து கடந்த 9-2-2014 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முப்பது ஆண்டுகளாக நின்று போயிருந்த 10 நாள் பிரம்மோற்சவம், கடந்த மே மாதம் சிறப்பாக நடந்தேறியது. இந்த ஆலயத்தின் முகப்பின் மேற்புறத்தில் விநாயகர், சிவன், பார்வதி மற்றும் முருகன் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்ததும் குளிர்ச்சியான ஒரு பெரிய வழிபாட்டுக் கூடம், பலி பீடம், 33 அடி உயர பித்தளை தகடுகள் வேயப்பட்ட கொடிமரம், நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளன.

    பக்தியோடு உள்ளே நுழைந்தால் இடதுபுறம் சுயம்பு மாணிக்க விநாயகர் சன்னிதி உள்ளது. அடுத்து நடுநாயகமாக லிங்கத் திருமேனியாக விளங்கும் மதுரநாதீஸ்வரர் சன்னிதியும், வலப்புறம் வள்ளி-தெய்வானையோடு பாலசுப்பிரமணியர் சன்னிதியும் இருக்கின்றன. இந்த சன்னிதி விமானங்கள் மூன்றும் சோழர் கால பாணியில் கட்டப்பட்டு, சுதை சிற்பங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

    தலவிருட்சம் :

    வெளிப்பிரகாரத்தின் தெற்கு புறத்தில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கிறார். அடுத்து லிங்கோத்பவர், பின்புறம் மதிற்சுவரில் மகாலட்சுமி உள்ளனர். அதற்கு அடுத்ததாக, மரகதாம்பிகையின் சன்னிதி உள்ளது. தொடர்ந்து பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, நவக்கிரக சன்னிதி, யாகசாலை, இறுதியாக சாந்த சொரூபியாக நின்ற கோலத்தில் நாய் வாகனத்துடன் காட்சிதரும் கால பைரவர் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.

    இக்கோவிலின் தலவிருட்சமான வில்லா மரம் பிரமாண்டமாக பரந்து நிற்கிறது. ஆலயத்தின் பிரதான தெய்வமாக சுயம்பு மாணிக்க விநாயகர் விளங்கு கிறார். உளி படாமல் உருவான இந்த நாயகனை பலரும் வந்து வணங்கிச் செல்கின்றனர். இவரையும், கால பைரவரையும் ஒரு சேர வணங்கினால் நவக் கிரக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருவண்ணாமலையில் இருந்து காஞ்சி (காஞ்சிபுரம் அல்ல) பெரியகுளம் என்ற ஊருக்கு சென்று, அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் வந்தால் வடமாத்தூர் உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து செங்கம் செல்லும் வழியில் கண்ணக்குருக்கை என்ற இடத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் வடமாத்தூர் அமைந்துள்ளது.
    Next Story
    ×