search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயம்
    X

    திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயம்

    இத்தலத்தில் ஈசனே, பைரவ வடிவம் என்பதால் தேய்பிறை அஷ்டமி நாளில் வீரட்டேஸ்வரரை வழிபட்டால் தீவினைகள் அகன்று, செல்வங்கள் தேடி வரும்.
    தன் பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு திருக்கயிலாயம் செல்வதற்காக ஈசனை உருகி வேண்டிக்கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதையடுத்து ‘அயிராவணம்’ என்னும் யானையை ஈசன் அனுப்பினார். அதில் ஏறிய சுந்தரர் கயிலாயம் புறப்பட்டார்.

    அவரோடு, அவரது நண்பரான சேரமான் பெருமானும், குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி, குதிரையில் ஏறி கயிலாயம் சென்றார். இருவரும் வானில் சென்றபோது, கீழே திருக்கோவிலூர் என்ற சிவதலத்தில் வீற்றிருக்கும் தல விநாயகரை, அவ்வையார் வழிபட்டுக் கொண்டிருந்தார்.

    அவரிடம் சுந்தரரும், சேரமானும், ‘அவ்வையே! நாங்கள் கயிலாயம் செல்கிறோம். நீயும் வருகிறாயா?’ என்று கேட்டனர்.

    கயிலாயம் செல்லும் எண்ணம் யாருக்குத்தான் இருக்காது! ‘நானும் வருகிறேன்’ என்று கூறிய அவ்வை, விநாயகர் வழிபாட்டை அவசரம் அவசரமாக முடிக்க எண்ணினார்.

    அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. அது விநாயகரின் குரல். ‘அவ்வையே! நீ எனது பூஜையை வழக்கம்போல் பொறுமையாகவே செய். வழிபாடு முடிந்ததும், சுந்தரர், சேரமான் இருவருக்கும் முன்பாக உன்னை கயிலாயத்தில் சேர்க்கிறேன்’ என்றார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த அவ்வை, ‘சீதக்களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட...’ எனத் தொடங்கும் ‘விநாயகர் அகவல்’ பாடி விநாயகரை வழிபட்டார்.

    அவ்வையார் ‘விநாயகர் அகவல்’ பாடி முடித்ததும், அவர் முன் விநாயகர் தோன்றி, தனது துதிக்கையால் அவ்வையை ஒரே தூக்கில் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்ப்பித்து விட்டார். விநாயகர் துதிக்கையால் அவ்வையாரை திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்த பிறகுதான், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் திருக்கயிலாயம் வந்தடைந்தனர் என்பது வரலாறு.

    அவ்வையாரை இத்தல விநாயகர், விஸ்வரூபம் எடுத்து தனது துதிக்கையால் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்ததால், ‘பெரிய யானை கணபதி’ என்று அழைக்கப்படுகிறார். இவ்விநாயகர் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இத்தல ஈசன் வீரட்டேஸ்வரர்.

    தல பெருமை :

    கொன்றையும், வில்வமும் தல மரங்களாக உள்ளன. மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி செய்த அருட்பதி இதுவாகும். ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது. ராஜராஜ சோழனின் சகோதரி, இந்த ஆலயத்திற்கு விளக்குகள் ஏற்றிட நிதி வழங்கினார் என கல்வெட்டு சான்று பகிர்கிறது. இத்தல தீர்த்தம் தென்பெண்ணை ஆகும். கபிலர் வழிபட்ட தலம் இது. தென்பெண்ணை ஆற்றின் நடுவில் கபிலர் குகைக்கோவில் அமைந்துள்ளது.

    இத்தல ஈசனும், அம்பாளும் மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்கள். இங்குள்ள அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கையை ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலங்களில் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண மற்றும் சுப காரியத் தடங்கல்கள் அகலும். வறுமை அகன்று வசந்தங்கள் ஓடிவரும். பிணி நீங்கி வளங்கள் நம்மை வந்து சேரும். தீவினைகள் அண்டாது. ‘துர்க்கா சப்த ஸ்லோகி’ என்ற ஸ்தோத்திரத்தை ராகு கால வேளைகளில் படித்து வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரின் பாடல் பெற்ற தலம். சப்த கன்னிகளும், 64 வித பைரவர்களும் தோன்றிய தலம். பைரவ உபாசகர்களுக்கு முதன்மையான கோவில் இது என பல்வேறு சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த ஆலயம். இத்தலத்தில் ஈசனே, பைரவ வடிவம் என்பதால் தேய்பிறை அஷ்டமி நாளில் வீரட்டேஸ்வரரை வழிபட்டால் தீவினைகள் அகன்று, செல்வங்கள் தேடி வரும்.

    வழிபட்ட தெய்வங்கள் :

    இந்த ஆலயத்தில் விநாயகர், முருகப்பெருமான், ராமர், பரசுராமர், கிருஷ்ணர், இந்திரன், காளி, எமன், காமதேனு, சூரியன், குரு, உரோமச முனிவர், கண்வ மகரிஷி, மிருகண்டு முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், வாணாசுரன், ஆதிசேஷன், மன்மதன், குபேரன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலம் பஞ்சபூத லிங்கங்கள், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், சந்திரசேகரர், லிங்கோத்பவர் ஆகிய மூர்த்தங்கள் அருள் நிறைந்தவையாகும்.

    விநாயகர் சதுர்த்தி அன்று, இங்குள்ள பெரிய யானை கணபதி சன்னிதியில், அவ்வையார் பாடிய ‘விநாயகர் அகவல்’ பாடி வழிபட்டால் வேண்டியவை அனைத்தும் நடைபெறும்.

    திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோவிலூர் உள்ளது. பண்ருட்டி, கடலூர், விழுப்புரத்தில் இருந்தும் ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.
    Next Story
    ×