search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழஞ்சிறை தேவி கோவில்
    X
    பழஞ்சிறை தேவி கோவில்

    பழஞ்சிறை தேவி கோவில்

    மாங்கல்ய பாக்கியம் அருளும் பழஞ்சிறை தேவி
    அகில உலகத்தையும் தோற்றுவித்த ஆதி முதல் கடவுள் சிவபெருமான். ஆக்கல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர் அவர் ஒருவரே! பிரம்ம தேவனாலும் மகா விஷ்ணுவினாலும் அடிமுடி காண முடியாமல் ஒளிப் பிளம்பாக நின்றவன். அப் பரம்பொருளான சிவபெருமானின் அன்புக்குரிய மனையாள் சக்தி சொரூபினியான பார்வதி தேவி.

    உயிர்களைப் பேணிக்காத்து, துன்பம் ஏற்படுகின்றபோது துயர்துடைத்து காப்பது அந்த தேவி தான். அருள் தேடி தன்னிடம் அபயம் நாடி வருவோருக்கு அருள் வழங்கி வருவதும் அன்னை பார்வதி தேவியே!

    அனந்தன் காடு :

    ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும் நிறைய பெற்ற இடமாக திகழ்ந்த ‘மலையாளம்’ பகுதியில் திருவனந்தபுரம் என்ற இடம் காடாகக் கிடந்தது. இதனை ‘அனந்தன் காடு’ என்றே அழைத்தனர்.

    இந்த இடத்தில் பாய்ந்தோடிய நீலாற்றங்கரையில், யோகீஸ்வரர் என்ற முனிவர், அன்னை பார்வதி தேவியை தியானித்து தவம் மேற்கொண்டார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்து செழித்திடவும், தான் முக்தி அடைந்திடவும் வேண்டி கடும் தவம் புரியலானார்.

    தேவி, முனிவரின் கண்முன் தோன்றி அருள்பாலித்தாள். ‘என்னை இவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபடுக! வழிபடுவோர் அனைத்து நலனும் பெற்றிடுவீர்’ என ஆசி வழங்கி மறைந்தாள் அன்னை.

    பழஞ்சிறை அம்மன் :

    முனிவர், எந்த வடிவில் காட்சியளித்து அருள்புரிந்தாலோ, அந்த வடிவிலேயே அன்னையின் சிலையை வடித்து வடதிசை நோக்கி பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அன்னையை வெகு காலம் வணங்கி வழிபட்ட அவர் இறுதியில் முக்தியை அடைந்தார்.

    நாளாவட்டத்தில் காடு அழிக்கப்பட்டு சிறைச்சாலை அமைக்கப்பட்டது. நாளடைவில் சிறைச்சாலையில் அழிந்து விட்டது. இதனால் இப்பகுதி பழஞ்சிறை என்று அழைக்கப்படுகிறது. கால மாற்றம் பல நிகழ்ந்தாலும், அம்மனின் ஆலயம் அருளால் பிரமாண்டமாய் வளர்ந்தது. இத்தல அம்மனின் முன்பாக யோகீஸ்வரரின் சிலை உள்ளது. கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள்.

    பழஞ்சிறை தேவி (அம்மன்) குடியிருத்தப்பட்டுள்ள இந்த ஆலயத்தில், அழகு வண்ணச் சிற்பங்கள் கண்களையும், கருத்தையும் கவரும்படி உள்ளன. கர்ப்பக்கிரகத்தை யானைகள், ஆறு சிங்கங்கள் சிலை வடிவில் சுமந்தபடி காட்சியளிக்கின்றன. கர்ப்பக்கிரகத்தின் மேல் பகுதியில் மும்மூர்த்தி தேவியர் மற்றும் கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரகாரத்தில் தசாவதார சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் நவக்கிரக சன்னிதி, ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சஸன், மாடன் சன்னிதிகளும் அமைந்துள்ளன.

    இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திர தினத்தன்று ஆரம்பமாகும் திருவிழா சிறப்புடையதாகும். ஆரம்ப தினம் முதல் குறிப்பிடும் படியான சில பக்தர்கள் தங்கள் இனிய குரலில் ‘தோற்றப்பாட்டு’ எனும் பாடலை பாடுகின்றனர். அன்னை பார்வதி தேவியின் அவதார மகிமை பாடும் பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இப் பாடலை பாடுபவர் நாற்பத்தொரு நாட்கள் விரதமிருந்து பாடிவருகின்றனர். அம்மனின் வரலாற்றுப் பாடலை கேட்டாலே பக்தர்களின் அனைத்து பாவங்களும் நீங்கி நற்பயன் பெறுவர் என்பது ஐதீகம்.

    கன்னியர் பூஜை :

    மாசி மாதத்தில் ஆறாவது திருநாள் தினத்தில் இரவில் நடக்கும் ‘அத்தாழை பூஜை’ வேளையில், இந்த கன்னியர் பூஜை நடத்தப்படும். அம்மன் சின்ன வயது தோற்றத்தில் காட்சியளிப்பது போல், பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை கட்டி பூஜையில் கலந்து கொள்வார்கள். இதே தினம் சுமங்கலிப் பெண்கள் சார்பில், தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையும் நடத்தப்படுகிறது. இரவு 2 மணி அளவில் ஸ்ரீபூதபலி பூனை என்ற பூஜை நடைபெறும். அம்மன் அருள் பெற்ற பூசாரி, தனது பாதங்களில் சிலம்பு அணிந்து, கரங்களில் திரிசூலம் ஏந்தி வாளுடன் பின் நோக்கி நடன மாடியபடி சென்று, பூத கணங்களுக்கு நேரடியாக காலத்திற்கேற்றபடி திக்குபலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த பூஜையின் போது ஆண்கள் மட்டுமே அனு மதிக்கப்படுவார்கள்.

    இந்த ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழா சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா வருகிற 12–ந் தேதி (செவ்வாய்) முதல் 19–ந் தேதி வரை நடைபெற உள்ளது. 12–ந் தேதி காலை 8 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டி விழா தொடங்கப்படுகிறது. மூன்றாம் நாளான 14–ந் தேதி காலை சிறுவர் களின் குத்தியோட்ட விரதம் தொடங்கி நடைபெறும். ஐந்தாம் நாள் திருவிழாவான 16–ந் தேதி, கோவில் முன் களத்தில் நாகர் படம் வரைதல் (களம் எழுதுதல்) நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏழாம் திருவிழா 18–ந் தேதி பெண்கள் கோவில் வளாகத்திலும், தெருவோரங்களிலும் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். பின்னர் அம்மனுக்கு பொங்கல் நைவேத்தியம் செய்து தீபாராதனை காட்டப்படும். 19–ந் தேதி இரவு தர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறும்.

    பஞ்ச பூதப்பொங்கல் :

    மாசித்திருவிழாவின் ஏழாவது நாளில் பூரம் நட்சத்திரத்தன்று இந்த பஞ்ச பூத பொங்கல் நடத்தப்படும். பூமி, நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் ஆகும்.

    பூமியில் கிடைக்கக் கூடிய மண்ணினால் உருவாக்கப்பட்ட பானைகளில் கைக்குத்து அரிசியை போட்டு நீர் விடுகின்றனர். மூன்றாவது தத்துவப்பொருளாய் இடம்பெறும் நெருப்பினால் பொங்கல் தயாரிக்கப்படு கிறது. காற்று தன் சக்தியை காட்டும் வகையில் வீச, நெருப்பு சுடர்விட்டு எரிகிறது. வாயு தத்துவப்பொருளை உணர்த்தும் படி அம்மனின் வாழ்த்தொலி குரவையொலி எழு கிறது. ஐந்தாவது தத்துவப் பொருளான வானம் வழியே பொங்கல் பானைகள் மீது மலர் மாலை பொழியப்படுகிறது. இதில் ஐந்து தத்துவங்களும் அடங்கியுள்ளதல்லவா! பரந்த வெளியில் பொங்கல் போடப்படுவதை சிறப்பாக கொள்ளலாம்.

    பொங்கல் நைவேத்தியத்தை கனிவுடன் தேவி ஏற்றுக்கொள்வதால் பழஞ்சிறை தேவியை பெண்களின் பொங்கல் படையலை இனிதாக ஏற்றுக்கொள்ளும் ‘பொங்கல் பிரியை’ என்றே கூறலாம்.


    சிறப்புக்கள் :

    நவராத்திரி விழா காலத்தில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன் அணையாத ‘ஹோமம்’ நடைபெறும். நவராத்திரி ஒன்பது தினங்களிலும் சண்டி ஹோமம் நடத்தப்படும். மார்கழி மாதத்தில் தேவிக்கு பஞ்சாமிருத அபிஷேகம் சித்திரை புத்தாண்டு, தமிழ் வருடப்பிறப்பில் சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடக்கும்.

    கோவிலின் வெளிப்பக்கம் அரசமரம் செண்பகமரம் உள்ளிட்ட பல்வேறு செடிகொடிகள் வளர்ந்து அழகு சோலையாக காட்சியளிக்கின்றது. இதனை ‘சர்ப்பக்காவு’ (நாகர் சோலை) என அழைக்கின்றனர். இங்குள்ள நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு–கேது தோஷம் நீங்கப்பெற்று நலன் பெறுவர்.

    பழஞ்சிறை தேவி கோவிலுக்கு வந்து சுயம்வர அர்ச்சனை நடத்தினால் திருமணத்தடை நீங்குகிறது. தேவிக்கு வழிபாடாக மாங்கல்யம் அணிவிக்கும்போது மாங்கல்ய பாக்கியம் ஏற்படுகிறது. பழஞ்சிறை தேவிக்கு ஆடை அணிவித்து அரளிப்பூ மாலை சாத்தி வழிபாடு செய்கின்றனர். மேலும் தினசரி பொங்கல் படைத்து பெண்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதும் உண்டு.

    பழஞ்சிறை தேவியை வழிபடுவோருக்கு இனி பிறவி இல்லை என்பதோடு இப்பிறவியில் தொல்லைகள் எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ்வு அமையும் என்று நம்பப்படுகிறது.

    திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் செல்லும் பாதையில் ‘அப்பலத்தரா’ என்ற இடத்தில் அமைந்துள்ளது பழஞ்சிறை தேவி கோவில்.
    Next Story
    ×