search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில்
    X
    வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில்

    வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில்

    இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோயிலாகும்.
    வேலூரைச் சேர்ந்த சதீஷ் திருமலைக்கோடி கிராமம் சென்று புற்றுக்கு 7 கன்னிப்பெண்கள் முன்பு வைக்கப்பட்ட 7 புனித குடங்களுக்கு அவர் பூஜை செய்யும் போதுமஞ்சள் நீரைக் கீழே கொட்டியபோது பூமியிலிருந்து ஒரு லிங்க வடிவில் சுயம்பு மேலே வந்தது. அந்த இடத்தில் ஸ்ரீநாராயணி கோயிலை எழுப்பி வழிபாடு செய்தார். இக்கோயிலுக்கு 9-01 -2000ல் குடமுழுக்கு நடந்தது.
    சக்கர வடிவத்தில் ஆலயத்தின் சுற்று பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. 16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப மண்டபமும், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சியும், திறந்தவெளி கலையரங்கமும், புல்வெளியும், நீரூற்றுகளும், பூங்காக்களும் இங்கு உள்ளன. இந்த கோயிலில் உலகின் மிகப் பெரிய வீணையும், 10008 திருவிளக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோயிலாகும்.

    தங்கக் கோயில் உருவாக்கப்பட்டதன் காரணம் :

    மக்கள் அனைவரும் எளிதில் கோயிலுக்கு வருவதில்லை. மேலும் ஆன்மிக கருத்துக்களை சொன்னாலும் மக்கள் விரும்பி கேட்பதுமில்லை. அதனால்தான் இந்த பிரமாண்டமான தங்கக்கோயிலை கட்டியிருக்கிறார்கள். இப்படி கட்டியதால் இந்தக்கோயிலை பார்க்க மக்கள் வருவார்கள். இந்த கோயிலில் அருள்பாலிக்கும் மகாலட்சுமியை தரிசிப்பதோடு உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்து செல்வார்கள் என்ற நோக்கத்துடன் இந்த கோயிலை கட்டியிருக்கிறார்கள்.

    தங்க கோயிலின் சிறப்பம்சம் :

    நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோயில் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்க காரணமாக திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோயிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.

    இந்த கோயிலை கட்ட 600 கோடி ரூபாய் செலவானதாக சொல்லப்படுகிறது. 1500 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது என்றும் 55000ம் சதுரடி பரப்பளவுக்கு தங்கக்கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரே செயற்கை நீர் ஊற்றுக்களும் உள்ளது.

    மண்டபத்துக்கு பின்னால் மனிதனுடைய 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் போவதை உணர்த்தக்கூடிய வகையில் 18 நுழைவு வாயில்களை அமைத்துள்ளனர். இந்த கோயில் 100 ஏக்கர் பரப்பளவிள் உள்ளது. ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் இந்த லட்சுமிநாராயணி கோயில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில் வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்படி கோயிலை அமைத்துள்ளனர்.

    இந்த அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன 10 அடுக்கு கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய விளக்கு உள்ளது. கோயிலை சுற்றிலும் புல்வெளியும், அதன் நடுவே சுதையால் ஆன துர்க்கையும், லட்சுமியும், சரஸ்வதியும், மாரியம்மன் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்குளே செயற்கையான மலைகளும், குளங்களும், நீர்வீழ்ச்சிகளும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. நவீன விளக்குகள், பழங்கால மாட கல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் இரவை பகல் போல மாற்றுகின்றன. கோயிலுக்குளே ஏராளமான மரங்கள் பச்சைப்பசேல் என்று அருமையாக காட்சியளிக்கின்றன.

    பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக செல்போன் மற்றும் கேமரா ஆகியனவும், லக்கேஜ், மற்ற பொருட்களையும் வாசலிலேயே ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்று போர்டு வைத்துள்ளனர். கோயிலில் நுழைந்து, வெளியே வரும் வரை உள்ள அனைத்து பகுதிகளும் இயற்கை எழில் சூழ மிக அருமையாக அமைந்துள்ளது
    Next Story
    ×