search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர்.
    • தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர் உமாபதி சிவாச்சாரியார்.

    உமாபதி சிவாசாரியர், சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும், சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு நூல்களை இயற்றியவர் இவரே.

    சிதம்பரம் கோவிலில் பூஜை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்தில் இருந்து நீக்கியதுடன் கோவிலில் பூஜை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார்.

    அடுத்த தடவை கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வந்தபோது அதற்கான உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம். அப்போது சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனராம்.

    அச்சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தாராம். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.

    63 நாயன்மார்களை போலவே சைவ மரபில் சந்தான குரவர்கள் என்று நால்வரைச் சொல்வார்கள். அதில் உமாபதி சிவாச்சாரியார் ஒருவர். அவர் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் அருகாமையில் உள்ள கொற்றவன்குடி என்னும் சிற்றூரில் அவதரித்தவர்.

    இவருக்கு சிதம்பரம் கொற்றவன் குடி தோப்பில் திருமடம் இருக்கிறது. நடராஜர் தரிசனத்தின் போது கவிக்கொடி ஏற்றியவர்.

    இன்று அவருடைய குருபூஜை என்பதால், அவருடைய திருமடத்தில் உமாபதி சிவாச்சாரியாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பன்னிரு திருமுறை பாடல் ஓதுதலும் நடைபெறும். இன்றைய தினம் திரு உத்தரகோசமங்கை மங்களநாதருக்கு மங்கள நாயகிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    மணிவாசகப் பெருமானுக்கு திருவுருவக்காட்சி தந்த தலம் இந்த தலம். சொக்கலிங்க பெருமாள் பார்வதிதேவியை பரதவர் குலத்தில் பிறக்கும் படியாக சபித்து சாப விமோசனமாக இத்தலத்தில் அம்பாளை திருமணம் செய்து கொண்டு வேதப் பொருளை உபதேசம் செய்ததாக புராண வரலாறு. எனவே, மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டியே இங்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    • அக்னி கேளி எனப்படும் தூத்தேரா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
    • துர்கா தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக சடங்கு நடத்தப்படுகிறது.

    மங்களூரு ரவி போசவனிக்கே அருகில் உள்ள கடேல் ஸ்ரீ துர்காபரமேஸ்வரி கோயிலில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் 'அக்னி கேளி' எனப்படும் தூத்தேரா' நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தூத்தேரா' அல்லது 'அக்னி கேளி' என்று அழைக்கப்படும் தீ சடங்கு துர்கா தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த சடங்கு நடத்தப்படுகிறது.

    துர்காபரமேஸ்வரி கோயில் நந்தினி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில் கடேலில் உள்ள பழமையான ஒன்றாகும்.

    ஆண்டுதோறும் நடைபெறும் ரவி போசவ விழாவின் ஒரு பகுதியாக, ஆத்தூர் மற்றும் கோடேத்தூர் ஆகிய இரு கிராம பஞ்சாயத்து மக்கள், கடவுளை சாந்தப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியினை கடைபிடித்து வருகின்றனர்.

    இந்த திருவிழா சுமார் 8 நாட்கள் நடைபெறும். அதன் முக்கிய பகுதியாக அக்னி கேளி நடத்தப்படுகிறது.

    இந்த அக்னி கேளி என்பது பனை ஓலையை தீயிட்டு எரித்து அதனை எதிர் குழுவினர் மேல் வீசப்படும். அதாவது இரு கிராமத்தை சேர்ந்த மக்கள் நண்பர்களாக இருந்தாலும், உறவினர்களாக இருந்தாலும், இந்த சடங்கின் போது, தீயிட்ட பனை ஓலையை ஒருவருக்கொருவர் மீது வீசுவார்கள்.

    இந்த நிகழ்வு சுமார் 15 நிமிடங்கள் நடைபெறும். அதன் பின்னர் சடங்கு நிறுத்தப்பட்டு இரண்டு கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒன்றாக கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்நிகழ்ச்சியின் போது ஆண் பக்தர்கள் மேலாடை இன்றி கலந்துகொள்வார்கள்.

    இந்த அக்னி கேளி என்பது தீய மனசாட்சியைத் தடுக்கவும், அக்னிப்ரியா துர்காபரமேஸ்வரியை மகிழ்விக்கவும் ஒரு அடையாள சைகையாகும். இதுவரை இந்த விழாவில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை என கூறப்படுகிறது.

    இந்த வழிபாட்டில் கலந்துகொள்ள தொலைதூர கிராமங்களில் இருந்து மக்கள் வருகை தருவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, கிராம மக்கள் அம்மனுக்கு ஊர்வலம் எடுத்து, ஒரு குளத்தில் நீராடுவார்கள். அதன் பின் இந்நிகழ்வு நடைபெறும்.

    • எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது.
    • கல்யாணம், ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

    அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் கால சம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.

    புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்ததாகவும். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது.

     பின்னர் மனித இனம் இறப்புகள் இன்றி பூமியின் பாரம் அதிகரிக்க அதனை தாங்க முடியாமல் பூமா தேவி சிவனிடம் வேண்டுகோள் வைக்க, பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தாக வரலாறுகள் கூறுகின்றன.

    இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60, 70, 80 கல்யாணம் ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து, சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

    இத்தகைய பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆலயத்தின் வரலாற்றை விளக்கும் வகையில், சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். இதனை முன்னிட்டு கடந்த 6- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொங்கிய பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான எமனை சிவபெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதனையொட்டி கால சம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் வீரநடன மண்டபத்திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார். பின்னர், எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, எமனை இறைவன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் தருமபுரம் ஆதீன 27 மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    அவினாசி:

    கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். இதில் விநாயகர் பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளினர்.

     நேற்று முன்தினம் இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் சிகர நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நடைபெற்றது.சிவாச்சார்யர்கள், ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் `அவிநாசியப்பா', `அரோகரா', `நமசிவாயா', சிவ... சிவ... என பக்தி கோஷமிட, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு வடக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்படுகிறது. தேரின் 2 பின் சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் சன்னை மிராசுகள் சன்னை போட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர்.

    நாளை 22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும் 25-ந் தேதி தெப்ப தேர் உற்சவமும் நடக்கிறது. 26-ந் தேதி மகா தரிசன விழாவும், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.

    அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. 92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்த படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும். எனவே தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முக்கிய இடங்களில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளில் ஆங்காங்கே நீர்-மோர் வழங்கப்பட்டது.

    • மன அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும்.
    • இஷ்ட தெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    ஜோதிட ரீதியாக சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று நேர் எதிரில் துலாம் ராசியில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாளில் பவுர்ணமி வருவதால், சித்ரா பவுர்ணமி தினமாக கொண்டாடப்படுகிறது.

    ஆத்மகாரகனும், மனோகாரகனும் 180 பாகையில் சந்திக்கும் நாள் இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மன அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும்.

    2024 ஆம் ஆண்டு இந்த வருடம் சித்ரா பவுர்ணமி எப்பொழுது கொண்டாடப்படுகிறது என்றால் ஏப்ரல் 22-ந் தேதி மாலை 5:30 மணிக்கு மேல் பவுர்ணமி திதி ஆரம்பித்தாலும் 22 -ந்தேதி முழு இரவு மூன்றாம் தேதி முழு பகலும் நமக்கு பவுர்ணமி திதியாக வருகிறது.

    இந்த சமயத்தில் ஏப்ரல் 23-ந் தேதி காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து நம் இஷ்ட தெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    முடிந்தவர்கள் காலையிலேயே நீராடி விட்டு வீட்டை சுற்றிலும் மஞ்சள் நீரால் தெளித்து விட்டு காலையில் உங்கள் வீட்டில் அருகாமையில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று 9 முறை நவகிரகத்தை சுற்றிவர பவுர்ணமி அன்று பெறக்கூடிய அனைத்து சக்திகளையும் நீங்கள் பெறலாம்.

    ஒருவேளை நீங்கள் மிகுந்த பக்தியோடு இருப்பவர் ஆயினும் சக்கரை பொங்கல் நெய்வேத்தியம் பாயாசம் போன்றவை படையெடுத்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கலாம்.

    குறிப்பாக சனி பகவான் ஜோதிடத்தில் கருமக்காரனாய் வருகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சனியை வைத்து அவரின் கர்மாவை நம்மால் கணித்து விட முடியும். இப்படியான சூழ்நிலையில் ஒருவர் ஜாதகத்தில் சனி நீச்சம் பெற்றாலோ அல்லது நாவாம்சத்தில் நீச்சம் பெற்று இருந்தாலும் அவருக்கான பலன்களை அவர் வாழ்க்கையில் அனுபவித்தே தீர வேண்டும்.

    இது மாதிரியான சமயங்களில் குருவின் பார்வை ஒன்று ஐந்து ஏழு ஒன்பது போன்ற ஸ்தானங்களில் இருந்து சனியை பார்த்தால் நிச்சயமாக கர்மாவில் இருந்து அவருக்கு விடுதலை கிடைக்கும்.

    அப்படி குரு பார்க்கும் சனி கொண்ட ஜாதகர்கள் இதுபோன்று சித்ரா பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் விரதம் இருந்தால் உடனடியாக அவர்களது கர்மா தீர்க்கப்பட்டு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சுப காரியங்களோ நடக்க வேண்டிய நல்லதுகளோ அல்லது பணம் சம்பந்தமான தொழில் சம்பந்தமான வியாபாரம் சம்பந்தமான எந்த ஒரு தடையாக இருந்தாலும் உடனடியாக நிவர்த்தி ஆகும் என்பது தான் முன்னோர்கள் கூறி வைத்த கருத்து.

    சிவனையும் பார்வதியும் ஒரு சேர இருக்கும் தளங்களுக்கு சென்று நீங்கள் பவுர்ணமி தினத்தில் வழிபடுவது சிறப்பு.

    • நடவாவி கிணறு உற்சவம் வருகின்ற 23-ந் தேதி நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டு வரதர் அருள் பெறுவார்கள்.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும், நடவாவி கிணறு உற்சவம் வருகின்ற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    நடவாவி உற்சவம்

    அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பௌர்ணமி வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் வரதர், அந்த திருநாளில் யாகம் வளர்த்து நெருப்பாலும், நடவாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் வரதராஜ பெருமாளை ஆலயத்திற்கு கொண்டு வருகின்றார்கள்.

    மிகவும் பிரசித்தி பெற்ற இந்த உற்சவத்தை ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டு வரதர் அருள் பெறுவார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி முன்னிட்டு நடவாவி உற்சவம் நடைபெற உள்ளது. முன்னதாக சித்திரை 9 (22-04-2024) திருவவதார உற்சவம் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தின் பொழுது விடியற்காலை மூன்று மணிக்கு திருமஞ்சனம் கொண்டு வந்து, பெருமாளுக்கு திருவாராதனை நிவேதனம் செய்யப்பட்டு, பெருமாள் திருமலையில் இருந்து இறங்குதல் மற்றும் பெருமாள் புண்ணியகோடி விமானத்தில் புறப்படுதல் விழா நடைபெறும் இரவு 7:30 மணிக்கு பெருமாள் திருக்கோவிலுக்கு எழுந்தருளி கண்ணாடி அறையில் தரிசனம் தருவார். தொடர்ந்து இரவு 9 மணி அளவில் பெருமாள் திருக்கோவில் இருந்து மாடவீதி புறப்பாடு நடைபெறும்.

    நள்ளிரவு ஒரு மணி அளவில் பெருமாள் செவிலிமேடு கிராமங்களில் வீதி உலா நடைபெறும். தொடர்ந்து காலை 6 மணி அளவில் புஞ்சையரசந்தாங்கல் கிராம மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறும். இதனைத் தொடர்ந்து வாகை கிராம மண்டகப்படி நிகழ்ச்சியும், தூசி கிராமத்திற்கு வீதி புறப்பாடும் நடைபெறும். தொடர்ந்து 23-ந் தேதி மதியம் ஒரு மணி அளவில் தூசி கிராம ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவிலில், சுவாமி ஓய்வு எடுப்பார்.

    மீண்டும் புறப்பட்டு நான்கு மணி அளவில் அப்துல்லாபுரம் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்று, அயங்கார் குளத்திற்கு எழுந்தருளி கிராம வீதி புறப்பாடு நடைபெறும். இரவு 7 மணி அளவில் பெருமாள் ஐயங்கார் குளம் ஸ்ரீ சஞ்சீவிராயர் கோவில் இறங்குதல் நடைபெறும், தொடர்ந்து திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    தொடர்ந்து இரவு 9 மணி அளவில், சஞ்சீவ ராயர் திருக்கோவிலில் இருந்து நடவாவி கிணற்றுக்கு புறப்பாடு நடைபெறும். 9.30 மணி அளவில் பெருமாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து இரவு 10 மணி அளவில் நடவாவி கிணற்றில் இருந்து பாலாற்றுக்கு எழுந்தருள் உள்ள நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 24-ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில், பாலாற்றில் எழுந்தருளி செவிலியமேடு வீதி மண்டகப்படி நிகழ்ச்சியும், பங்காரு காமாட்சி காலணி மண்டக படியும் நடைபெறும்.

    விடியற்காலை 3 மணியளவில் பெருமாள் தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி காட்சி தருவார். 4 மணியளவில் திரு கோவிலுக்கு எழுந்தருளி திருமுற்றவெளி நான்கு கால மண்டபத்தில் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். இதனைத் தொடர்ந்து மதுரகவிகள் சாத்துமுறை நடைபெறும்.

    இறுதி நாள் உற்சவம்

    தொடர்ந்து 25-ந் தேதி தோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. பெருமாள் திருக்கோவில் இருந்து பல்லாக்கில் மாட வீதியாக தோட்டத்திற்கு புறப்படும், நடைபெற உள்ளது. தொடர்ந்து 26-ந் தேதி வெள்ளிக்கிழமை, ஸ்ரீ பெருமாள் தோட்டத்திலிருந்து திருக்கோவில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். பெருமாள் திருக்கோவிலுக்கு எழுந்தருளி திருமுற்றவெளி நான்கு கால் மண்டபத்தில் எழுந்தருளி காட்சி தருவார்.

    தொடர்ந்து பெருமாள் கண்ணாடி அறைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெறும். 26-ந் தேதி இரவு 7 மணி அளவில் கண்ணாடி அறையில் இருந்து பெருமாள் திருமலைக்கு புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்று உற்சவத்தில் நிறைவு பகுதி வந்தடையும்.

    • விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம்.
    • மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும்.

    சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும்.

    இன்று சித்திரை வளர்பிறை பிரதோஷ நாள். பல திருக்கோயில்களில் சித்திரை விழாக்கள் நடைபெற்று வரும் இத்தருணத்தில் பிரதோஷமும் சேர்ந்து வருவது சிறப்பு. பிரதோஷ விரதம் இருப்பவர்கள் காலை முதல் மாலை உபவாசம் இருந்து மாலையில் பிரதோஷ வேளையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் அபிஷேகங்களை தரிசித்து, பிராகாரத்தை வலம் வந்து, விரதத்தை நிறைவு செய்வதன் மூலம் பிற தோஷங்கள் எதுவாக இருந்தாலும் வெற்றி கொள்ளலாம்.

    பிரதோஷ வேளையில் சிவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.

    • வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
    • செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

    குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

    வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

    பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள். லட்சுமி, வழிபாட்டின்போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.

    மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

    லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

    மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

    வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

    தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

    • முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் உண்டு.
    • மும்மலங்களை அடக்கி அருள்பவன் முருகன்.

    முருகனின் வாகனம் என்றாலே, மயில் தான் அனைவர் எண்ணத்திலும் வரும். ஆனால் முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் உண்டு. அவை மயில், யானை, ஆட்டுக்கிடா ஆகும்.

     * தேவர்களுக்கு அருள் செய்த தலைவனாக இருப்பதாலும், ராஜகம்பீரம் கொண்டவர் என்பதாலும் அவருக்கு யானை வாகனம் பொருத்தமாக வழங்கப்பட்டுள்ளது.

    * ஒருசமயம் நாரதர் வேள்வி ஒன்றை செய்தார். அந்த வேள்வியில் மந்திரங்களை தவறாக உச்சரித்தார். அதன் விளைவாக யாகத்தில் ஒரு பெரிய ஆட்டுக்கிடா தோன்றியது. யாராலும் அடக்க முடியாத வலிமையுடன் அது விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் அச்சுறுத்தியது. அச்சம் கொண்ட தேவர்கள் முருகனிடம் சென்று முறையிட்டனர். முருகப்பெருமான் வீரவாகு தேவரை அனுப்பி அந்த ஆட்டுக்கிடாவைப் பிடித்து அடக்கச் செய்து தனது வாகனமாக ஆக்கிக்கொண்டார்.

     * சூரபதுமனுடன் முருகப்பெருமான் போர் செய்தார். ஒவ்வொரு முறையும் ஒரு வடிவம் கொண்டு போரிட்டான் சூரபதுமன். ஆனாலும் அவன் தோல்வியையே தழுவினான். ஒரு முறை சக்கரவாகப் பறவையாக மாறி போரிட்டான். அப்போது இந்திரன் மயிலாக மாறி முருகனை தாங்கினான். பின்னர் சூரன் மாமரமாகி கடல் நடுவே மறைந்து நின்றான். அந்த மரத்தை வேல் கொண்டு இரண்டு கூறாக முருகன் பிளந்தார். அதில் ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் மாறியது.

    மயில் `ஆணவம்' என்றும், யானை `கன்மம்' என்றும், ஆடு `மாயை' என்றும், மும்மலங்களை அடக்கி அருள்பவன் முருகன் என்பதே இதன் சான்று.

    • சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில்.
    • மூன்று நிலைகளில் திருமால் காட்சி தரும் கோவில்.

    கோவில் தோற்றம்

    இந்த ஆலயத்தின் கோபுர வாசலைக் கடந்ததும், பலிபீடம், அதன் அருகே அபூர்வ கோல கருடாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் இந்த கருடாழ்வார் அமர்ந்துள்ளார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடை மீது படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இவர் காட்சி தருகிறார். இது ஓர் அபூர்வக் கோலம் ஆகும்.

     நின்ற நிலை, அமர்ந்த நிலை, கிடந்த நிலை என மூன்று நிலைகளில் திருமால் காட்சி தரும் கோவில், அமர்ந்த நிலையில் வணங்கி நிற்கும் கருடாழ்வார் அருளும் தலம், விஜயநகர மன்னர் காலத்துக் கோவில், செஞ்சி நாயக்கர்கள் திருப்பணி செய்த ஆலயம், சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோவிலாகும்.

     புராண வரலாறு

    கலியுகத்தின் தொடர்ச்சியில் சடமர்ஷனர் என்ற மகரிஷி, வடநாட்டில் தவமிருந்து வந்தார். ஆனால், அப்பகுதி முழுவதும் அமைதி குலைந்து, போர்ச்சூழலும், அதர்மமும் தலைதூக்கியதால் அமைதி வேண்டி தென்னாட்டுக்குப் பயணமானார். தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதிக்கு வந்தார்.

    அப்போது இப்பகுதி பஞ்சகிருஷ்ண ஆரண்யம் என்னும் வனப்பகுதியாக இருந்தது. வனத்திற்குள் சடமர்ஷனர் அலைந்து திரிந்தபோது, வெப்பம் தாளாமல் தவித்தார். அப்போது அங்கே தென்கரை ஓரமாக ஓடிய நீரூற்று தென்பட்டது. அதில் தன் கால்களை நனைத்து வெப்பத்தை தணித்தார்.

    பின்னர் அந்த நீரூற்று ஓடிய பாதையில் பயணம் செய்தார். அந்த நீரூற்று பாதை, வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார்.

    அந்த மகரிஷியின் தவத்தால் மகிழ்ந்த திருமால், தாயாரோடு அவருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த மகரிஷி, "இறைவா.. தாங்கள் இந்த உலகத்தைக் காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் காட்டி அருள வேண்டும்" என்று கேட்டார். அதன்படியே அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தார்.

    பின்னர் மகரிஷி, "இந்த இடத்தில் நின்ற கோலத்திலும், கிடந்த கோலத்திலும் நிரந்தரமாய் தங்கியிருந்து அடியவர்களுக்கு அருளாசி வழங்க வேண்டும்" என்றும் கேட்டார். அதன்படியே நின்ற கோலத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபாலராகவும், கிடந்த கோலத்தில் ஆதிசேஷனின் பாம்பணையில் பள்ளிகொண்ட ராமராகவும் காட்சி அருளினார்.

    தொன்மைச் சிறப்பு

    தமிழகக் கோவில்களின் வரலாற்றை அறிய உதவும் மெக்கன்சி வரலாற்றுக் குறிப்புகளும், கி.பி. 1464-ல் எழுதப்பட்ட செப்புப் பட்டயமும், புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பேடும் இத்தலத்தின் தொன்மையையும், வரலாற்றினையும் அறிய உதவுகிறது.

    செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் காலத்தில் (கி.பி. 1464-1478), இத்திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டு, செழிப்புடன் விளங்கியது. தெலுங்கு மன்னனின் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட்டம்மாள் என்ற பெண்மணியின் நினைவாக இவ்வூர் `வெங்கட்டம்மாள்பேட்டை' என அழைக்கப்பட்டது. இதுவே மருவி, தற்போது 'வெங்கடாம்பேட்டை' என அழைக்கப்படுகிறது.

    கி.பி.1464-ல் இருந்து சுமார் 12 ஆண்டுகள் செஞ்சி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் சிறப்புப் பெற்றிருந்ததை, செப்புப் பட்டயத்தின் வாயிலாக அறிய முடிகிறது. புதுச்சேரியை ஆண்ட பிரஞ்சுக் காரர்களின் ஆட்சியில் துபாஷி எனும் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்த ஆனந்தரங்கம் பிள்ளைக்கு இவ்வூர் மானியமாக வழங்கப்பட்டதாகத் தலவரலாறு கூறுகிறது.

    மேலும், புதுச்சேரியின் வரலாற்று ஆவணமாகத் திகழும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் இவ்வூர் வெங்கட்டம்மாள் பேட்டை என்றே குறிப்பிடப்படுகிறது.

    ஆலய அமைப்பு

    ஊரின் கிழக்கே பெரிய மதில்சுவர்களைக் கொண்டு சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் சிதிலம் அடைந்த ஏழுநிலை ராஜ கோபுரத்துடன் திருக்கோவில் அமைந்துள்ளது. வாசலின் முன்பாக கருட மண்டபம் காணப்படுகிறது. ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கி.பி.1884-ம் ஆண்டின் கல்வெட்டு விஜயநகர மன்னர் காலத்தை உறுதி செய்கிறது.

    மகாமண்டபத்திற்குள் தெற்கு நோக்கி, வைகுந்த வாசன் அமர்ந்த நிலையில் அருள்கிறார். அவருக்கு ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து நிற்கிறார். இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப காட்சி கொடுத்த வேணுகோபாலரை தரிசிக்கலாம்.

    கருவறைக்குள் சுமார் ஆறடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி, மற்ற இரு கரங்களில் புல்லாங்குழல் பிடித்து ஊதும் பாவனையில் வலது காலை சற்றே மடித்து, பெருவிரலால் தரையில் ஊன்றியுள்ளார். நின்ற நிலையிலான இந்த எழிலான கோலத்தைக் காண கண்கோடி வேண்டும். வேணுகோபால சுவாமியின் இருபுறமும் ருக்மணி மற்றும் சத்யபாமா காட்சி தருகின்றனர்.

    மூலவரைத் தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார், தனிச் சன்னிதியில் உள்ளார். பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

    வடக்கே ஆண்டாள் சன்னிதி உள்ளது. இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் ராமபிரான் அருளும் சயனக்கோலம் நம்மை பரவசப்படுத்துகிறது. இவரது மார்பில் திருமகளும், திருவடியில் சீதாதேவியும், வீர ஆஞ்சநேயரும் உள்ளனர்.

    இந்த ஆலயத்தில் ஆவணி மாதம் 25-ந் தேதியில் இருந்து 6 நாட் களுக்கு காலை 6 மணிக்கு சூரியன் தன் கதிர்களால் மூலவரை வணங்குகிறார். அதேபோல புரட்டாசி மாதப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும், தலா மூன்று நாட்கள் சந்திரன் தன் ஒளிக் கதிர்களை செங்கமலவல்லி தாயார் மீது பாய்ச்சுகிறார்.

    ஊஞ்சல் மண்டபத்தில் அருகே அழகிய திருக்குளம் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்தக் குளத்தின் கிழக்குக் கரையில் கருடாழ்வார் சன்னிதியும் உள்ளது. கோவிலின் எதிரே சுமார் ஐம்பதடி உயர பதினாறு கற்தூண்கள் கொண்ட ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தில் குதிரை வீரர்களின் உருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.

    ஊஞ்சல் மண்டபத்தின் வடகிழக்கில் திருமால் தன் சக்கரத்தை ஏவி உருவாக்கிய சக்கரத் தீர்த்தம் கிணறு வடிவில் அமைந்திருப்பதாக தல வரலாறு கூறுகிறது.

    இவ்வாலயத்தில் தெலுங்குப் புத்தாண்டான யுகாதி பண்டிகை, கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள் ஆகியவை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் வெங்கடாம்பேட்டை உள்ளது. சென்னைக்குத் தெற்கே 215 கிலோமீட்டர் தொலைவிலும், வடலூருக்கு வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்திலும், கடலூருக்கு தெற்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது.

    • மூலவர் நாகநாதர் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.
    • ராமநாதர் சன்னதியில் ராமரின் பாதம் உள்ளது.

    தலவரலாறு

    பாதாளத்தை ஆண்ட நாகவேந்தனாகிய ஆதிசேஷன் தனக்கு குழந்தை வேண்டி குடந்தை முதல் நாகைக்காரோணம் வரை நான்கு தலங்களுக்கும் சென்று வழிபடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டார். பின்னர் இறைவன் அருளால் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை மூன்று தனங்களுடன் இருந்தது கண்டு வருந்தினர்.

    அப்போது அசரீரி தோன்றி, "இக்குழந்தைக்கு தக்க வயது வந்தபோது இது எந்த ஆடவனைப் பார்க்கும்போது இதன் மிகை தனம் மறையுமோ, அவனே இவளுக்கு கணவனாவான்" என்று கூறியது.

    அதன்படி, ஒருநாள், தேவதீர்த்தக்கரையில் அரசகுமாரன் சாடீசுகன் என்பவனைக் கண்டதும் மிகைதனம் மறைந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து காதல் கொண்டனர். காமவயப்பட்ட நாக கன்னிகை, தன் பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்துகொள்ள எண்ணி சுரங்கம் வழியாகப் பாதாளம் சென்றாள். பின்னர் நாக கன்னிகையின் பிரிவால் வருந்திய அரசகுமாரன், பாதாளம் செல்லும் வழி தெரியாமல் பலவாறு புலம்பி இறைவனிடம் முறையிட்டான்.

    இறைவன் அவனுக்கு பாதாளம் செல்லும் வழியைக் கூற, அவனும் அங்கு சென்று நாக கன்னிகையை மணந்தான். தன் மகளை மணம் முடித்து கொடுத்தபின் நாகை காரோணம் வந்து தான் பிரதிஷ்டை செய்த நாகநாதர் கோயில் அருகில் குளம் அமைத்து, அதற்கு நாகதீர்த்தம் என்று பெயரிட்டார்.

    ஆதிசேடன், மாசி சிவராத்திரியின் போது ஒவ்வொரு யாமமும் குடந்தை, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் ஆகிய தலங்களில் வழிபட்டு, நாலாம் யாமத்தில் நாகை காரோணரை மலர்கொண்டு வழிபட்டு பூஜையை நிறைவு செய்வார். ஒருநாள் நாகநாதர் இவனது பூஜையில் மகிழ்ந்து இறைவன் காட்சி தந்து, "வேண்டும் வரம் கேள்" எனக் கூறினார்.

    அதற்கு ஆதிசேடன், "இறைவா, இந்நகர் என் பெயரால் வழங்க வேண்டும். நான் பிரதிஷ்டை செய்த லிங்கம் என் பெயர் கொண்டு விளங்கவும், தாங்கள் இதில் இருந்து வேண்டுபவர்களுக்கு வேண்டிய பலன்களை தந்தருள வேண்டும். மேலும் இவ்வூர் வளம்பெற்று விளங்க ஆறு ஒன்று இப்பகுதியில் ஓடிக் கடலில் கலக்க வேண்டும். இவ்வாறு காவிரி தோன்றுவதற்கு முன்னே தோன்றுவதால், `விருத்த காவிரி' எனப் பெயர் பெற வேண்டும்" என்றார்.

    நாகனது வேண்டுகோளுக்கு இணங்கிய இறைவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று வரமளித்தார். தங்கள் தலைவனாகிய நாகன் வந்து நகர் உண்டாக்கி, நாகநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறுபெற்ற பெருமையை அறிந்து, வாசுகி, குளிகன், சங்கபாலன் ஆகியோர் இக்கோயில் வந்து நாகநாதரை வழிபட்டு, தங்கள் பெயரால் மேலத்திருச்சுற்றில் அருள்குறிகள் நிறுவிப் பூஜித்து பேறு பெற்றுப்போயினர்.

    வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    கோவில் அமைப்பு

    நாகநாத சுவாமி கோயில் வலது புறத்தில் உள்ள தென்திருச்சுற்று அருகில் அர்த்த மண்டபத்துடன் கூடிய ஒரு கோயில் உள்ளது. அதில் உள்ள இறைவனுக்கு, "ராமநாத சுவாமி" என்று பெயர். இதற்கு ஒரு காரணம் உண்டு.

    கோசலநாட்டின் தலைநகரான அயோத்தி வேந்தன் ராமபிரான் திருமுடி துறந்து, சிற்றன்னையின் சொற்படி மனைவி சீதையுடனும், தம்பி லட்சுமணனுடனும் கானகம் சென்றார். காட்டில் வாழ்ந்து வரும்போது ராமன் மனைவியை ராவணன் என்ற அசுரன் அபகரித்துச் சென்றான். மனைவியைத்தேடி, தம்பியும் தானுமாகக் காட்டில் பல இடங்களில் அலைந்துகொண்டு கிஷ்கிந்தை என்ற நகருக்கு வந்தார்.

    கிஷ்கிந்தையின் மன்னனான சுக்ரீவனைக் கண்டு, அவனது நட்பைப் பெற்றார். அவனது உதவியால் வானரப்படைகளைக் கொண்டு இலங்கைத்தீவில் தன் மனைவி இருப்பதை அறிந்தார். இலங்கை செல்ல கடலில் பாலம் அமைக்க எண்ணினார். இவ்வாறு ஆலோசித்துக் கொண்டு தம்பியுடன் கீழக்கடற்கரை ஓரமாக வந்துகொண்டிருந்தார்.

    வரும் வழியில் நாகைக்காரோணம் வந்தார். விருத்த காவிரி ஆற்றின் சங்கமத்தில் நீராடி, வெண்ணீறு அணிந்து, ஐந்தெழுத்தை உச்சரித்து கோயில் சென்று காரோணப் பெருமானை வணங்கினார். பின்பு அக்கோயிலின் மேல் திசையில் நாகன் பூஜித்த நாகநாதரை வணங்கினார். அப்பெருமானுக்கு தென்புறம் ஒரு அருள்குறி நிறுவ பூஜித்தார். பூஜைக்குகந்த பெருமான் அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார்.

    சிவபெருமானைக் கண்ட ராமன் அவரை வலம் வந்து போற்றி வணங்கினார். தனது மனத்துயரை போக்குமாறு கேட்டுக்கொண்டார். பெருமானும் "உனது குறைகளை கூறுவாய்" என்றார்.

    "என் மனைவியை ராவணன் என்ற அரக்கன் கவர்ந்து சென்றுள்ளான். அவன் வாழும் இலங்கை நகர் செல்ல கடலிடத்தை மலைகளால் அடைத்து வழிசெய்ய வரம் வேண்டும். அத்துடன் நீர் நான் நிறுவிய லிங்கத்துள் என்றும் இருந்து வழிபடுபவரது குறைகளைத் தீர்க்க வேண்டும். இந்த லிங்கம் ராமநாதன் என்று என் பெயர் கொண்டு விளங்க வேண்டும்" என்றார். அதன் காரணமாக இப்போது ராமலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

    சிவபெருமான் கூறியவாறே ராமன், ராவணவதம் நிகழ்த்தி, சீதையை சிறை மீட்டுக்கொண்டு திரும்ப நாகை அடைந்தார்; சீதையுடன் கடலில் நீராடி, கருந்தடங்கண்ணி உடனாய காரோணரை வழிபட்டு, முன்பு தான் பிரதிஷ்டை செய்த மூர்த்தியாகிய ராமநாதரை வழிபட்டு, பின் தன் நகராகிய அயோத்திக்கு எழுந்தருளினார். இது கிருத்திகை நட்சத்திர பரிகார தலம் ஆகும். இக்கோயிலில் நவக்கிரகங்கள் கிடையாது.

    இங்கு விநாயகர், பஞ்ச லிங்கங்கங்கள், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர், சனிபகவான் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. இங்கு தெட்சிணாமூர்த்தி தனி கோயிலில் அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர் வலஞ்சுழி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு நாகருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.

    இங்கு மூலவர் நாகநாதர் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இங்கு நாகநாதர், ராமநாதர் என்ற இரு சிவன் சன்னதிகளும், அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி என்ற இரு அம்மன் சன்னதிகளும் தனித்தனியாக உள்ளது சிறப்பு. ராமநாதர் சன்னதியில் ராமரின் பாதம் உள்ளது. இக்கோயில் மூலவரின் திருநாமத்தின் அடிப்படையில்தான் இந்த ஊருக்கே "நாகப்பட்டினம்" என்ற பெயர் வந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் தசமி தர்மராஜா தசமி.
    • தர்மராஜாவையும், குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்கலாம்.

    தசமி திதி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களைத் தொடர்ந்து வரும் பத்தாவது நாள் ஆகும். இவற்றுள் பௌர்ணமியில் இருந்து வரும் பத்தாவது நாள் கிருஸ்ணபட்ச தசமி என்றும் அமாவாசையில் இருந்து வரும் பத்தாவது நாள் சுக்கிலபட்ச தசமி என்றும் அழைக்கப்படுகின்றது.

    தசமி திதி ஆனது வீரபத்திரன் மற்றும் தர்மராஜா போன்ற தெய்வங்களுக்கு உரிய நாளாக காணப்படுகின்றது. இந்த நாளில் மதம் சார்ந்த நிகழ்வுகளை மேற்கொள்ளலாம். ஆன்மீக செயல்களில் இந்த தசமி திதியில் ஈடுபடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

    இன்று தர்மராஜா தசமி. பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் தசமி தர்மராஜா தசமி கொண்டாடப்படுகிறது. இதற்கான கோயில் வலங்கைமான் நரிக்குடி கிராமத்தில் உள்ளது. புவனேஸ்வரி சமேத கோயிலில் இவ்விழா சிறப்பாக நடைபெறும் பல்வேறு நோய்களிலிருந்து விடுபடவும் மரண பயத்தை நீக்கவும் இந்த நாளில் இருந்து தர்மராஜாவையும் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கலாம்.

    மேலும் தசமி திதியில் சுப காரியங்கள், புதிய தொழில்கள் போன்றன செய்யலாம். இவை தவிர திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம் வாங்கலாம். மேலும் திருமணம், கிரகப்பிரவேசம், போன்ற நிகழ்வுகளும் அரச காரியங்கள், வெளியூர் பயணங்கள் போன்ற அனைத்து சுப காரியங்களிலும் ஈடுபடலாம். அத்தோடு கஷ்டப்படுபவர்களுக்கு பண உதவி கடன் கொடுக்கலாம்.

    ×