search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நினைத்த காரியங்கள் நிறைவேற கருட காயத்ரி மந்திரம்
    X

    நினைத்த காரியங்கள் நிறைவேற கருட காயத்ரி மந்திரம்

    கருடனை வழிபடும் போது கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
    மகாவிஷ்ணுவின் வாகனங்களில் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுபவர் கருடன். பறவைகளுக்கு தலைவனாக விளங்குபவர் இவர். கருடன் பிறந்தபோது, அவரது தாய் வினதை அடிமை வாழ்வில் இருந்தார். சொந்த சகோதரியான கத்ரு தான், அவரை அடிமையாக வைத்திருந்தாள்.

    இந்திரனிடம் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால், வினதையை விடுவிப்பதாக கூறினாள் கத்ரு. எனவே தேவலோகம் சென்று, இந்திரனுடன் பேரிட்டு அமிர்தத்தைக் கொண்டு வந்தார் கருடன். இதையடுத்து வினதை விடுவிக்கப்பட்டார். வினதை விடுதலையானதும், கத்ருவிடம் இருந்த அமிர்தத்தை எடுத்துச் சென்று மீண்டும் தேவலோகத்திலேயே ஒப்படைத்துவிட்டார் கருடன்.

    அவரது வீரச் செயல்களைக் கண்ட மகாவிஷ்ணு, கருடனை தன்னுடைய முதன்மை வாகனமாக ஏற்றுக்கொண்டார். மகாவிஷ்ணு, மனிதனின் பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம் போன்றவை பற்றி கருடனிடம் கூறிய விவரங்களே ‘கருட புராணம்’ என்று அழைக்கப்படுகிறது. நம்மில் பெரும்பாலானவர்கள், வீட்டை விட்டு வெளியே வரும்போது கருடன் வானில் தென்பட்டால், நல்ல சகுனம் என்று கருதுவது வழக்கத்தில் இருக்கிறது. அழகிய சிறகுகளைக் கொண்ட கருடன், சர்ப்பங்களை உணவாகக் கொள்பவர். எனவே இவரை வழிபட்டால் நாகதோஷம் விலகும் என்று கூறப்படுகிறது.

    தன்னை வழிபடும் பக்தர்களின் குறைகளை கருடன், தன்னுடைய எஜமானரான மகாவிஷ்ணுவிடம் கொண்டு செல்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கருடனை வழிபடும் போது கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

    கருட காயத்ரி மந்திரம்

    ‘ஓம் தத்புருஷாய வித்மஹே
    ஸூவர்ண பட்சாய தீமஹி
    தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’

    பரம புருஷனை அறிந்து கொள்வோம். சொர்ணத்தைப் போல் ஒளிவீசும் அவன் மீது தியானம் செய்வோம். கருட பகவானான அவர் நம்மை காத்து அருள் செய்வார் என்பது இதன் பொருளாகும்.

    இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து கருடனை வழிபடுபவர்களுக்கு, விஷ ஜந்துகளால் ஆபத்து நேராது. தத்துவ அறிவு உண்டாகும். கருடனைத் துதித்தால் நாராயணனின் அருளும் கிடைக்கும். பகை விலகும். ஆபத்து அகலும். நல்ல காரியங்கள் நடந்தேறும்.
    Next Story
    ×