search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆனந்தம் வழங்கும் ஆருத்ரா தரிசனம் - விரதம் இருப்பது எப்படி?
    X

    ஆனந்தம் வழங்கும் ஆருத்ரா தரிசனம் - விரதம் இருப்பது எப்படி?

    மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும்.
    2-1-2018 ஆருத்ரா திருநாள்

    கிருஷ்ண பரமாத்மா, ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவத் கீதையில் கூறியிருப்பதைப் போலவே, ‘நட்சத்திரங்களில் நான் திருவாதிரை’ என்று சொல்கிறார். அந்த அளவுக்கு மகத்துவம் மிகுந்த நட்சத்திரம் திருவாதிரை. இது சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் என்பது கூடுதல் சிறப்பாகும்.

    ஒரு சிறப்பு, மற்றொரு சிறப்புடன் சேரும்போது அவற்றின் சிறப்பு பன் மடங்காகும் என்பதில் சந்தேகமில்லை. அதன் அடிப்படையில் மார்கழி என்ற சிறப்பான மாதத்தில் வரும் சிறப்பு மிகுந்த நட்சத்திரம் திருவாதிரையும் பெரும் பேறு பெற்றதாக திகழ்கிறது. இந்த நட்சத்திர நாளில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த வழிபாடானது பன் மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரி வழங்குவதாக உள்ளது.

    நடராஜரின் ஆருத்ரா தரிசனம், அவரது ஐந்தொழில்களான ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே கோவில்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.

    ஒரு முறை மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தார். விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்து கொண்டிருந்தாள் லட்சுமிதேவி. கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, பரவச நிலைக்கு சென்று விட்டார். ஆனந்தத்தின் அவரது கைகள் தாளமிட்டன. மகாவிஷ்ணுவின் இந்த நிலையைக் கண்டு ஆதிசேஷனும், மகாலட்சுமியும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்.

    கண்விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர். ‘சுவாமி! என்றைக்கும் இல்லாத திரு நாளாக இன்று நீங்கள் மனமுருக அற்புதம் என்று கூறியதன் பொருள் என்ன?’ என்றனர்.

    ‘திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால் தான் அவ்வாறு கூறினேன்’ என்றார் மகாவிஷ்ணு.

    அவர், சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்லச் சொல்ல ஆதிசேஷனுக்கு உடல் சிலிர்த்தது. ஆதிசேஷனின் பரவசத்தை கண்ணுற்ற மகாவிஷ்ணு, ‘ஆதிசேஷா! உனது ஆசை எனக்குப் புரிகிறது. நீயும் சிவபெரு மானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டும் என்றால், பூவுலகில் பிறந்து, தவம் இருக்க வேண்டும். அப்போது அந்த அற்புத நடனத்தை நீ காணலாம். இப்போதே புறப்படு’ என்று கூறி அனுமதி அளித்தார் மகாவிஷ்ணு.

    ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். அவருடைய உடல் அமைப்பு, இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பல காலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒரு நாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். ஈசன், தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய தினமே ஆருத்ரா தரிசன நாள் ஆகும்.

    திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி செய்து படைப்பார்கள். ‘களி’ என்பது ஆனந்தம் என்றும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்.

    மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. விபூலன், வியாக்கிரபாதர் போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர்.
    Next Story
    ×