search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வைகுண்ட பதவி தரும் விரதம்
    X

    வைகுண்ட பதவி தரும் விரதம்

    மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம்; தீர்த்தங்களில் சிறந்தது கங்கை. அதே போல் விரதங்களில் சிறப்பானதும், மகத்துவம் மிக்கதும் ஏகாதசி விரதமாகும்.
    29-12-2017 வைகுண்ட ஏகாதசி

    மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம்; தீர்த்தங்களில் சிறந்தது கங்கை. அதே போல் விரதங்களில் சிறப்பானதும், மகத்துவம் மிக்கதும் ஏகாதசி விரதமாகும்.

    சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சுழற்சி முறையில் வரும் திதிகளில் ஒன்றுதான் ஏகாதசி. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து அடுத்து வரும் 11-வது திதியே ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் பதினொன்று என்பதற்கு ‘ஏகாதச’ என்று பொருளாகும். இந்த ஏகாதசி நாட்களில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது சிறப்புக்குரியதாகும். ஆண்டிற்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். இவற்றில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று வழங்கப்படுகிறது.

    மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வந்தால், அவர் நமக்கு வைகுண்ட பதவி அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுமட்டுமின்றி, கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து மற்றும் மனம் ஆகிய பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் யாவும், பதினொன்றாவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    முரன் என்னும் அசுரன், பல வரங்களைப் பெற்று, தேவர் களுக்கும், பக்தர்களுக்கும் துன்பங்களை அளித்து வந்தான். அவனிடம் இருந்து தங்களைக் காத்து அருளும்படி, அனைவரும் சிவபெருமானைத் துதித்தனர். ஈசனோ, அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுங்கள் என்று கூறினார். அதன்படி அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.

    தேவர்களையும், மக்களையும் காக்க எண்ணிய மகாவிஷ்ணு, முரனுடன் போர் புரியத் தொடங்கினார். அவர்கள் இருவருக்குமான போர் பல ஆண்டுகள் நீடித்தது. இரு வரும் களைப்படைந்தனர். சற்றே ஓய்வு தேவை என்பதை அறிந்த இருவருமே ஓய்வெடுக்க முற்பட்டனர். அதன்படி மகாவிஷ்ணு, பத்ரிகாஸ்ரமம் என்ற இடத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

    ஆனால் நயவஞ்சகம் கொண்ட முரன், மகாவிஷ்ணு ஓய்வில் இருப்பதை தனக்கு சாதகமாக வைத்து அவரை கொல்லத் துணிந்தான். வாளை ஓங்கியபோது, மகாவிஷ்ணுவின் சரீரத்தில் இருந்து அவரது சக்தி ஒன்று பெண் வடிவில் வெளிப்பட்டது. அந்த சக்தி, முரனை அழித்து சாம்பலாக்கியது.

    கண் விழித்து எழுந்த நாராயணர், தன் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்திக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டு, அவளை திதிகளில் ஒருவராக இருக்க பணித்தார். மேலும் ஏகாதசி திருநாளில் தன்னையும், ஏகாதசியையும் போற்றி வழிபடுபவர்களுக்கு நான் சகல நன்மைகளையும் அருள்வேன் என்றும் வரம் அருளினார்.

    எனவே அந்த சிறப்பு மிக்க நாளில் நாமும் கண் விழித்திருந்து, ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் பெருமாளின் பரிபூரண அருளைப் பெறலாம்.
    Next Story
    ×