search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அச்சம் நீக்கும் ஆஞ்சநேயர் விரத வழிபாடு
    X

    அச்சம் நீக்கும் ஆஞ்சநேயர் விரத வழிபாடு

    அனுமன் ஜெயந்தியன்று, அவரை நினைத்து விரதம் இருப்பது சிறப்புக்குரியதாகும். அன்றைய தினம் விரதம் இருப்பது சகல சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும்.

    ராமாயணத்தைப் பற்றியும், ராமரைப் பற்றியும் பேசும் போதெல்லாம், அனுமனைத் தவிர்க்க முடியாது. ராமாயணத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள், உயரிய காரியங்களைச் செய்திருந்தாலும் கூட, ராமபிரானுக்கு அடுத்தபடியாக மக்கள் அனைவரும் வணங்கும் இடத்தில் இருப்பது அனுமன் மட்டுமே. தன்னலம் கருதாது, எவ்வித பலனும் வேண்டாது ராமபிரானுக்கு சேவை செய்தவர் ஆஞ்சநேயர். அப்படிப்பட்ட பக்தர்களுக்கு கடவுளின் அருகில் இடம் பதிவு செய்யப்படும் என்பதையே, ஒவ்வொரு வைணவக் கோவில்களிலும் இருக்கும் ஆஞ்சநேயர் வடிவம் நமக்கு உணர்த்துகிறது.

    சிறுவயதில் இருந்தே எவருடைய கட்டுப்பாட்டிற்குள்ளும் அடங்கி நிற்காத அனுமன், ராமருக்கும், அவரது ராம நாமத்துக்கும் மட்டுமே கட்டுண்டு இருந்தார் என்பதை புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடியும். ராமாயணத்தில் ராமபிரானுக்கு உதவி செய்வதற்காகவே, சிவ அம்சமாக, வாயு புத்தினராக அஞ்சனையின் வயிற்றில் தோன்றியவர் அனுமன்.


    சுக்ரீவனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்து, ஸ்ரீராமரைச் சந்தித்தது முதல் அவரின் அடிபற்றியே நடந்தவர். அவருக்காக பல கடின காரியங்களைக் கூட சுலபமாக செய்து முடித்தவர். ராமரின் தூதனாகச் சென்று, இலங்கை நகரையே தீக்கிரையாக்கி, ராவணனுக்கே பயத்தைக் காட்டியவர். அவர் எப்போதும் பயம் என்ற ஒன்றை உணர்ந்ததே இல்லை. ராமநாமம் அவருக்கு அத்தகைய துணிவைக் கொடுத்திருந்தது.

    வீர தீரம் கொண்ட அனுமனின் ஜெயந்தி தினத்தன்று, அவரை நினைத்து விரதம் இருப்பது சிறப்புக்குரியதாகும். அன்றைய தினம் விரதம் இருப்பது சகல சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும். மனதில் உள்ள அச்சங்களைப் போக்கும் அற்புதமான விரதம் அனுமன் ஜெயந்தி வழிபாட்டு விரதம் என்றால் அது மிகையல்ல. அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து, உணவு உண்ணாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். ஆஞ்சநேயரை ராமநாமத்தை உச்சரித்து வழிபடுவதன் மூலமாக பல நன்மைகளைப் பெறலாம். மேலும் வடை மாலை, வெற்றிலை மாலை போன்றவற்றை அணிவித்தும், வெண்ணெய் சாத்தியும் வழிபடலாம்.

    இல்லத்தில் அனுமன் படம் வைத்து, அனுமனின் வால் பகுதியில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானதாகும். அப்படி வழிபடும் போது, அவல், சர்க்கரை, தேன், கடலை, இளநீர் போன்ற பொருட்களை நைவேத்தியமாக படைக்கலாம்.
     

    அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசியன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து `ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய' என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தனம், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.

    கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து தானம் கொடுக்கலாம். மேலும் அந்த நாளில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கலாம். அனுமன் விரத தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால் சகல காரியங்களும் வெற்றி அடையும்.

    * வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்குரிய முக்கிய வழிபாட்டு தினங்களாகும்.

    * ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
    Next Story
    ×