search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நலம் யாவும் பெற ராம தூதனை விரதமிருந்து வழிபடுவோம்!
    X

    நலம் யாவும் பெற ராம தூதனை விரதமிருந்து வழிபடுவோம்!

    அனுமனுக்கு விரதமிருந்து வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால், வெற்றிகள் வந்து சேரும். சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும்.
    அனுமன் வழிபாடு ஆனந்தமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்; தடைகளை நீக்கும்; தனவரவைப் பெருக்கும். அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால், வெற்றிகள் வந்து சேரும். வடை மாலை அணிவித்து வழிபட்டால் வளர்ச்சியின் உச்சத்திற்கே செல்லலாம். அனுமனுக்கு உகந்த ஜெயந்தியான அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் 3-ந்தேதி (18.12.2017) திங்கட்கிழமை வரும் மூலம் நட்சத்திரமன்று வருகின்றது. அன்றைய தினம் அவரை ஆராதித்து வழிபட்டுக் கொண்டாடினால் பேறும் புகழும் கிடைக்கும்.

    தெய்வங்களுக்கு, உரிய விதத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. அனுமன் ‘சொல்லின் செல்வன்’ என்று பெயர் பெற்றவர். சொல்லக் கூடிய சொல்லை யோசித்து, எதைச் சொன்னால் எதிரில் இருப்பவர் மகிழச்சி அடைவாரோ அதைச் சொல்பவன் தான் கெட்டிக்காரன்.

    ராமபிரான் சீதையைத் தேடச் சொல்லி அனுமனைத் தூது அனுப்பினார். அனுமன் ஆகாய மார்க்கமாக பறந்து சென்று அசோக வனத்தில் இருந்த சீதையைப் பார்த்தார். அது அசோகவனம் அல்ல; சோகவனம் என்பதை உணர்ந்தார். காரணம் சோகத்தோடு சீதை அமர்ந்திருந்தாள்.

    அதன்பிறகு சீதையிடம் ராமனைப் பற்றி எடுத்துரைத்து விட்டு மீண்டும் ராமனிடம் வந்தார். அப்பொழுது ராமபிரான் மனதில் குழப்பம் அதிகாக இருந்தது. ‘சீதை இருக்கிறாளா? எங்கிருக்கிறாள்? எப்படியிருக்கிறாள்? கற்போடு இருக்கிறாளா? காவலில் இருக்கிறாளா?’ என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தார். அனுமனைப் பார்த்ததும் மகிழ்ச்சி கொண்டு தகவலைக் கேட்டார். அதற்கு அனுமன் மூன்றே வார்த்தையில் அவரது சந்தேகத்தைத் தீர்த்தார். அந்த சொற்கள் தான் ‘கண்டேன் அந்த கற்பினுக்கனியை’ என்பதுதான். அதாவது, ‘சீதையைக் கண்டேன். அவள் கலங்கமில்லாமல் கற்போடு இருக்கிறாள்’ என்ற பொருளில் ராமாயணம் அனுமனைப் பற்றி வர்ணிக்கிறது. அதனால் தான் அனுமன் ‘சொல்லின் செல்வன்’ என்ற பெயர் பெற்றார்.



    அப்படிப்பட்ட அனுமனை நாம் வழிபட்டால் எதிர்ப்புகளை வெல்லக்கூடிய ஆற்றல் நமக்கு வந்து சேரும். பிரிந்து இருப்பவர்களை ஒன்று சேர்க்கும் ஆற்றல் அனுமனுக்கு உண்டு. அவரைக் கைகூப்பித் தொழுதால் கருத்து வேறுபாடுகள் அகலும். இல்லத்தில் வாலில் மணிகட்டிய ஆஞ்ச நேயர் படத்தை பூஜையறையில் வைத்து அதற்கு ஒரு மண்டலம் வாலில் பொட்டு வைத்து வழிபட்டு வரவேண்டும். மேல்நோக்கிப் பொட்டு வைப்பதா? கீழ்நோக்கிப் பொட்டு வைப்பதா என்பது அவரவர்களின் கோரிக்கையைப் பொறுத்துத்தான் அமைகின்றது.

    எந்தக் கோரிக்கைக்கு அனுனை எப்படி வழிபட வேண்டும் என்பதை அறிந்து கொண்டால் வந்த துயரங்கள் விலகி ஓடும். வளர்ச்சிப் பாதையிலும் அடியெடுத்து வைக்க இயலும். ஜெய அனுமான், வீர ஆஞ்சநேயர், சிவஆஞ்சநேயர் என்று விதவிதமாக அனுமன் அருள் தருகிறார். சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலிலும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலிலும், வேகுப்பட்டி ஆஞ்சநேயர், வ.சூரக்குடி சிவஆஞ்சநேயர் திருக்கோவிலிலும் விஸ்வரூப ஆஞ்சநேயராக தரிசனம் தருகிறார்.

    சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். விரதமிருக்கும் நாட்களில் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை உணவு மட்டும் உண்டால், உன்னத பலன் கிடைக்கும்.

    அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவத்து வழிபட்டால் தடைகள் அகலும். வெற்றிலை மாலையை அணிவிப்பவர்கள் தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப, தாராபலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை அடையலாம். அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம் போன்றவை அனுமனுக்குரிய நைவேத்தியங்களாக அமைகின்றன.
    Next Story
    ×