search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விரதம் இருக்கும் விதிமுறைகள்
    X

    விரதம் இருக்கும் விதிமுறைகள்

    விரதங்கள் எல்லாவற்றிற்கும் கூடுதலான விதிமுறைகள் பொதுவானதாகவே இருக்கும். இப்போது விரதம் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பார்க்கலாம்.
    விரதங்கள் எல்லாவற்றிற்கும் கூடுதலான விதிமுறைகள் பொதுவானதாகவே இருக்கும். விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடை களை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

    ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகள் உண்டு. அதற்கு ஏற்றபடி உணவினை உட்கொள்ளுதல் நன்று. பாரணை நாளன்று உரிய நேரத்தில் சமைத்து சாப்பிடுதல் வேண்டும்.

    நோயாளர்களும், அசௌகரியமுடையோரும், பாலகர்களும், மாதவிலக்கான பெண்களும் விரதம் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள். பெண்கள் மாத விலக்காகி ஏழு தினங்கள் ஆன பின்பே விரதம் மேற் கொள்ளலாம்.

    மேலும் குழந்தை பிறந்து நாற்பத்து எட்டு தினங்களுக்குப் பிறகே குழந்தை பெற்ற பெண்கள் விரதம் கடைப்பிடிக்கலாம். குடும்ப உறுப்பினர் எவரேனும் இறந்தால், அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    விரதங்கள் இருப்பவர்கள் ஆணாக இருந்தால் முதலில் குடும்பத்தாரின் அனுமதி பெற்றே விரதம் இருக்க வேண்டும். கன்னிப் பெண்களாயின் பெற்றோரின் அனுமதியுடனும், மணமான பெண்கள் கணவனின் தாயாரான மாமியாரின் அனுமதி பெற்ற பின்னும் விரதம் இருக்க வேண்டும். பிறருக்கு உடன்பாடு இல்லாத சூழ்நிலையில் இருக்கும் விரதங்கள் முழுப்பலனை பெறமுடியாது.

    விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது.

    விரதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அடிக்கடி நீராகாரம் சாப்பிடக்கூடாது. ஓய்வு தேவை என்று பகலில் படுத்துத் தூங்கக்கூடாது. நாம் விழித்திருந்து இறைவழிபாட்டில் நமது சிந்தனையைச் செலுத்த வேண்டும். விரதம் இருப்போர் தாம்பத்திய உறவில் ஈடுபடுதல், தவறான உணர்ச்சிகளை உருவாக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தல், கேட்டல் கூடாது. விரதத்தின் போது அசைவ உணவுகளை சாப்பிடுதல், பிறருக்கு சமைத்துக் கொடுப்பது கூட தவறாகும். வெற்றிலை பாக்கு போடுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல் ஆகியவையும் கூடாது.
    Next Story
    ×