search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகசதுர்த்தி விரத பூஜை செய்வது எப்படி?
    X

    நாகசதுர்த்தி விரத பூஜை செய்வது எப்படி?

    நாகபூஜை என்பது புற்றுக்கு பால் வார்ப்பதாகும். நாகசதுர்த்தி அன்று விரதமிருந்து ஸ்நான பானங்களையும் முடித்து, நாகபூஜை செய்யப் புறப்படவேண்டும்.
    நாகசதுர்த்தி அன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து காலைக்கடன்களையும், விரதமிருந்து ஸ்நான பானங்களையும் முடித்து, சுத்தமான, உலர்ந்த மடியான ஆடையை உடுத்திக்கொண்டு, நாகபூஜை செய்யப் புறப்படவேண்டும்.

    நாகபூஜை என்பது புற்றுக்கு பால் வார்ப்பதாகும். அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் நாகங்களை சிலையாகச் செதுக்கியதைப் பிரதிஷ்டை செய்து வைத்திருப்பார்கள்.

    அதற்கு அபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும். புற்று கிடைக்காதவர்கள் அன்றைய தினம் பூமியில் பால் விழுந்தாகவேண்டும் என்பதனால் சிலர் எறும்பு புற்றுக்கும் பால் வார்ப்பது உண்டு. பூமியில் பாதாளலோகத்தில் நாகலோகம் இருப்பதால், புற்றின் வழியாக நாகங்களுக்குப்போய் பால்சேர்ந்து, பால்வார்த்த நம்மை, பாதகம் ஏதும் செய்யாமல், காத்து அருளும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

    அரசமரத்தடிக்குச் செல்லும்போது, பஞ்சினால் செய்த கோடி தந்தியம், வஸ்திரம் இவைகளை மஞ்சள் தடவி எடுத்துக்கொண்டும், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம், ஊதுவத்தி, எண்ணெய், திரி, மஞ்சள், குங்குமம், சந்தனம், சுத்தமான தண்ணீர், பசும்பால் இவைகளுடன் ஊறவைத்த எள்ளை வெல்லம் வைத்து அரைத்தும், ஊறவைத்த பச்சரிசியை வெல்லம் வைத்து அரைத்தும் இவைகளை தனித்தனியாக ஏலக்காய்போட்டு நெய்வேத்தியத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவை இரண்டும் தான் நாகசதுர்த்தி நாகபூஜைக்கு நெய்வேத்தியம் ஆகும்.



    சிலர் முளைகட்டிய பயிரையும் நிவேதிப்பார்கள். புற்றிருந்தால் முதலில் புற்றுக்கு கொஞ்சம் பாலை வார்க்க வேண்டும். அதன்பின் புற்றுக்கு மஞ்சள் குங்குமம், சந்தனம் இடவேண்டும். நாகப்பிம்பங்களுக்கு முதலில் தண்ணீர் மூன்று முறை அபிஷேகம் செய்யவேண்டும். அதன்பின் பாலை மூன்றுமுறை அபிஷேகம் செய்தபின், மறுபடியும் தண்ணீரை மூன்று முறை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    அபிஷேகம் ஆனபின் நாகங்களுக்கு மஞ்சளை தலை முதல் வால்முடிய தடவி, சந்தனம், குங்குமத்தினால் அலங்கரித்து, பூமாலைகளை அணிவித்து பஞ்சினால் செய்துள்ள கோடிதந்தியம், வஸ்திரம் இவைகளை அணிவித்து, கீழே கோலம் போட்டு, அதற்கும் மஞ்சள், சந்தனம், குங்குமம் புஷ்பங்களினால் அலங்கரித்து, பூ அட்ஷதையுடன் பூஜித்தல் வேண்டும். தேங்காய் உடைத்து, பழம், வெற்றிலை, பாக்கு இவைகளுடன், வெல்லம் கலந்து எள் விழுது, வெல்லம் கலந்த அரிசி விழுது இவைகளையும் நெய்வேதிக்க வேண்டும்.

    கற்பூரஆரத்தி எடுத்து மங்களகரமாகப் பூஜை செய்ய வேண்டும். பிரசாதத்தை எடுத்து, நாக சிலைகளுக்கு சமர்பித்து அரசமரத்தை பிரதட்சனை நமஸ்காரங்களுடன் முடிக்க வேண்டும்.
    Next Story
    ×