search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புன்னைநல்லூர் முத்துமாரிக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமை விரதம்
    X

    புன்னைநல்லூர் முத்துமாரிக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமை விரதம்

    இன்றும் தஞ்சை மக்களில் பலர் எந்த ஊரில் இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வதும், ஆவணி ஞாயிறு அன்று பக்தி சிரத்தையுடன் இருப்பதையும் பார்க்கலாம்.
    பண்டையத் தமிழர்களின் சக்தி வழிபாட்டில் மாரியம்மனுக்கே முதலிடம். மாரி எனில் ‘மழை’ என்ற பொருள் தருவதால் மழை பெறவும், நோய் பயம் நீங்கவும், பக்க துணையாக நிற்கவும், ஆகம முறைகள் தோன்றும் முன்னுரே கிராமங்கள் தோறும் மாரிக்குக் கோவில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள்.

    தமிழகத்தின் தாய் தெய்வம் மாரியம்மன் எனில் மிகை இல்லை. திருச்சி சமயபுரம், பண்ணாரி, திருவேற்காடு என்ற வரிசையில் தஞ்சை புன்னை நல்லூரும், மக்களின் மனதில் இடம் பிடித்த பிரார்த்தனை தலமாகும்.

    சோழர்களும், நாயக்கர்களும், மராட்டியர்களும் ஆட்சி செய்த தஞ்சை மண்ணில் கிழக்கு திசை காவல் தெய்வமாக புன்னைநல்லூர் முத்துமாரி, புகழோடு விளங்குகிறாள். மாரியம்மா, மாரியாத்தா, மகமாயி என்பதெல்லாம் மக்களின் அன்பு அழைப்புகள்.



    ஞாயிறு விரதம்:

    எல்லா அம்மன்களுக்கும் வெள்ளிக்கிழமையும் ஆடிமாதமும் விசேஷம் என்றால் தஞ்சை முத்துமாரிக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும், ஆவணி மாதமும் விழாக்காலம் ஆகும். ஆவணி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழாவும், திருத்தேரும், தெப்பமும் உற்சவமும் பரவசப்படுத்தும்.

    இன்றும் தஞ்சை மக்களில் பலர் எந்த ஊரில் இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வதும், ஆவணி ஞாயிறு அன்று பக்தி சிரத்தையுடன் இருப்பதையும் பார்க்கிறோம்.

    கோவிலில் கூட்டம் அதிகாலையிலிருந்தே அலைமோதும் மகளிர், ஆண்கள் மட்டுமல்லாது குழந்தைகள் கூட தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் ஞாயிறு இரவு கோவில் மண்டபங்களிலும், பிரகாரங்களிலும் படுத்துறங்கி காலையில் எழுந்து அம்மன் திருவடி தொழுது வீடு திரும்புவார்கள்.

    அதுவும் ஆவணி ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம் அவ்வளவு கூட்டம் கோவில் நிரம்பி வழிந்து குளக்கரைகளிலும் கோவிலுக்கு வெளியே உள்ள இடங்களிலும் குடும்பத்துடன் படுத்து உறங்கி நேர்த்தி கடனைச் செலுத்துகிறார்கள்.
    Next Story
    ×