search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சங்கடங்கள் தீர்க்கும் சதுர்த்தி நாயகன் விரதம்
    X

    சங்கடங்கள் தீர்க்கும் சதுர்த்தி நாயகன் விரதம்

    விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயகரின் அருள்பெற்று அனைத்து நலன்களையும், சுகங்களையும் பெறுவர். வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது.
    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளுக்கு அடுத்த 4-ம் நாள் சதுர்த்தி திதி வரும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப்பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினம் ‘விநாயகர் சதுர்த்தி’யாக கொண்டாடப்படுகிறது. இது விநாயகப்பெருமான் அவதரித்த நாள் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

    ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரமே உலகத்தின் ஆதாரமாக அமைந்துள்ளது. ‘ஓம்’ எனும் வடிவாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    ‘விநாயகர்’ என்றால் ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். விநாயகர் முழு முதற்கடவுள் ஆவார். கணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வில்லங்கங்கள், இடையூறுகள் ஏதும் ஏற்படாமல் காப்பாற்றுகிறார். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை விநாயகர் பூஜையை முதலில் செய்கிறோம்.

    கஜமுகன் என்ற அசுரன், ஈசனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றான். அந்த வரத்தின் மகிமையால் தேவர்களையும் மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.

    தேவர்களை பூண்டோடு அழித்தொழிக்க எண்ணினான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். கஜமுகனை சம்ஹாரம் செய்து தேவர்களை காப்பாற்றுவதற்காக விநாயகப்பெருமான் சதுர்த்தியன்று அவதரித்தார். விநாயகர் கஜமுகனுடன் போர்புரிந்த போது ஆயுதங்களால் அழியாத வரம் பெற்ற கஜமுகன் பெருச்சாளி உருவம் கொண்டு விநாயகரை தாக்கினான். விநாயகர் அவனை தன் வாகனமாக்கி அருள் புரிந்தார்.

    விநாயகர் பல திருவிளையாடல்களை செய்துள்ளார். காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவிரி நதியை கவிழ்த்து பெருகி ஓடச்செய்தார். விபீஷ்ணன் இலங்கைக்கு எடுத்துச்சென்ற ரெங்கநாதர் சிலையை தடுக்கும் விதத்தில் பாலகன் வடிவில் வந்து லீலைகள் புரிந்து சிலையை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். முருகன் வள்ளியை மணம் புரிவதற்கு யானை வடிவில் சென்று உதவி செய்தார். அனலா சுரன், சிந்தூரன் ஆகிய அசுரர்களை விநாயகர் விசுவரூபமெடுத்து அழித்தார். வியாசர் சொல்ல, சொல்ல மகாபாரதத்தை எழுதினார்.



    விரதம் இருப்பது எப்படி?

    விநாயகர் சதுர்த்தியன்று வீட்டை சுத்தம் செய்து கோலம்போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும். அதன் மீது தலை வாழை இலையை போட வேண்டும்.

    நுனி பாகம் வடக்கு முகமாக இருக்க வேண்டும். அந்த இலைமீது பச்சரிசியைப்பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்ரகத்தை எழுந்தருள செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் தான் விசேஷம்.

    விநாயகருக்கு கொழுக்கட்டை, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் முக்கனிகள், கரும்பு, எள், கடலை, அப்பம், மோதகம், பொரி உருண்டை போன்றவற்றை நிவேதித்து கணேச அஷ்டகம் கூறி பூஜைசெய்து அவரை வழிபடவேண்டும். விநாயகர் புராணம் படித்து மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.

    மறுநாள் புனர்பூஜையை கொண்டாட வேண்டும். தயிர்சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பிறகு குளத்திலோ, கிணற்றிலோ, பிள்ளையாரைக்கரைத்து விடலாம். பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும், எருக்கம்பூவும் விசேஷமான ஒன்றாகும்.

    விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயகரின் அருள்பெற்று அனைத்து நலன்களையும், சுகங்களையும் பெறுவர். வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது.
    Next Story
    ×