search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இன்று குடும்ப ஒற்றுமை தரும் சோமவாரம் விரதம்
    X

    இன்று குடும்ப ஒற்றுமை தரும் சோமவாரம் விரதம்

    திங்கட்கிழமையன்று (இன்று) சோமவார விரதத்தை பயபக்தியுடன் கடைப்பிடித்து, சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும்.
    21-8-2017 அமாவாசை சோமவாரம்

    சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி ஈசனை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அவனது நோயை நீக்கியதுடன், நவக்கிரகங் களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார்.

    அந்த நாள் சோமவாரம் ஆகும். அப்போது சந்திரன், ‘தனது வாரத்தில், மக்கள் விரதம் இருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும்’ என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டான். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும். அமாவாசையில் வரும் திங்கட்கிழமை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது அமாவாசை சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது ஐதீகம்.

    சித்ரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி. அவள் மீது மன்னன் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். தனது மகளுக்கு சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து ஜாதகம் எழுதும்படி உத்தரவிட்டான்.

    அந்த ஜோதிடர்களில் ஒருவர், ‘மன்னா! உன்மகள் அழகில் லட்சுமி, கலைகளில் கலைமகள், வீரத்தில் உமையவள். உலகமே போற்றிப்புகழும் கணவன் அவளுக்குக் கிடைப்பான்’ என்றார்.

    ஆனால் இன்னொரு ஜோதிடர் முகம் வாட்டத்துடன் இருந்தார். அவரைக் கவனித்த மன்னர் அவருடைய கருத்தையும் கேட்டான். அதற்கு அந்த ஜோதிடர் சொன்ன பதில் மன்னரை அதிர்ச்சி அடைய செய்தது. ‘மன்னா! உங்கள் மகள் திருமணம் ஆன சில நாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை இழப்பாள்’ என்றார்.

    இதைக்கேட்ட மன்னன் வேதனை அடைந்தான். காலம் உருண்டோடியதில், சீமந்தினி மணம் முடிக்கும் பருவத்தை எட்டியிருந்தாள். அப்போது அவளது தோழிகள், அவளுக்கு ஜாதகத்தில் இருக்கும் ஆபத்தைக் கூறினார்கள்.



    தன் நிலையை உணர்ந்தவள், யாக்ஞவல்கிய முனிவரின் மனைவி மைத்ரேயியை சந்தித்து, தன்னுடைய மனக் கவலையைக் கூறினாள்.

    சிறந்த பதிவிரதையான மைத்ரேயி, ‘கவலைப்படாதே! சோமவார விரதத்தை கடைப்பிடி. உன்னுடைய துன்பங்கள் விலகும்’ என்றாள்.

    சீமந்தினியும் முறையாக சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள்.

    சில காலத்தில் சீமந்தினிக்கும், நளனின் பேரனும், இந்திர சேனன் மகனுமான சந்திராங்கதனுக்கும் திருமணம் நடந்தது. தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

    ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. ஆனால் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி, பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்து சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். அவள் விரதத்திற்கான பலன் விரைவிலேயே கிடைத்தது.

    திடீரென்று ஒருநாள் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை நாகர்கள் அழைத்துப்போய் சிலநாட்கள் அங்கு தங்க வைத்து உபசரணை செய்ததாகவும், சீமந்தினியின் சோமவார விரதம் பற்றி கேள்விப்பட்டு, தன்னை இங்கு கொண்டு வந்து விட்டதாகவும் கூறினான்.

    இந்த சோமவார விரதத்தை திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் கடைப்பிடித்து, சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். வெகு தூரத்தில் உள்ளவர்கள், தங்கள் இருப்பிடத்தை வந்தடைவர். கணவன்-மனைவிக்கு இடையே பிரிவு இருக்காது. அப்படியே பிரிந்திருந்தாலும், அவர்கள் விரைவில் ஒன்று சேருவார்கள். மேலும் சகல செல்வங்களையும் பெற்றுத்தரும் சிறப்புமிகுந்த விரதம் இதுவாகும். களத்திரதோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள், இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
    Next Story
    ×