search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெற்றியை வரவழைத்துக் கொடுக்கும் விரதங்களும், வழிபாடுகளும்
    X

    வெற்றியை வரவழைத்துக் கொடுக்கும் விரதங்களும், வழிபாடுகளும்

    விரதம் இருப்பதன் மூலம் தெய்வங்கள் விரும்பி வந்து பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் முன்னோர்கள் விரதங்களின் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லியிருக்கின்றார்கள்.
    மனித வாழ்வில் தம் உடம்பைத் தாமே வருத்தி விரதம் இருப்பதன் மூலம் விண்ணிலிருக்கும் தெய்வங்கள் விரும்பி வந்து பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் முன்னோர்கள் விரதங்களின் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லியிருக்கின்றார்கள்.

    அப்படிப்பட்ட விரதங்கள் ஏராளமாக இருக்கின்றன. வார விரதம், தினசரி விரதம், மாத விரதம், திதிகளின் விரதம், வருட விரதங்கள், சிறப்பு விரதங்கள், பிரதோஷ விரதம், நட்சத்திர விரதங்கள் எனப்பலவகை உண்டு. ஒவ்வொரு விரதங்களுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.

    விரதங்களின் மூலம் வாழ்வை மட்டுமல்ல, உடலையும் நலமாக்கிக் கொள்ள இயலும். உதாரணமாக உண்ணாவிரதத்தின் மூலமாகத் தான் தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்தியாவிற்கு சுதந்திரத்தையே வாங்கித் தந்திருக்கின்றார். அப்படியிருக்கும் பொழுது நம்மால் ஏன் விரதமிருந்து சாதிக்க முடியாதா? நம்பிக்கையோடு விரதத்தை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஜாதக ரீதியாக நமக்கு பலன் தரும் கிரகம் எது என்று பார்த்து அதற்குரிய நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் பார்த்து விரதமிருந்து ஆலயங்களுக்குச் சென்று வந்தால் உடனடியாக நற்பலன் கிடைக்கும். தோஷங்கள் அனைத்தும் மாறி சந்தோஷங்கள் நம்மை நாடிவரும்.

    நவக்கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் அமைந்தால் வாழ்க்கைச் சக்கரம் சீராகச் சுழல முடியும். ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு அமைப்பில் அமைந்திருக்கும். எந்தக் கிரகம் பலமிழந்திருக்கின்றதோ அந்த கிரகத்தைப் பலப்படுத்துவதற்குரிய வழிபாடுகள், விரதங்களை மேற்கொண்டால் வாழ்வில் வளம் காண இயலும். பொதுவாக வாரத்தின் ஏழு நாட்களில் எந்தக்கிரகத்திற்குரிய கிழமையில் இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்தறிந்து விரதமிருப்பது நல்லது.



    சூரியன் அருள்பெற விரும்புபவர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று ஆதி வார விரதமிருப்பது நல்லது. ஞாயிறு சூரியன் உதிக்கும் முன்னால் எழுந்து சூரிய வழிபாட்டோடு சிவனையும் வழிபடுவது நல்லது.

    சந்திர பலம் வேண்டுபவர்கள் திங்கட்கிழமையன்று சோம வார விரதமிருப்பது நல்லது. திங்கட்கிழமை விரதமிருந்து தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு ஒரு சிலருக்காவது அரிசி தானமும் செய்வது நல்லது.

    செவ்வாயின் அருளைப்பெற விரும்புபவர்கள், ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தவர்கள் செவ்வாய்க்கிழமைஅன்று விரதமிருந்து முருகனை வழிபட்டு வருவதுநல்லது.

    புதனின் அருளைப்பெற விரும்புபவர்கள், கல்வி ஞானம் பெற புதன்கிழமை விரதமிருந்து மகா விஷ்ணுவை வழிபட்டு வருவதுடன் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது.

    'குரு பார்க்கக் கோடி நன்மை' என்பதால் குருவின் அருளைப் பெற விரும்புபவர்கள் வியாழக்கிழமை விரதமிருந்து முல்லைப்பூ மாலை அணிவித்து குருவை வழிபட்டு வருவது நல்லது.



    சுக்ரன் அருளைப் பெற விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை விரதமிருந்து, மாலை நேரத்தில் சிவாலயத்திற்குச் சென்று வெண் தாமரை பூவில் மாலை அணிவித்து லட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. அன்றைய தினம் அன்னதானம் செய்வது மிகவும் உகந்தது.

    சனியின் அருளைப்பெற விரும்புபவர்கள் சனிக்கிழமையன்று விரதமிருந்து எள் தீபம் ஏற்றி வழிபட்டு வருவது நல்லது. திசைமாறிய தெய்வ வழிபாடு மிகவும் நற்பலனை வழங்கும்.

    ராகுவின் அருளைப்பெற விரும்புபவர்கள் மற்றும் ராகு திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது. கேதுவின் அருளைப்பெற விரும்புபவர்கள், கேது திசை நடப்பவர்கள் விநாயகப் பெருமானை முறையாக வழிபட்டு வருவது நல்லது.

    ஒவ்வொரு வாரத்திலும் அந்தந்த கிரகத்திற்குரிய கிழமையில் தொடர்ந்து விரதமிருந்து வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும். குடும்ப முன்னேற்றம், செல்வச்செழிப்பு, செல்வாக்கும் உயரும். வாழ்வில் வளம் காண இந்த வார விரதங்கள் உறுதுணையாக அமையும்.

    இது தவிர எந்தத் திசை நடப்பவர்களும், எந்தப் புத்தி நடப்பவர்களும் எந்த விரதம் இருப்பவர்களாக இருந்தாலும் முதன் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகு விரதத்தை தொடங்க வேண்டும். விநாயகர் வழிபாடு வெற்றியை வழங்கும். பொதுவாக அனைவரும் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப்பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் அகலும். சந்தோஷம் சேரும்.

    Next Story
    ×