search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விசாக விரதம் இருந்தால் வெற்றி நிச்சயம்
    X

    விசாக விரதம் இருந்தால் வெற்றி நிச்சயம்

    வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் வரும்நாளில், நாம் முருகப்பெருமானை முறையாக விரதமிருந்து வழிபட்டால் வெற்றி நிச்சயம் வந்து சேரும்.
    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் வெளியான நெருப்பில் இருந்து அவதரித்தவர் முருகப்பெருமான். இவரை சிவக்குமரன் என்றும், விநாயகரின் இளைய சகோதரன் என்றும், இந்திரனின் மாப்பிள்ளை என்றும், அகத்திய முனிவருக்கு தமிழ் இலக்கணம் போதித்தவர் என்றும், அவ்வை பிராட்டிக்கு நாவல் கனி மூலம் தத்துவ ஞானத்தைப் போதித்தவர் என்றும் போற்றுகிறார்கள். தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு வைகாசி மாதத்தில் விசாக விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம்.

    வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் வரும்நாளில், நாம் முருகப்பெருமானை முறையாக வழிபட்டால் வெற்றி நிச்சயம் வந்து சேரும். திருப்பரங்குன்றத்தை முதல் படைவீடாகவும், திருச்செந்தூரை 2-ம் படைவீடாகவும், பழநியை 3-ம் படைவீடாகவும், திருவேரகம் எனப்படும் சுவாமிமலையை 4-ம் படைவீடாகவும், திருத்தணியை 5-ம் படைவீடாகவும், பழமுதிர்சோலையை 6-ம் படைவீடாகவும் கொண்ட ஆறுபடை வீட்டு அழகனை வைகாசி விசாகம் அன்று வழிபடுவது சிறப்பானதாகும். அன்றைய தினம் முருகனுக்கு வாழைப்பழம், கந்தரப்பம் வைத்து வழிபட்டு வந்தால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும். வந்த துயரங்களும் வாசலோடு நிற்கும்.

    வாரியார் சுவாமிகள் ‘முருகு, முருகு என்று நீ உருகு உருகு’ என்பார். அந்த முருகப்பெருமானிடம் மும்மூர்த்திகளும் அடக்கம் என்று சொல்வார். காக்கும் கடவுளாகிய முகுந்தன், அழிக்கும் கடவுளாகிய ருத்திரன், படைக்கும் கடவுளாகிய காமலோற்பவன் ஆகிய மூவரின் முதல் எழுத்துகளை ஒன்று சேர்த்தால் ‘முருகா’ என்ற பொருள் கிடைக்கும். எனவே முருகனை வழிபட்டால் மும்மூர்த்தியை வழிபட்ட பலன் வந்து சேரும்.



    ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து நாம் கொண்டாடுகிறோம். நட்சத்திர அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசிமகம் போன்றவை சிறப்பாக கொண்டாடப் படுகின்றன.

    நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களைக் கொண்டாடும் பொழுது, அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமையும் என்பதை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த விதத்தில் விசாக நட்சத்திரம் என்பது முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகும். அதிலும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரமன்று முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். வருங்காலம் நலமாக உருவாகும். முருகப்பெருமான் சன்னிதியில் கவசம் படித்தால் காரிய வெற்றி கிட்டும். பதிகம் படித்தால் படிப்படியாய் துயர் தீரும்.

    இந்த ஆண்டு வைகாசி விசாகம் 7-6-2017 (புதன்கிழமை) வருகிறது. அன்றைய தினம் அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு அதன் பின்னர் முருகப்பெருமான் படத்தின் முன்னால் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகைப் பரிமளப் பொருட்களை இணைத்து, ஐந்து வகை நைவேத்தியம் வைத்தும் அத்துடன் மாம்பழத்தை நைவேத்தியமாக வைத்து ‘திருப்புகழ்’ பாட வேண்டும். திருப்புகழ் பாடினால் எதிர்ப்புகள் அகலும். இனிய வாழ்வு மலரும்.



    வைகாசி விசாகத்தன்று ஆலயங் களுக்கு சென்று வழிபாடு செய்வதும் நல்லது. அன்றைய தினம் முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்குச் சென்று பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இளநீரால் அபிஷேகம் செய்தால் நன்மக்கட்பேறு உண்டாகும். கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் ஆரோக்கியம் சீராகும்.

    இந்த இனிய நாளில் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் பகை விலகும். பாசம் பெருகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளம் நடைபெறும். வருமானம் பெருகும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். அன்றைய தினம் மோர், பானகம், தயிர்சாதம், இளநீர் போன்றவற்றைத் தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    வைகாசி விசாகத்தன்று வடிவேலன் சன்னிதிக்குச் சென்று, மனமுருகி முருகனின் பாடல்களைப் பாடி வழிபாடு செய்யுங்கள். சிந்தனைகள் வெற்றி பெறும்.

    ‘வரவேண்டும், வரவேண்டும் செந்தில் வடிவேலா!

    - வரம்

    தரவேண்டும் தரவேண்டும் செந்தில் வடிவேலா!’ என்று மனமுருகிப் பாடுங்கள்.

    இனிய துணையாக முருகன் என்றும் உங்களுடன் வருவான். இதயம் மகிழக் கேட்ட வரங்களை அள்ளித் தருவான்.
    Next Story
    ×