search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உன்னத வாழ்வு தரும் நரசிம்மர் ஜெயந்தி விரதம்
    X

    உன்னத வாழ்வு தரும் நரசிம்மர் ஜெயந்தி விரதம்

    நரசிம்ம ஜெயந்தி அன்று விரதமிருந்து நரசிம்மருக்கு சந்தனாபிஷேகம் செய்தால் வாழ்வில் உண்டாகும் துன்பங்களை போக்கி பக்தர்களை காத்து அருளாசி புரிவார்.
    9-5-2017 நரசிம்மர் ஜெயந்தி

    திருநெல்வேலி மாவட்டம், தென்காசியிலிருந்து பாவூர்சத்திரம் வழியாக சுரண்டை செல்லும் வழியில் அமைந்துள்ளது கீழப்பாவூர். இங்கு புராணச் சிறப்புமிக்க மிகத்தொன்மையான உக்ர நரசிம்மர் ஆலயம் உள்ளது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது.

    மகாவிஷ்ணு, தன் பக்தன் பிரகலாதனுக்கான தற்போதைய ஆந்திர மாநிலம் அகோபிலத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்தார். அந்த அவதார காட்சியை, காசியப மகரிஷி, வருண பகவான், சுகோஷ முனிவர் ஆகியோர் தரிசிக்க விரும்பினர். இதற்காக மகாவிஷ்ணுவை நினைத்து அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் இருந்தனர். அதன்பலனாக மகாவிஷ்ணு அசரீரியாக, ‘பொதிகைமலைச் சாரலில் சித்ரா நதிக்கரையில் தவம் புரியுங்கள். அங்கு உங்களுக்கு நரசிம்மர் தரிசனம் கிட்டும்’ என்றார்.

    மகாவிஷ்ணு குறிப்பிட்ட சித்ரா நதிக்கரையை அடைந்த அவர்கள் அங்கு தவம் செய்தனர். அவர்களின் தவம் மாலவன் மனதை மகிழ்ச்சிப்படுத்தியது. இதையடுத்து அவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக 16 திருக்கரங்களுடன் மகாஉக்ர நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். பின்னர் முனிவர்களின் வேண்டுதல் படி அங்கேயே தங்கி அருள்புரிந்தார் என்கிறது தல புராணம்.

    இந்தியாவில் ராஜஸ்தான், புதுச்சேரி அருகே சிங்ககிரியில் உள்ள ஆலயம் தவிர, கீழப்பாவூரில் மட்டுமே நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். நரசிம்மரை சாந்தப்படுத்துவதற்காக அவரது சன்னிதி முன்பாக மேற்கு பகுதியில் பெரிய தெப்பக்குளம் ஏற்படுத்தியுள்ளனர். ‘கங்கா நர்மதா சம்யுக்த ஸ்ரீ நரசிம்ஹ புஷ்கரணி’ என்று அழைக்கப்படும் இந்த தெப்பக்குளத்தை மையமாக வைத்தே இவ்வாலயத்தின் உற்சவங்கள் அனைத்தும் நடக்கின்றன.

    இங்கு ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் ஐந்துவித ஹோமங்களுடன், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. இந்த நாளில் விரதமிருந்து நரசிம்மரை வழிபாடு செய்தால் கடன் தொல்லை நீங்கி, செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரம் பெருகும் என்கிறார்கள்.



    இங்குள்ள பெருமாள் ‘முனைகடி மோகர் விண்ணகர்’, ‘விண்ணகர் ஆழ்வார்’, ‘முனைஎதிர் மோக விண்ணகர்’, ‘மோகராழ்வார்’ போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். ‘முனை மோகர் விண்ணர்’ என்பதற்கு ‘போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் உடையவர்’ எனப் பொருள். ‘முனை எதிர் மோகர்’ என்பது இவ்வூரில் தங்கியிருந்த படையின் பெயராகும். இங்கிருந்த படைகளின் துணைகொண்டு சோழ, பாண்டிய சிற்றரசுகளை வென்று விக்கிரம பாண்டிய மன்னன் பேரரசனாக முடி சூட்டினான் என்று கூறுகிறார்கள்.

    இத்தகைய சிறப்புமிக்க ஷேத்திரத்தில் கோவில் கொண்டுள்ள நரசிம்மரை விரதமிருந்த வழிபாடு செய்தால் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, நியாயமாக கிடைக்க வேண்டிய அரச பதவி முடி சூட வழி பிறக்கும். மேலும் நரசிம்மருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் விரைவான பலன் கிட்டும் என்பது ஐதீகம். நரசிம்மருக்கு மிக விருப்பமான வெல்லத்தினால் ஆன பானகம் படைத்தும் வழிபடலாம்.

    நரசிம்மரை விரதமிருந்து வழிபட செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்தது. திருவோணம், பிரதோஷம், வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்களில் சிறப்புப் பூஜை நடக்கிறது. திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு ஆகியன இவ்வாலயத்தின் முக்கிய திருவிழாவாகும். வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இங்கு நரசிம்மர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்த ஆலயத்தில் உள்ள கன்னி மூல கணபதியை வணங்கி, பின்னர் நரசிம்மர் சன்னிதியை 16 முறை அமைதியாக வலம் வந்து நரசிம்மரை வழிபட வேண்டும். தொடர்ந்து வாலி பூஜைசெய்து வழிபட்ட, சிவகாமி அம்மாள் சமேத திருவாலீஸ்வரரை வணங்கி ஷேத்திர வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். அப்போது தான் வழிபாட்டின் முழுப்பலனும் கிட்டும்.

    தன் பெயரை சொல்ல மறுத்து ‘ஓம் நமோ நாராயணாய நம’ என பகவானின் நாமத்தை கூறிய பிரகலாதனை இரணியன் கல்லைக்கட்டி கடலில் போட்டான். அவன் வெளியில் வர முடியாதபடி பெரிய மலையையும் அவன்மேல் போட்டு அழுத்தினான். பக்தனை காப்பாற்ற பெருமாள் அம்மலையை பிளந்தார். அவரது கோபத்தை தணிக்க நரசிம்மருக்கு சந்தனாபிஷேகம் செய்வார்கள். நரசிம்ம ஜெயந்தி அன்று விரதமிருந்து நரசிம்மருக்கு சந்தனாபிஷேகம் செய்தால் வாழ்வில் உண்டாகும் துன்பங்களை போக்கி பக்தர்களை காத்து அருளாசி புரிவார்.

    திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் திருநெல்வேலியில் இருந்து மேற்காக 44 கி.மீ. தூரத்திலும், தென்காசியிலிருந்து கிழக்காக 10 கி.மீ. தூரத்திலும் உள்ளது பாவூர்சத்திரம். இங்கிருந்து 2 கி.மீ. தூரம் சென்றால் கீழப்பாவூரை அடையலாம்.
    Next Story
    ×