search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலதெய்வத்திற்கு பவுர்ணமியன்று விரதமிருந்து வழிபாடு
    X

    குலதெய்வத்திற்கு பவுர்ணமியன்று விரதமிருந்து வழிபாடு

    மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பவுர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும்.
    பொதுவாக ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பவுர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் சிறப்பு பவுர்ணமியாகும். எனவே அன்று குல தெய்வத்தை தேடிச் சென்று வழிபட வேண்டியது மிக, மிக அவசியமாகும். மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி பவுர்ணமி தினத்தன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும்.

    பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் குலம் சிறப்பதோடு, குடும்பமும் மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும். குல தெய்வம் என்பது ஒவ்வொரு குடும்ப வகையறாவைப் பொருத்தது.

    அண்ணன்-தம்பி குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும். கிராமங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் அருகிலேயே குலதெய்வ கோவில் இருக்கும்.



    எனவே எளிதாக வழிபாடுகளை செய்து கொள்வார்கள். பலருக்கும் குல தெய்வம் காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி இல்லாத இடங்களில்தான் இருக்கிறது. அதனால் எப்போதும் சென்றுவர முடியாது. ஆனால் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடம்தோறும் இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலிற்குச் சென்று வருவது நல்லது.

    கிராமங்களில் இருந்து வெளியேறி நகர்ப்பகுதிகளில் குடியேறியவர்களுக்கு குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கலாம். அத்தகையவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கும் ஒரு பரிகாரம் உள்ளது.

    உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். எனவே பங்குனி பவுர்ணமி அன்று மறக்காமல் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள். முடிந்தால் பவுர்ணமிதோறும் குலதெய்வ வழிபாட்டை செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையும் பவுர்ணமி போல பிரகாசிக்கும்.
    Next Story
    ×