search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இன்ப வாழ்வு தரும் ராம நவமி விரதம் அனுஷ்டிக்கும் முறை
    X

    இன்ப வாழ்வு தரும் ராம நவமி விரதம் அனுஷ்டிக்கும் முறை

    ராம நவமி விரதம் இருப்பவர்கள் குடும்பத்தில் குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும். ராம நவமி விரதம் அனுஷ்டிக்கும் முறையை பார்க்கலாம்.
    5-4-2017 இன்று ராமநவமி

    திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்கதாகவும், அறம் நிறைந்ததாகவும் உள்ளது ராமாவதாரம். மனிதன் நீதிமுறைகள், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதற்காக மண்ணில் அவதரித்தார் ஸ்ரீராமர். அவர் அவதரித்த நாள் ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது.

    அயோத்தியை ஆட்சி செய்து வந்தார் தசரதன் என்ற சக்கரவர்த்தி. அவருக்கு கோசலை, சுமித்ரை, கைகேயி என மூன்று மனைவிகள். உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டிய தசரதனுக்கு, நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லாதது பெரும் கவலையைத் தந்தது. இதுகுறித்து தனது குல குருவான வசிஷ்டரிடம் கூறினார்.

    வசிஷ்டரின் ஆலோசனைப்படி புத்திர பாக்கியத்திற்கான யாகத்தை நடத்தினார். அந்த யாகத்தில் தோன்றிய யட்சன், பிரசாதம் நிறைந்த ஒரு கிண்ணத்தை தசரதனிடம் கொடுத்தான். அதனை தனது மூன்று மனைவிகளுக்கும் கொடுத்தார் தசரதன். அதன் பயனாக அவர்கள் மூவரும் கர்ப்பம் தரித்தனர்.



    பங்குனி மாதம் நவமி திதியில் கோசலை ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தையே உலகை அறத்தால் ஆள வந்த ராமபிரான். கோசலையைத் தொடர்ந்து கைகேயிக்கு பரதனும், சுமித்ரைக்கு லட்சுமணன், சத்ருகனன் ஆகியோரும் பிறந்தனர். வளர்ந்த காலத்திலேயே ராமன் பல அற்புதங்களை நிகழ்த்தினார். விசுவாமித்திரருடன் காட்டிற்குச் சென்று தாடகை என்ற அரக்கியை வதம் செய்தார். பின்னர் மிதிலை நகரில் ஜனகரின் அரண்மனைக்குச் சென்று பரமேஸ்வரனின் வில்லை உடைத்தார்.

    கைகேயியின் வரத்தால் காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ராமனுக்கு ஏற்பட்டது. அவருடன் சீதையும், லட்சுமணனும் சென்றனர். காட்டில் சென்றபோது, அவரது பாதம் பட்டு, பல ஆண்டுகளாக கல்லாகக் கிடந்த அகலிகை பெண்ணாக உருமாறினாள்.

    இதற்கிடையில் சீதையை ராவணன் கவர்ந்து சென்றான். அவனைத் தேடுவதற்காக சுக்ரீவன், அனுமன் ஆகியோரின் உதவியை நாடினார். கடலில் நடுவில் பாலம் அமைத்து இலங்கைச் சென்று ராவணனுடன் போரிட்டு அவனை அழித்தார். சீதையையும் மீட்டார். பின்னர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, அயோத்தி திரும்பி அரச பட்டத்தை ஏற்றார்.

    ராமனைக் காட்டிலும் ராம நாமமே உயர்ந்தது என்பார்கள் ஆன்மிகப் பெரியோர். ராம நாமத்தை உச்சரித்தால் ராமனின் ஆசியோடு, அவரது பக்தனான அனுமனின் ஆசியையும் பெறலாம். ராமநவமி நாளில் ராமபிரானை வழிபட்டால் நன்மைகள் பலவும் வந்து சேரும்.



    விரதம் இருக்கும் முறை :

    ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்ற வற்றை படைக்கலாம். ராமநவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.

    அன்றைய தினம் ராமர் கோவில் களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.

    குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.

    ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.
    Next Story
    ×