search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிறவிக் கடலை கடக்கச் செய்யும் மத்தன த்வாதசீ விரதம்
    X

    பிறவிக் கடலை கடக்கச் செய்யும் மத்தன த்வாதசீ விரதம்

    சர்வ ஐஸ்வரியங்களையும், பேரன் - பேத்திகளைப் பார்க்கக் கூடிய காலம் வரையிலான நீண்ட ஆயுளையும் கொடுக்கக் கூடிய விரதம் அது. கண்ணனுக்கு நாரதர் உபதேசித்தது மத்தன த்வாதசீ விரதம்.
    பிருந்தாவனத்தில் சத்யபாமாவுடன் உலாவிக் கொண்டிருந்தார் கண்ணன். அப்போது நாரத முனிவர் அங்கு வந்தார். நாரதரைக் கண்டதும், அவருக்கு உரிய மரியாதையை அளித்து உபசரித்தார் கிருஷ்ண பரமாத்மா.

    பிறகு நாரதரிடம் பேசலானார். ‘நாரத முனிவரே! தாங்கள் மூன்று உலகங்களிலும் சஞ்சரிப்பவர். ஏதாவது விசேஷங்கள் உள்ளனவா? என்று எனக்கு சொல்லி அருள வேண்டும்’ என்று வேண்டினார்.

    அதற்கு நாரதர், ‘நான் இப்போது சத்தியலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கே நான் கேள்விப்பட்ட ஒரு விரதத்தைப் பற்றி இப்போது சொல்கிறேன். சர்வ ஐஸ்வரியங்களையும், பேரன்– பேத்திகளைப் பார்க்கக் கூடிய காலம் வரையிலான நீண்ட ஆயுளையும் கொடுக்கக் கூடிய விரதம் அது. மேலும் ஒருவரது பிறவிக் கடலை கடக்கவும் இந்த விரத பலன்கள் உதவும். இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது’ என்றார்.

    பெண் குழந்தை :

    விரதமுறையை கூறும் முன்பு, அதைக் கடைபிடித்து பெரும்பேறு பெற்ற ஒரு பெண்ணின் கதையை நாரதர் கூறத் தொடங்கினார்.

    வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் கரைகண்டவர் தேவதத்தர். மக்கள் செல்வம் இல்லாத மனக் குறை நீங்க, அவர் மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தார்.

    அவரது தவத்துக்கு இரங்கி மகாவிஷ்ணு வந்தார். ‘தேவதத்தா! உன் மனக்குறை நீங்கும். ஆனால் அற்ப ஆயுள் உள்ள பிள்ளை வேண்டுமா? அல்லது விதவையாகக் கூடிய பெண் வேண்டுமா?’ என்று கேட்டார்.

    தேவதத்தரோ, ‘வீட்டுக்குச் சென்று என் மனைவியைக் கேட்டு வந்து சொல்கிறேன், சுவாமி’ என்று கூறிவிட்டு வீட்டிற்குப் போய் மனைவியிடம் கலந்து ஆலோசித்தார். பின்னர் மறுபடியும் மகாவிஷ்ணுவை தரிசித்த இடத்திற்கே போய், ‘சுவாமி! ஒரு பெண் குழந்தையையே எனக்குத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.

    ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறிவிட்டு மகாவிஷ்ணு அங்கிருந்து மறைந்தார். தேவதத்தர் மனநிறைவுடன் வீடு திரும்பினார். காலம் கனிந்தது. தேவதத்தர் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். அந்தப் பெண்ணுக்குத் திருமண வயது வந்ததும், திருமணமும் செய்து வைத்தார்.

    தர்மம் செய்யவில்லை :

    ஆனால்.. திருமணமான இரண்டாவது மாதத்திலேயே தேவதத்தரின் மாப்பிள்ளை இறந்து போனான். மகள் விதவையானாள். சோகம் அதோடு அவளை விடவில்லை. ஒரு சில நாட்களிலேயே அவளுடைய பெற்றோரான, தேவதத்தர் தம்பதியும் இறந்து போனார்கள். விதவையான அந்தப் பெண், தாயும் தகப்பனாரும் வாழ்ந்த தன் சொந்த வீட்டுக்கே வந்துவிட்டாள். தகப்பனாரின் சொத்துக்களை அனுபவித்தாளே தவிர, மறந்து போய்க் கூட யாருக்கும் தான– தர்மம் செய்யவில்லை.

    பிச்சை கேட்டு யாராவது வந்தால், ‘நாஸ்தி (இல்லை) நாராயணா’ என்று சொல்லி விரட்டி விடுவாள். வாயைத் திறந்தால் வசவு வார்த்தைகள் வருமே தவிர, நல்ல வார்த்தைகள் ஒருபோதும் வந்ததில்லை.

    இதைப் பார்த்த மகாவிஷ்ணுவோ, ‘இந்தப் பெண் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் கடினமான மனது கொண்டவளாக இருந்தும், நாராயணா என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டு இருக்கிறாளே!’ என்று எண்ணி மனித வடிவம் கொண்டு அவளது வீட்டுக்குப் போய் பிச்சை கேட்டார்.

    தன் வீட்டை சாணம் கொண்டு மெழுகிக் கொண்டிருந்த அவள் தன் வழக்கப்படி, ‘நாஸ்தி நாராயணா’ என்று கூறி விரட்டினாள்.

    ‘என்னம்மா! உன் வீடு தேடி வந்து பிச்சை கேட்ட என்னை, இந்த விரட்டு விரட்டுகிறாயே’ என்று யாசகர் வடிவில் வந்த விஷ்ணு கூறினார்.

    துவரைச் செடி :

    ‘பிச்சைக்காரனுக்கு இவ்வளவா?’ என்று கத்திய அந்தப் பெண், மெழுகிக் கொண்டிருந்த கந்தல் துணியை, மகாவிஷ்ணு ஏந்தி நின்ற பிச்சை மாத்திரத்தில் வீசி எறிந்தாள்.

    மகாவிஷ்ணு தன் கையில் இருந்த பாத்திரத்தைப் பார்த்தபோது, அதற்குள் தரை மெழுகிய கந்தல் துணியுடன் ஒரு துவரையும் இருந்தது. அந்தத் துவரையை எடுத்த மகாவிஷ்ணு சிரித்தபடியே, அதை அங்கேயே ஓர் இடத்தில் முளைக்கும் படியாகப் போட்டு விட்டு வைகுண்டம் சென்றடைந்தார்.

    அவர் போட்டு விட்டுப் போன துவரை, சில நாட்களிலேயே முளைத்துப் பெரிய செடியாக காய்த்துக் குலுங்கியது. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே, மகாவிஷ்ணுவை அவமானப்படுத்தியப் பெண் இறந்து போனாள். மறுபிறவியில் அவள் ஒரு புழுவாகப் பிறந்து, அந்த துவரைச் செடியில் இருந்த இலைகளைத் தின்று கொண்டிருந்தாள்.

    ஒரு நாள் மகாவிஷ்ணு, லட்சுமிதேவியுடன் அங்கு வந்து, ‘புழுவே! நன்றாக இருக்கிறாயா?’ எனக் கேட்டார்.

    ‘பெருமாளே! உனக்குத் தெரியாதது உண்டா?’ என்று புழுவிடம் இருந்து பதில் வந்தது.

    விரதத்தின் பலன் :

    அப்போது அருகில் இருந்து மகாலட்சுமி, ‘சுவாமி! இந்தப் புழுவிற்கு, இப்பிறவி வாய்ப்பதற்கு காரணம் என்ன?’ என்று கேட்டாள்.

    தேவதத்தர் வரம் வாங்கியதில் இருந்து அவள் மகள் விதவையானது வரை முழுக் கதையையும் சொல்லி முடித்தார் மகாவிஷ்ணு. ‘அந்தப் பெண்ணே இப்போது புழுவாக பிறந்திருக்கிறாள்’ என்று கூறினார்.



    ‘இந்தப் புழுப் பிறவியில் இருந்து விடுதலை கிடைக்க என்ன வழி?’ என்று கேட்டாள் மகாலட்சுமி.

    அதற்கு மகாவிஷ்ணு, நாரதர் கண்ணனிடம் கூறிய விரதத்தை சொல்லி, ‘இந்த விரதத்தின் பலனில் இருந்து கொஞ்சம் கொடுத்தால், இந்த ஜீவனுக்கு விடுதலை கிடைக்கும்’ என்றார். அந்த விரத பலனை லட்சுமிதேவி, உடனடியாக கொடுத்தாள். அதே சமயத்தில் புழுவின் பிறவி நீங்கியது. அழகான பெண் ஒருத்தி அதில் இருந்து வெளியே வந்து, லட்சுமி நாராயணரை வலம் வந்து வணங்கினாள்.

    நற்கதி அடைந்தாள் :

    பின்னர், ‘தாயே! லட்சுமி மாதா! நீங்கள் சொன்ன விரதத்தை தயவு செய்து எனக்கும் உபதேசம் செய்ய வேண்டும்’ என்று வேண்டினாள். லட்சுமி தேவி அந்த விரதத்தை அவளுக்கு உபதேசித்தாள். அதைக் கேட்டு விரதத்தை முறையாக முழுமையாக கடைபிடித்த அந்தப் பெண் முடிவில் நற்கதி அடைந்தாள்.

    இவ்வாறு அந்த விரதத்தின் பலன் குறித்து நாரதர் கண்ணபிரானிடம் கூறி முடித்தார். அந்த விரதம் ‘மத்தன த்வாதசீ விரதம்’ என்று கூறப்படுகிறது.

    மத்தன த்வாதசீ விரதம் விரதம் இருப்பது எப்படி?

    ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி அன்று உபவாசம் இருந்து தூய்மையான மனதோடு துளசி தேவியுடன் கூடிய மகாவிஷ்ணுவை பூஜை செய்ய வேண்டும். ஐந்து விதமான (அல்லது ஐந்து) தாமரைப் பூக்களை வைத்து சுவாமியை அலங்காரம் செய்ய வேண்டும். ஐந்து விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். ஐந்து வகையான நைவேத்தியங்கள் செய்து வைக்க வேண்டும். பூஜையை முடித்து, துளசியுடன் கூடிய மகாவிஷ்ணுவை வலம் வந்து வணங்க வேண்டும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.

    ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி அன்று தொடங்கிய இந்த விரத பூஜையை ஒரு மாதம் கடைபிடிக்க வேண்டும். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று இந்த விரத பூஜை நிறைவு பெறும். கார்த்திகை மாத ஏகாதசி அன்று உபவாசம் இருந்து பூஜை செய்ய வேண்டும். அன்று இரவு தூங்காமல் கண் விழிக்க வேண்டும். அதற்காக டி.வி. பார்த்து பொழுதை போக்கக் கூடாது. இறைவனின் நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும்.

    மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி தூய்மையான ஆடைகளை அணிந்து, ஐந்து படி அரிசி மாவில் சர்க்கரையும், பாலும் சேர்த்துப் பிசைந்து, மூன்று உருண்டைகள் செய்ய வேண்டும். அவற்றில் ஒன்றைத் துளசிக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். மற்றொன்றை தானமாக கொடுக்க வேண்டும். மூன்றாவது உருண்டையை உரலில் போட்டு, பால் ஊற்றிக் கரும்புகளை கொண்டு இடிக்க வேண்டும்.

    அவ்வாறு இடிக்கும்போது பெண்கள், பக்தி பாடல்களை பாடிக்கொண்டே இடிப்பார்கள். இடிக்கும்போது எத்தனைப் பால் துளிகள் இடிப்பவர்கள் மீது விழுகின்றனவோ, அத்தனை ஆண்டுகள் அந்தப் பெண்கள் சொர்க்கலோகத்தில் வாழ்வார்கள் என்று இந்த விரதமுறை குறித்து கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×