search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவபெருமானுக்கு உகந்த வழிபாட்டு விரதங்கள்
    X

    சிவபெருமானுக்கு உகந்த வழிபாட்டு விரதங்கள்

    சிவபெருமானுக்கு உகந்த விரதங்களும் அந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டிய முறையையும் அதனால் கிடைக்கும் பயனையும் கீழே விரிவாக பார்க்கலாம்.
    உமா மகேஸ்வரர் விரதம் :

    மகேஸ்வர வடிவங்கள் இருபத்தைந்தில் உமா மகேஸ்வர வடிவமும் ஒன்றாகும். மகேஸ்வரரின் அருள் சக்தியே உமா. ஞானமே உமா, கருணையே உமா உமா மகேஸ்வரரைப் பார்த்துக்கொண்டிருக்கிற வடிவம் உமாமகேஸ்வரர் வடிவமாகும். இவர்களைத் தியானித்து கார்த்திகை பவுர்ணமியில் விரதமிருப்பது உமா மகேஸ்வரர் விரதமாகும். ஒருநாள் முழுவதும் விரதமிருக்க முடியாதவர்கள் பகலில் ஒரு பொழுது உண்ணலாம். அல்லது இரவில் எளிய சிற்றுண்டியையோ, சில பழத்துண்டு களையோ உண்ணலாம்.

    கல்யாண சுந்தரர் விரதம் :

    பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பங்குனி உத்திரத்தன்று திருக்கயிலையில் திருமணம் நடைபெற்றது. இத் திருமணக்கோலமே கல்யாணசுந்தரர் வடிவம். இது பல போகங்களை அருளும் போக வடிவம். மகேஸ்வர வடிவங்களில் இது ஒன்று. இல்லறம் நல்லறமாக விளங்க இந்த வடிவத்தைப் போற்றி வழிபட வேண்டும். கல்யாணசுந்தரரை விரதமிருந்து வழிபட ஏற்ற நாள் அவரது திருமண நாளான பங்குனி உத்திரமே. இது சிறந்த முகூர்த்த நாள். விரதமிருக்க முடியாதவர்கள் அன்று இரவு ஒரு பொழுது மட்டும் சிறிதளவு அன்னத்தையும் அல்லது சில பழத்துண்டுகளையும் உண்ணலாம்.

    சூலவிரதம் :

    சூல மேந்திய சூலபாணியை வழபடுவது சூல விரதம். சூலம் சிவபெருமா னின் ஓர் ஆயுதம். இதன் மும்முனைகள் இச்சை, ஞாக, கிரியை சக்திகளை உணர்த்துகின்றன. தை அமாவாசையன்று இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். முழு விரதம் காக்க முடியாதவர்கள் பகலில் ஒரு பொழுது உண்ணலாம். இந்த விரதத்தைப் பாசுபத விரதம் என்றும் கூறுவார்கள்.

    இடப விரதம் :

    மகேஸ்வர வடிவங்கள் இருபத்தைந்தில் இடபாரூடர் - காளை வாகனர் வடிவமும் ஒன்றாகும். சிவபெருமானுக்கு காளைக் கொடியும், காளை வாகனமும் உரியன. சிவனும் சக்தியும் காளை வாகனத்தின்மேல் எழுந்தருளும் கோலத்தை இடபாரூடர் வடிவம் என்பர். சிவபெருமானுக்குப் பல வடிவங்கள் உள்ளன. ஆனால், காளை வாகனராகவே திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருளுகின்றார். ஆகவே இந்த வடிவம் உச்ச நிலை சிறப்புடையது. காளை வாகனரை வைகாசி, வளர்பிறை, அஷ்டமியன்று விரதமிருந்து வழிபட வேண்டும். இது இயலாதவர்கள் பகல் ஒரு பொழுது உண்ணலாம்.

    ஆருத்ரா தரிசனம் :

    ஆருத்ரா தரிசனம் என்றவுடன் சிதம்பரம் நடராஜப் பெருமானே எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்பார். ஆருத்ரா என்னும் நட்சத்திரத்துக்கு ‘சிவனே அதி தேவதை’.  பதஞ்சலி முனிவருக்கும் வியாக்கிரபாதருக்கும் நடராஜப் பெருமான் தம்முடைய நடனத்தை ஆடிக்காட் டியதே இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் தான். அவருடைய ஆடல் உலகம் இயங்குவதைக் குறிக்கின்றது.

    தாருகா வனத்திலுள்ள முனிவர்கள், ‘‘கர்ம மார்க்கமே சிறந்தது; கர்மாவே மனிதர்களுக்குப் பலனை அளிப்பதால் ஈசுவரன் ஒருவன் தேவை இல்லை’’ என்ற நாஸ்திகவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பக்தி மார்க்கத்தை அறிவுறுத்த சிவபெருமான் பிட்சாண்டவராகவும் மகா விஷ்ணு மோகினியாகவும் வந்து பிச்சை கேட்டனர்.

    இறைவனுடைய சுந்தரக் கோலத்தில் மயங்கிய ரிஷிபத்தினிகள் அவர் பின்னே சென்றனர். கோபம் கொண்ட ரிஷிகள், அவரைக் கொல்ல யானையை அனுப்பினர். அதைக் கொன்றார். பிறகு பூதத்தை அனுப்பினர். அதைக் காலின் கீழே போட்டு மிதித்தார்; பிறகு உடுக்கை, மான், தீ, பாம்பு ஆகியவற்றை அனுப்பினர். அவற்றை ஆபரணங்களாகக் கொண்டு சிவபெருமான் நர்த்தனம் செய்தார். அதைக் கண்டு ஆனந்தம் அடைந்த ரிஷிகள் உண்மையை உணர்ந்து சிவபக்தர் ஆனார்கள்.

    அந்த நாளே ஆருத்ரா தரிசனம்! காலையில் அபிஷேகத்தையும், தரிசனத்தையும் கண்டவர்களுக்கு மறு பிறவி இல்லை. திருவாதிரை விரதம் இருப்போர் களியும், பருப்பு இல்லாத குழம்பையும் நிவேதனம் செய்வார்கள்.

    சோம வார விரதம் :

    சோமன் என்றால், பார்வதியுடன் கூடிய சிவ பெருமான் என்றும் சந்திரன் என்றும் பொருள். கார்த்திகை மாதம் (திங்கட்கிழமை) சோமவாரம் நான்கிலும் உபவாசம் இருந்து சிவபெருமானைப் பூஜிப்பது இந்த விரதம். அதன் பின் திங்கட்கிழமை தோறும் விரதம் இருக்கலாம். கார்த்திகை மாதம் சுக்கில பட்ச அஷ்டமியில் சந்திரன் தோன்றினான். தன்னுடைய கொடிய நோய் குணமாக சிவபெருமானை ஆராதித்து நவக்கிரகங்களில் ஒருவன் ஆனான். அவன் பெயரால் சோம வாரம் தோன்றியது. தன் பெயரால், தனது வாரத்தில் இந்த விரதம் பிரசித்தி ஆக வேண்டும் எனச் சிவபெருமானைப் பிரார்த்தனை செய்து கொண்டான். அதனால் சோம வார விரதம் மிகச் சிறப்புடையதாயிற்று.

    கிருதயுகம் தோன்றியதும், சந்திரன், சிவபெருமான் திருமுடியில் அமர்ந்ததும் இந்த கார்த்திகை மாதம் நான்கு சோம வாரங்களில்தான்! பதினான்கு ஆண்டுகள், சோம வாரம் தோறும் பூஜை செய்து இரவு கண் விழித்து, சிவபுராணம் படித்து, காலையில் ஹோமம் செய்து, கலச நீரால் அபிஷேகம் செய்து, கணவனும் மனைவியுமாக பூஜை செய்ய வேண்டும். இதற்கு இத்தகைய பலன்கள் வேண்டும் என சந்திரன் வேண்டிக் கொண்டான். அவனுடைய பாபங்களை நீக்கி, பகைவரின் பயத்தையும் அகற்றி, அவனுடைய நோயையும், அகற்றி, அவனை ஆபரணமாகக் கொண்டார் சிவபெருமான். இதனால் சந்திரசூடன், சந்திரமவுலி எனப் பெயர் பெற்றார். சோம வார விரதம் அனுஷ்டித்துப் பலன் பெற்றோர் கதைகள் புராணங்களில் நிறைய உள்ளன.

    கேதார கவுரி விரதம் :

    கணவனும் மனைவியும், குடும்பத் தில ஒருமித்த மன நிலையுடன் ஒன்று பட்டு செயல்பட்டு, இன்பமாக வாழ வேண்டும் என்பதே இந்த விரதத்தின் உட்கருத்து.
    ‘சக்தி இன்றி சிவன் இல்லை’, ‘சிவன் இல்லாமல் சக்தி இல்லை’, ‘‘நீ இன்றி நான் இல்லை, நான் இல்லாமல் நீ இல்லை’’ ‘ஆண் பாதி, பெண் பாதி’ என்பவை இதன் அடிப்படையில் பிறந்தவையே.

    ஐப்பசி மாதம், சுக்கில பட்ச அமாவாசை நாளில் இந்த விரதம் வரும். அதற்கு முன் தொடங்கி, 21 நாள் வரையில் பூஜை செய்ய வேண்டும். வசதியும் வாய்ப்பும் இல்லாதவர்கள் அந்த ஒரு தினத்தில் மட்டும் உபவாசத்துடன் பூஜை செய்யலாம். கேதாரம் என்றால் வயல் என்று பொருள். இமயமலையிலுள்ள வயலில் ஈசுவரன் சுயம்பு லிங்கமாகத் தோன்றினார். ஆகையால், அவருக்கு கேதாரநாதர், கேதாரீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று. கவுரி என்பது பார்வதி தேவியின் பெயர்களில் ஒன்று.

    ஒரு சமயம், கைலாசத்தில் பரமசிவனும் பார்வதியும் கொலுவீற்றிருக்கையில் உலக நலனைக் கருதி, பிருங்கி மினிவர் ஆனந்த நர்த்தனம் ஆடினார். அதைக் கண்டு மகிழ்ந்த பரமசிவன், முனிவரை ஆசீர்வதித்தார். ஆசி பெற்ற முனிவர் பார்வதியை விலக்கி, பரமசிவனை மட்டும் வலம் வந்தார்.

    பார்வதிக்குத் தன்னை விலக்கியதால் கோபம் மேலிட்டு முனிவரின் உடலிருந்த சக்தியை நீக்கி விட்டாள். முனிவர் தடாலென்று கீழே விழ, பரமசிவன் அவருக்கு மூன்றாவது காலையும் தடியையும் அளித்தார். அவர் எழுந்து நடனமாடினார். அதன் பிறகும் முனிவர் பார்வதியை மதிக்கவில்லை. உடனே பார்வதிதேவி, சிவனிடம் கோபித்துக் கொண்டு கவுதம முனிவர் ஆசிரமத்துக்குச் சென்றாள்.

    அவருடைய உபதேசப்படி அவரையே குருவாகக் கொண்டாள். பிறகு கேதார ஈசுவரரை வழிபட்டு 21 நாள் விரதம் இருந்தாள். பரமசிவன் தமது உடலில் பாதியைப் பார்வதிக்கு அருளி, அர்த்த நாரீசுவரர் ஆனார். தேவி விரதம் இருக்கையில், பணிவிடை செய்த சித்ராங்கதன் என்னும் கந்தர்வன், இந்த விரதத்தின் பெருமையையும் நன்மையையும் உலகோருக்கும் அளிக்க வேண்டும் என அர்த்தநாரீசுவரை வேண்டிக் கொண்டு, அவர் அனுமதியோடு உலகுக்குத் தெரிவித்தான்.
    Next Story
    ×