search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து அன்னதானம் செய்யுங்கள்
    X

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து அன்னதானம் செய்யுங்கள்

    புரட்டாசி சனிக்கிழமைகளில் காகத்திற்கு ஆலிலையில் வெல்லம் கலந்த அன்னம் வைப்பதும், ஏழைகளுக்கு ஆடைகள் வழங்குவதும், அன்னதானம் செய்வதும் சனிபகவானுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
    கன்னியா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதத்தில் தான் சனி பகவான் சனிக்கிழமையில் பிறந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

    இந்தக் கன்னியா மாதத்தில் கன்னிகா விருட்சம் தோன்றியது புரட்டாசி மாத முதல்சனிக்கிழமை ஆகும். இத்தினத்தில் சூரியபகவானின் சக்திகளுள் ஒன்றாக விளங்கும் இச்சா சக்தியான உஷா தேவி தன் கணவனாகிய சூரியனை அன்புடன் நோக்கியதால் சூரியனது அருளால் ஓர் குழந்தை உஷா தேவிக்குப்பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சனி என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.

    இந்தச் சனியானவன் கிரகப்பதவியை அடைந்ததும் ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட நாழிகை அல்லது வருடம் தன் ஆதிக்கத்திற்குக் கீழ் வரும்படி செய்வார். இதனைத்தான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, பொங்கு சனி என்று பலவாறு சொல்வர். உண்மையில் சனிபகவான் மிகவும் நல்லவர். இவரின் பார்வையில் இருக்கும் பொழுது நீதி, நேர்மையுடன் நடந்தால் நல்லதே செய்வார். அள்ளி, அள்ளி வழங்குவார். தவறான வழியில் சென்றால் தான் தண்டனையும், நோய், நொடிகளையும் கொடுத்து முடக்கி துன்பத்திற்கு உள்ளாக்குவார்.

    சனிபகவான் புரட்டாசி சனிக்கிழமையில் பிறந்ததால் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடித்து நவக்கிரகத் தொகுப்பிலிருக்கும் சனி பகவானுக்கு நீல மலர்கள் சாத்தி, எள் விளக்கு ஏற்றி வழிபட்டால் அன்புடன் நம் கோரிக்கையை ஏற்று நல்லது செய்வார்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் அன்று அதிகாலையில் எழுந்து அன்றைய காலைக்கடன்களை முடித்துக் கொண்டு நீராடி, அவரவர்கள் குல வழக்கப்படி நெற்றியில் சமயச்சின்னத்தை- விபூதி, திருமண், சந்தனம், குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை இட்டுக்கொண்டு விநாயகப்பெருமானை வழிபட வேண்டும். பிறகு கருட தரிசனமும், ஆஞ்சநேயர் தரிசனமும் செய்தால் மிகவும் நல்லது. விநாயகரும், ஆஞ்சநேயரும் சனியால் பிடிக்கப்படாதவர்கள் என்பது யாவரும் அறிந்ததே.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் காகத்திற்கு ஆலிலையில் வெல்லம் கலந்த அன்னம் வைப்பதும், ஏழைகளுக்கு ஆடைகள் வழங்குவதும், அன்னதானம் செய்வதும் சனிபகவானுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
    Next Story
    ×