search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நரகத்திலிருந்து காக்கும் நற்செயல் தர்மம்
    X

    நரகத்திலிருந்து காக்கும் நற்செயல் தர்மம்

    ஒருமுறை நபி(ஸல்) அவர்களுடன் அதீ பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய வறுமை நிலை பற்றி முறையிட்டார்.
    அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அவர்கள் இஸ்லாமை ஏற்ற பிறகு, ஒருமுறை நபி(ஸல்) அவர்களுடன் அதீ பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய வறுமை நிலை பற்றி முறையிட்டார். மற்றொருவர் வந்து தம்மிடம் நடந்த வழிப்பறி பற்றி முறையிட்டார். 

    அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதீயே! நீ ஹிராவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “ஹீரா என்ற இடத்தை நான் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நிச்சயம் பார்ப்பாய். இறையில்லம் கஅபாவை வலம் வருவதற்காகவே ஹீராவிலிருந்து ஒரு பெண் பயணித்து வருவாள். 

    அவள் வழியில் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று கூறினார்கள். தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் “'நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ - பாரசீகப் பேரரசன் கிஸ்ராவின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய். மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான கிஸ்ரா இப்னு ஹுர்முஸ் தோற்கடிக்கப்படுவார்” என்றும் கூறினார்கள். மேலும் நபி(ஸல்) கூறினார்கள், “உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தன்னுடைய கை நிறையத் தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக்கொண்டு தர்மம் பெறுபவரைத் தேடியலைவார். ஆனால், அந்தத் தர்மத்தை ஏற்கும் எவரையும் அவர் காணமாட்டார். அதையும் நீ நீண்ட ஆயுளுடன் இருந்தால் பார்ப்பாய்” என்றார்கள். 

    நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து சொன்னார்கள், “உங்களில் ஒருவர் அல்லாஹ்வைச் சந்திக்கும் மறுமை நாளில், அவருக்கும் அவனுக்குமிடையே மொழிபெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார். அப்போது அல்லாஹ், 'நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே, அவர் உனக்கு என் செய்தியை எடுத்துரைக்கவில்லையா?' என்று கேட்பான். 

    அவர், 'ஆம், எடுத்துரைத்தார்' என்று பதிலளிப்பார். பிறகு அல்லாஹ், 'உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப்படுத்தவில்லையா?' என்று கேட்பான். பிறகு அவர், 'ஆம் உண்மைதான்' என்பார். பிறகு அவர் தன் வலப்பக்கம் பார்ப்பார், அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார். தன் இடப்பக்கம் பார்ப்பார், அங்கும் நரகத்தைத் தவிர வேறெதையும் காண மாட்டார். நான் உங்களுக்கு அறிவுறுத்துவதெல்லாம், பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டு கூட இல்லையோ அவர் நல்ல சொல் ஒன்றைக் கொண்டாவது நரகத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளட்டும்' என்று சொன்னார்கள். 

    நபி(ஸல்) அவர்களின் வாக்குப்படி நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட 'தய்யி' குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் இல்லாமலிருந்தார்கள். ‘ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை என் கண்களால் பார்த்தேன் என்றும், பாரசீக மன்னன் கிஸ்ரா இப்னு ஹுர்முஸின் கருவூலங்களை வென்றவர்களில் தானும் ஒருவனாக இருந்தேன் என்றும் அதீ இப்னு ஹாத்திம்(ரலி) பிற்காலத்தில் சாட்சியம் சொன்னார்கள். 

    அதேபோல் “நீங்கள் நீண்ட நேரம் வாழ்ந்தால் 'ஒருவன் தங்கத்தையோ வெள்ளியையோ கைநிறைய அள்ளிக்கொண்டு அதைத் தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்' என்று அபுல் காஸிம் நபி(ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் நடை முறையில் காண்பீர்கள்” என்றும் அதீ இப்னு ஹாத்திம்(ரலி) வலியுறுத்தினார்கள். 

    ஸஹீஹ் புகாரி 4:61:3595

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×