search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இவ்வுலக செல்வம் தரும் நன்மையும் தீமையும்
    X

    இவ்வுலக செல்வம் தரும் நன்மையும் தீமையும்

    இந்த உலகின் செல்வம் இனிமையானதாகும். இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறவருக்கு அது நல்லுதவியாக அமையும்.
    நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்தபோது சில கிராம மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து தர்மம் கேட்கலானார்கள். ஒரு கருவேல முள் மரம் வரை நபி(ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் “என் சால்வையை என்னிடம் கொடுத்துவிடுங்கள். இந்த முள் மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் அவற்றை நான் உங்களிடையேதானே பங்கிட்டிருப்பேன். பிறகு நீங்கள் என்னைக் கருமியாக, பொய்யனாக, கோழையாகக் காணமாட்டீர்கள்” என்று சொன்னதும் கிராமத்து மக்கள் விலகிச் சென்றனர். 

    நபி(ஸல்) அவர்கள் ஒரு சில மக்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கி அதிகமாகப் போரின் பங்குப் பொருட்களைப் பிரித்துத் தந்ததாக மதீனாவாசிகள் பேசிக் கொண்டனர். இவ்விஷயம் நபி(ஸல்) அவர்களின் காதுகளுக்கு எட்டியது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? மூஸா நபியும் இத்தகைய மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். 

    அவர்களைப் போல் நானும் சகித்துக் கொள்கிறேன்” என்று சொல்லி நபி(ஸல்) அவர்களைப் பற்றித் தவறாகப் பேசிய அன்சாரிகளில் சிலரை ஒன்றுகூட்டி, தமது அரசியலை விளக்கினார்கள் நபி(ஸல்). “குறைஷிகள், அறியாமைக் கொள்கையை இப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள். இஸ்லாத்தை ஏற்றதால் அவர்களுக்கு நேரும் சோதனைகளுக்கு அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், இஸ்லாத்துடன் அவர்களுக்கு இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன். 

    அதனாலேயே புதிதாக இஸ்லாமைத் தழுவிய குறைஷித் தலைவர்களுக்கும் ஏனைய குறைஷிகளுக்கும் அதிகமாக வாரி வழங்கினேன். அவர்கள் உலகச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பிச் செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதருடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையா?" என்று கேட்டார்கள். "ஆம் அதைத் தான் விரும்புகிறோம்" என்று நபி(ஸல்) அவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அன்சாரிகள் பதிலளித்தனர்.

    வேறொருநாள் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் அமர்ந்திருந்தபோது, “நபியே! உலகச் செல்வங்கள் நமக்கு நன்மை தீமையை உருவாக்குமா?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “நன்மையால் நன்மையே விளையும். இந்த உலகின் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். 

    வாய்க்கால் மூலம் விளைகின்ற பயிர்கள் ஒவ்வொன்றும் கால்நடைகளை, வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. மாறாக, பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகள் மடிவதில்லை. ஏனெனில், அவை புல்லைத் தின்று வயிறு நிரம்பிவிடும்போது சூரியனை நோக்கிப் படுத்துக் கொண்டு அசை போடுகின்றன. இதனால் நன்கு சீரணமாகி சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. 

    பின்னர் வயிறு காலியானவுடன் மறுபடியும் சென்று மேய்கின்றன. இந்த உலகின் செல்வம் இனிமையானதாகும். இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறவருக்கு அது நல்லுதவியாக அமையும். இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்” என்று உதாரணத்துடன் மக்களுக்குப் புரிகின்ற வகையில் விளக்கினார்கள்.
     
    ஸஹீஹ் புகாரி 3:56:2821, 3:57:3150, 4:64:4334, 7:81:6427

    -ஜெஸிலா பானு.
    Next Story
    ×