search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    “செய்யாததை சொல்லாதே”
    X

    “செய்யாததை சொல்லாதே”

    நமது எண்ணங்கள், சொல், செயல் இவை அனைத்தும் இறைவழியில் அமைத்துக்கொள்வதே நேர்வழி பெறுவதற்கான அடையாளமாகும்.
    ‘அறியாமை’ என்ற இருள் இந்த அகிலத்தை சூழ்ந் திருந்த காலகட்டத்தில், “மக்களிடமிருந்து அறியாமையை நீக்குங்கள் நபியே” என்று முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான்.

    இந்த கட்டளையில் மிகமுக்கியமான கருத்து பொதிந்துள்ளது. அதாவது, ‘தனி ஒருவன் மட்டும் நன்மைகளைச் செய்து, நல்லவனாய் வாழ்வது மட்டும் குறிக்கோள் அல்ல. தன்னைச் சார்ந்தவர்களையும், அந்த சமூகத்தையும் நன்மையின் பாதையில் அழைத்து வர வேண்டும்”.

    ‘இறைவன் வகுத்த இந்த வழியில் செயலாற்றுபவர்கள் ஒருபோதும் நஷ்ட மடைய மாட்டார்கள்’ என்பது இறைவனின் சொல்லாகும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    “மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும்; நற்செயல்கள் புரிந்துகொண்டும்; மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும்; பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர. (103:2,3)

    இறைவனின் இந்த கட்டளையை ஏற்றுக்கொண்ட நபிகளார், அதன்படி தான் மட்டும் வாழாமல், பிறருக்கும் அதனை எடுத்தறிவித்தார்கள். அதனால் தான் சீர்கெட்ட ஒரு சமுதாயம் சீர்மிகு சமுதாயமாக பரிமளித்தது என்பது வரலாற்று உண்மை.

    ஒருமுறை பாவங்கள் மிகுந்த ஒரு கூட்டத்தினரை அழித்துவிடுமாறு இறைவனின் கோபம் இறங்கியது. அப்போது, ‘அந்த ஊரில் நல்ல மனிதர் ஒருவர் உள்ளார். அவரையும் சேர்த்தா அழிக்க வேண்டும்’ என்று இறைவனிடம் கேட்கப்பட்டது. அப்போது, ‘தான் பெற்ற ஞானத்தை பிறருக்குச் சொல்லாமல் இருந்ததால் தான் அந்த சமூகம் இத்தனை பாவத்தில் ஆழ்ந்தது. தெரிந்தவர் சொல்லவில்லை என்றால், தெரியாதவர்கள் எப்படி சத்தியத்தை அறிந்து கொள்வார்கள்’ என்றான்.

    அல்லாஹ் தன் அருள்மறையிலே லுக்மான் (அலை) தன் மகனுக்கு அறிவுரை கூறுவதாக சொல்லும் இடத்தில் இப்படி குறிப்பிடுகின்றான்:

    “என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு! மேலும், எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்! நிச்சயம் இவையெல்லாம் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள விஷயங்களாகும்”. (31:17)

    ஆனால் இன்றைய காலச்சூழ்நிலையில் நமது வாழ்க்கை எப்படி உள்ளது?. தனிநபர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள், ஊரில் உள்ளவர்கள், நாட்டில் உள்ளவர்கள், நம்மை வழிநடத்துபவர்கள் எப்படி இருக்கிறார்கள். சத்தியத்தை எடுத்துச் சொல்லி நம்மை நேர்வழியில் நடத்து கிறார்களா? என்றால், ‘இல்லை’ என்று தான் பதில் கிடைக்கும்.

    ஏனென்றால் நம்மில் பலர் நேர்வழியில் இல்லை. ஆனால் அசத்தியத்தை, பொய்களை, புரட்டுகளை, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தைரியமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    செய்யாததை சொல்வதும், சொல்லாததை செய்வதும் மிக பெரிய பாவம் என்று திருக்குர்ஆன் தெளிவுபடச் சொல்லு கிறது.

    ஒருமுறை நபித்தோழர் ஒருவர் தான் மகனை அழைத்து, ஒரு செயலை செய்யச் சொல்லி ஏவிய போது, ‘இதனைச் செய்தால், இதனைத் தருவேன்’ என்று சொன்னார். அருகில் இருந்து இதனை கவனித்து கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவரை அழைத்து ‘நண்பரே நீங்கள் சொல்வது நிஜம் தானே, நிச்சயமாக நிறைவேற்றுவீர்கள் தானே. ஏனென்றால் சிறிய செயலுக்காகக் கூட பொய்யான வாக்குறு தியை சிறுவர்கள் நெஞ்சில் விதைக்காதீர்கள். இதனால் அவன் வாழ்வு முறையே மாறி விடும்’ என்று கடிந்து கொண்டார்கள்.

    தான் செய்யாததை பிறருக்கு செய்தியாக சொல்வது பெரும் பாவம் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. அதனால் அதனை வெகு இலகுவாக எண்ணிக்கொண்டு, பாவம் என்றே அறியாமல் அந்த செயலில் ஈடுபட்டு வருகிறார் கள். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    “நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகின்றீர்கள்?” (61:2)

    “நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக இருக்கின்றது” (61:3).

    எங்கோ, யாராலோ, ஏதாவது நன்மையான காரியங்கள் நிகழ்த்தப்படுமானால் அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத ஒருவர் அதனை தானே செய்ததாக மார்தட்டிக் கொள்வது தவறு என்று திருக்குர்ஆன் கண்டிக்கிறது. மேலும், அதனால் உங்களுக்கு எந்த நன்மையையும் விளையப் போவதில்லை, மாறாக பாவச்சுமைகள் உங்கள் தோள்களில் ஏறிவிடும் என்றும் திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.

    திருக்குர்ஆனை நன்றாக கற்று அறிந்த அறிஞர்கள், திருக்குர்ஆன் வழியில் தானும் நடந்து, பிறரையும் அதன்படி நடக்க வழிகாட்ட வேண்டும். ஆனால் ‘உபதேசம் ஊருக்குத்தான், தனக்கு அல்ல’ என்று நடந்துகொண்டால் அது தவறு, என்று திருக்குர்ஆன் இவ்வாறு கண்டிக்கிறது:

    ‘நீங்கள் வேதத்தையும் ஓதிக்கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?’ (2:44)

    இன்றைய மக்கள், மதத்தலைவர்கள், வியாபாரிகள், முதலாளிகள், ஆட்சியாளர்கள் என அனைத்துதரப்பினரின் சொல்லும் செயலும் ஒரே மாதிரி உள்ளதா? என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. இறைவன் வகுத்த வழியில் வாழ வேண்டும் என்று மக்களிடம் சொல்பவர்கள், அந்த வழியில் வாழ்வதில்லை. கொடுக்கும் வாக்குறுதிகளை செய்துமுடிக்கவேண்டும் என்ற உணர்வு இல்லாதவர்களாக உள்ளனர். சுயநலம், சுயலாபம் என்ற கோணத்திலேயே மனிதனின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

    இதனால் பாவங்கள் மலிந்துவிட்டன. பாவங்களுக்கும், பழிச்செயல்களுக்கும் அஞ்சும் மனம் மறைந்துவிட்டது. ‘இறைவன் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறான், அவனது கோபத்திற்கு ஆளாகக்கூடாது’ என்ற இறையச்சம் மனித மனங்களில் இல்லை. இதனால் அநீதிகள் பெருகிவிட்டன, மனிதன் மீது பெரும் பாவச்சுமைகள் விழுந்துவிட்டன. இந்த ஆபத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காத்தருள்வானாக.

    நமது எண்ணங்கள், சொல், செயல் இவை அனைத்தும் இறைவழியில் அமைத்துக்கொள்வதே நேர்வழி பெறுவதற்கான அடையாளமாகும்.

    எம்.முஹம்மது யூசுப், உடன்குடி.
    Next Story
    ×