search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரமாண்டமாக மாறும் மெக்கா மசூதி
    X

    பிரமாண்டமாக மாறும் மெக்கா மசூதி

    இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மெக்காவுக்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்பது 5 முக்கிய கடமைகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது.
    இஸ்லாமிய மக்களின் புனித ஸ்தலமாக இருப்பது மெக்கா மசூதி.சவுதி அரேபியா நாட்டில் இறை தூதர் முகமது நபியின் சொந்த ஊரான மெக்கா நகரில் இந்த மசூதி அமைந்துள்ளது.

    இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மெக்காவுக்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்பது 5 முக்கிய கடமைகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது. எனவே, மெக்காவுக்கு உலகம் முழுவதும் இருந்து முஸ்லிம்கள் புனித யாத்திரை வருகின்றனர்.

    இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் மெக்காவுக்கு வருகின்றனர். புனித ஹஜ் யாத்திரை மாதத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். உலகிலேயே அதிகம் பேர் வரும் வழிபாட்டு ஸ்தலமாக மெக்கா மசூதி உள்ளது. அத்துடன் உலகிலேயே பெரிய மசூதியாகவும் இந்த மசூதி இருக்கிறது.

    தற்போது 38 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மசூதி அமைந்துள்ளது. அதை மேலும் விரிவுபடுத்தி கட்டி வருகிறார்கள். இதனால் மிக பிரமாண்ட மசூதியாக மெக்கா மசூதி அமைய உள்ளது. மெக்கா மசூதி ஆரம்பத்தில் சிறு வழிபாட்டு தளமாக இருந்து வந்தது. பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதை விஸ்தரித்து கட்டி வந்துள்ளனர்.

    கி.மு. 2130-ம் ஆண்டு வாக்கிலேயே இந்த இடத்தில் வழிபாட்டு தளம் இருந்திருக்கிறது. இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட இப்ராகீம் நபி முதலில் இங்கு வழிபாட்டு தளத்தை கட்டியுள்ளார். இறைவன் அடையாளம் காட்டிய இடத்தில் இப்ராகிம் நபி தனது மகன் இஸ்மாயில் உதவியுடன் அங்கு புனித இடமான காபாவை கட்டி அதை ஒட்டி வழிபாட்டு தளத்தை அமைத்தார். அங்கு தொடர்ந்து வழிபாடுகள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் மெக்காவில் பிறந்த இறை தூதரான முகமது நபி மதீனா சென்று விட்டு பல வெற்றிகளுடன் கி.பி. 630-ல் மெக்கா திரும்பினார். முகமது நபியும், அவரது மருமகன் அலி அபுதலீப்பும் சேர்ந்து வழிபாட்டு தளத்தை சீரமைத்து மசூதியை அமைத்தனர். அதை தொடர்ந்து மெக்கா மசூதி முக்கிய இடமாக மாறியது. எல்லா இடங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தனர்.

    இதன் பின்னர் அப்த் அல் மாலிக் கி.பி. 692-ல் மசூதியை மிகப்பெரிய அளவில் சீரமைத்தார். பக்கவாட்டு பகுதியை விஸ்தரித்து மசூதி கட்டப்பட்டது. அதன் பிறகு இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் மசூதி கட்டுமானம் பாதிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் இவற்றை சீரமைத்து வந்தனர்.

    8-ம் நூற்றாண்டு வரை மசூதி மரத்தூண்கள் அமைத்து அதன் மூலம்தான் உருவாக்கப்பட்டு இருந்தது. அப்போது நடந்த சீரமைப்பு பணியின் போது, மரத்தூண்கள் எல்லாம் அகற்றப்பட்டு மார்பல் கற்கள் தூண் கொண்டு கட்டுமான பணி நடந்தது. அப்போது இன்னும் விரிவுபடுத்தி கட்டினார்கள். மசூதியின் இருபக்கத்திலும் பிரார்த்தனை கூடம் தனியாக அமைக்கப்பட்டது.

    அப்போது மசூதியில் ஒரு கோபுரமும் கட்டப்பட்டது. அதன்பிறகு மீண்டும் நடந்த கட்டுமான பணிகளின் போது கூடுதலாக மேலும் 3 கோபுரங்கள் கட்டப்பட்டன.

    1570-ல் துருக்கியின் ஒட்டாமான் மன்னர்கள் கட்டுப்பாட்டின் கீழ் மெக்கா இருந்தது. அப்போது மன்னராக இருந்த சுல்தான் 2-ம் சலீம் மசூதியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்டினார். மசூதியின் தூண்கள் அனைத்தும் அகற்றப்பட்டதுடன் மேற்கூரையும் அகற்றப்பட்டு புதிய வடிவமைப்புடன் கட்டப்பட்டது. கூரை மேல் பகுதியில் புதிதாக பிரமாண்ட குவிமாடம் (டூம்’)அமைக்கப்பட்டது.

    1621, 1629-ம் ஆண்டுகளில் பெய்த பலத்த மழை காரணமாக மசூதியின் மதில் சுவர் மற்றும் உள்கட்டுமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. அப்போது ஒட்டாமான் மன்னராக இருந்த சுலதான் 5-ம் முராத் மசூதி முழுவதையும் சீரமைத்தார். அப்போது ‘காபா’வும் மாற்றி அமைத்து பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. மசூதி முழுவதும் புதிய பளிங்கு கற்கள் பதித்து மாற்றி அமைக்கப்பட்டது. பக்தர்கள் நடந்து வர நீண்ட நடைபாதையும் உருவாக்கப்பட்டது. மசூதி தரைப்பகுதி முழுவதும் மார்பல் கற்கள் பதிக்கப்பட்டது.

    மேலும் மசூதியில் 3 கோபுரங்களையும் மன்னர் முராத் கட்டினார். இதனால் மெக்கா மசூதி கோபுரங்களின் எண்ணிக்கை 7 ஆனது. இந்த சீரமைப்புக்கு பிறகு மசூதி மிகவும் அழகாக காணப்பட்டது. பக்தர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து இருந்தது.

    அதன் பிறகு 300 ஆண்டுகளாக மசூதியில் எந்த பெரிய சீரமைப்பு பணிகளும் நடக்கவில்லை. ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்த நிலையில் 1955-ல் பெரிய அளவில் மசூதியை சீரமைக்கும் பணி நடந்தது. பக்தர்களுக்கு புதிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

    பின்னர் 1973-ம் ஆண்டும் சீரமைப்பு பணிகள் நடந்தன. புதிதாக 4 கோபுரங்கள் கட்டப்பட்டது. இதன் மூலம் மசூதியின் கோபுரங்களின் எண்ணிக்கை 11 ஆனது. கூரையிலும் மாற்றம் செய்யப்பட்டது. ஒட்டாமான் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு புதிய தூண்கள் அமைக்கப்பட்டன.

    அடுத்து சவுதி அரேபிய மன்னர் பகத் 1982-லும், 1988-லும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார். அப்போது மசூதிக்கு வெளியிலும் பிரார்த்தனை கூடங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் 2005-ம் ஆண்டிலும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது 3-வது பிரார்த்தனை கூடம் அமைத்தனர். மேலும் மசூதிக்கு உள்ளே செல்ல 18 புதிய வாசல்களும் அமைக்கப்பட்டன. புதிதாக 3 குவிமாடம் அமைக்கப்பட்டது.



    எவ்வளவு விரிவு செய்து கட்டினாலும் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மசூதியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்ட மன்னர் அப்துல்லா அப்துல் அசிஸ் முடிவு செய்தார். இதன்படி மிகப்பெரிய சீரமைப்பு பணி 2007-ம் ஆண்டு தொடங்கியது. மசூதியின் உள்பகுதி, வெளிப்பகுதி என அனைத்தும் மாற்றி அமைத்து விரிவாக்கம் செய்து கட்டப்பட்டு வருகிறது. 2 புதிய பிரமாண்ட கோபுரங்களும் கட்டப்பட உள்ளன.

    இந்த சீரமைப்பு பணி 2020-ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இதற்காக மட்டும் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது. உலகிலேயே தனி ஒரு கட்டிடத்துக்காக அதிக தொகை செலவிடப்படுவது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. முழு விரிவாக்க பணி முடிந்ததும் ஒட்டு மொத்த மசூதி பகுதியும் 4 லட்சத்து 90 ஆயிரம் சதுர அடியாக விரிவடையும்.

    உலகிலேயே அமெரிக்காவில் உள்ள போயிங் விமான நிறுவனத்தின் கட்டிடம்தான் பெரியதாகும். அதற்கு அடுத்து பெரிய கட்டுமான இடமாக மெக்கா மசூதி இருக்கும். சுமார் 25 லட்சம் பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் இடம் அளிக்கும் வகையில் மசூதி விரிவாக்கம் செய்யப்படுகிறது. மசூதி முற்றத்தில் மட்டும் ஒரே நேரத்தில் 2½ லட்சம் நின்று வழிபாடு செய்ய முடியும்.

    மசூதி விரிவாக்கம் செய்வதுடன் உள் அலங்காரங்களும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. முழு பணிகளும் முடிந்த பிறகு மெக்கா மசூதி மிக பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புனித காபா  :

    மெக்கா மசூதியில் அமைந்துள்ள புனித ‘காபா’தான் முக்கிய இடமாகும். மெக்கா மசூதிக்கு செல்பவர்கள் காபாவை 7 முறை வலம் வந்து வழிபடுவார்கள்.

    காபா பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. முதலில் இந்த இடத்தில் வழிபாட்டு தளம் கட்டப்பட்ட போது காபாதான் கட்டப்பட்டது. இதை சுற்றி பின்னர் மசூதி கட்டப்பட்டது.

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த காபாவை நோக்கி தான் வழிபடுகிறார்கள்.

    காபாவின் உயரம் 43 அடி. அகலம் ஒரு பகுதியில் 36 அடியும், மற்றொரு பகுதியில் 42 அடியும் உள்ளது. இதன் வாசலில் 7 அடி உயர கதவு உள்ளது. இது, 300 கிலோ தங்கத்தால் ஆனது.

    உள் பகுதியில் மன்னர் மற்றும் முக்கிய நபர்கள் மட்டும் குறிப்பிட்ட நாளில் அனுமதிக்கப்படுகிறார்கள். காபாவின் ஒரு மூலையில் கருப்பு விசே‌ஷ பளிங்கு கல் வைக்கப்பட்டுள்ளது. இது, விண்ணில் இருந்து வந்த கல் என்று கூறுகின்றனர்.

    காபாவுக்கு ‘ஜம் ஜம்’ என்ற புனித கிணறு உள்ளது. இது, இப்ராகிம் வழிபாட்டு தளம் கட்டிய போதே இருந்த நீரூற்று ஆகும். இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றும் இதில் தண்ணீர் உள்ளது. யாத்திரை வரும் பக்தர்கள் இந்த கிணற்றில் உள்ள நீரை தங்கள் வீட்டுக்கு புனித நீராக எடுத்து செல்கிறார்கள்.
    Next Story
    ×