search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கஅபாவுக்குள் நுழைந்து சிலைகளை அகற்றிய நபிகளார்
    X

    கஅபாவுக்குள் நுழைந்து சிலைகளை அகற்றிய நபிகளார்

    நபி(ஸல்) அவர்கள் தங்கள் கையில் இருந்த வில்லால் கஅபாவைச் சுற்றி இருந்த 360 சிலைகளை அடித்துக் கீழே தள்ளினார்கள். அப்போது “சத்தியம் வந்தது அசத்தியம் மறைந்தது.
    நபி (ஸல்) அவர்களின் ஆலோசனையின்படி முஸ்லிம்களின் படை பலம் மக்காவாசிகளுக்குத் தெரியாமல் இருக்க, முஸ்லிம்கள் சிறு சிறு படை பிரிவுகளாக, ஒவ்வொரு படை பிரிவிற்கும் ஒவ்வொரு தலைவரை உருவாக்கி வெவ்வேறு இடங்களிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டனர்.

    காலித் இப்னு வலீத் (ரலி) மற்றும் அவரது படையினர் தங்களை எதிர்த்த இறைநிராகரிப்பாளர்களை வெட்டி வீழ்த்தினர். காலித்(ரலி) அவர்களின் படையிலிருந்து வழிதவறி சென்றவர்களைக் குறைஷிகள் கொன்றனர். ஆனால் காலித்தின் வீரத்தையும் அவருடைய படை பலத்தையும் ஒன்றும் செய்ய முடியாமல் குறைஷிகள் புறமுதுகு காட்டி உயிருக்கு அஞ்சி ஓடினர்.

    இப்படி ஒவ்வொரு பிரிவினரும் மக்காவில் நுழைந்து முன்னேறி, தங்களிடமிருந்த கொடியை நட்டுவிட்டு நபி (ஸல்) அவர்களின் வருகைக்காக அங்கேயே காத்திருந்தனர்.

    அன்சாரிகளின் புடைசூழ நபி (ஸல்)  அவர்கள் அணிவகுத்து அங்கு சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்கா பள்ளிக்குள் நுழைந்து ‘ஹஜ்ருல் அஸ்வதை’ (சொர்க்கத்து    கல்லை) நெருங்கி அதனைத் தங்களது கையால் தொட்டு முத்தமிட்டு, கஅபாவை தங்களது வாகனத்திலிருந்தபடியே தவாஃப் செய்தார்கள் -  அதாவது வலம் வந்தார்கள். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் அவ்வாறே  தவாஃப் செய்தனர்.

    நபி(ஸல்) அவர்கள் தங்கள் கையில் இருந்த வில்லால் கஅபாவைச் சுற்றி இருந்த 360 சிலைகளை அடித்துக் கீழே தள்ளினார்கள். அப்போது “சத்தியம் வந்தது அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்ற குர்ஆனின் வசனத்தை உரக்க ஓதிக் கொண்டே தவாஃப் செய்தார்கள். சிலைகளெல்லாம் முகம் குப்புற கீழே விழுந்தன. உம்ரா செய்யும் நோக்கத்தில் வராததால் நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் (உம்ராவிற்கான ஆடை) அணியாமல் தவாஃப் மட்டும் செய்தார்கள். வலம் வந்த பிறகு உஸ்மான் இப்னு தல்ஹா (ரலி) அவர்களிடம் இருந்த கஅபாவின் சாவியைப் பெற்று அதைத் திறக்கக் கூறினார்கள்.

    கஅபாவின் உள்நுழைந்து அங்கு வரையப்பட்ட பலவிதமான படங்களை அழித்தார்கள். தங்களது படை வீரர்களையும் உருவப் படங்களை அழிக்கக் கட்டளையிட்டார்கள்.

    சிலைகளும் உருவப்படங்களும் முற்றிலுமாக அகற்றப்பட்ட பின்னர் நபி(ஸல்) அவர்கள் கஅபாவுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள். அவர்களுடன் உஸாமா(ரலி) மற்றும் பிலால்(ரலி) உடனிருந்தனர்.

    இந்நிகழ்வின் போது கஅபா ஆறு தூண்களின் மீதே அமைக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) தனது இடப்புறத்தில் இரண்டு தூண்கள், வலப்புறத்தில் ஒரு தூண் தனக்குப் பின் மூன்று தூண்கள் இருக்குமாறும், கஅபாவின் வாயிலுக்கு நேர் திசையிலுள்ள சுவரை நோக்கி, மூன்று முழங்கள் சுவருக்கும் தனக்குமிடையே இடைவெளி விட்டு நின்றும் தொழுதார்கள். தொழுத பின் கஅபாவுக்குள் சுற்றி வந்து ஒவ்வொரு மூலையிலும் லாஇலாஹஇல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று இறைவனைப் புகழ்ந்து, மேன்மைப் படுத்தி, பின்னர் கதவைத் திறந்தார்கள்.

    குறைஷிகள் அனைவரும் பள்ளிக்குள் திரண்டு வரிசையாக நின்று கொண்டு நபி(ஸல்) அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என எதிர்பார்த்திருந்தனர்.

    திருக்குர்ஆன் 17:81, ரஹீக் அல் மக்தூம்

    -ஜெஸிலா பானு.
    Next Story
    ×