search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்: பயன்தராத செல்வம்...
    X

    இஸ்லாம்: பயன்தராத செல்வம்...

    உலகின் செல்வங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து வைத்திருந்தாலும் மண்ணறைக்கு வரும்போது ஒன்று மில்லாமல்தான் வரவேண்டும். இதை மறந்துவிடாதீர்கள்.
    ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் மதீனாவின் வீதிகளில் சென்றுகொண்டிருந்தபோது அவர் களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(இவர்) நிம்மதி பெற்றவராவார் அல்லது பிறருக்கு நிம்மதி அளித்தவராவார்’ என்று சொன்னார்கள்.

    பெருமானார் (ஸல்) அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று தோழர்களுக்குப் புரியவில்லை. அவர்களிடமே விசாரிக்கலாமே என்று, ‘அல்லாஹ்வின் தூதரே! நிம்மதி பெற்றவர்; நிம்மதி அளித்தவர் என்றால் என்ன?’ என்று கேட்டார்கள்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இறைநம்பிக்கை கொண்ட அடியார் இறக்கும்போது இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் நிம்மதி பெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான ஓர் அடியான் இறக்கும்போது அவனின் தொல்லைகளில் இருந்து மற்ற அடியார்கள், நாடு நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன நிம்மதி பெறுகின்றன’ என்று சொன்னார்கள். (புகாரி)

    இறந்தவர்களைக் குறித்து குறை எதுவும் கூறக்கூடாதுதான். ஆயினும் ஒருசில கெட்ட மனிதர்கள் இறக்கும்போது மனம் ஒருவகை நிம்மதி பெறுவது இயற்கை. அப்பாடா.. என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம். ஏன்..? என்ன காரணம்..?

    அவனால் இந்த சமூகத்திற்கு நன்மை எதுவும் இல்லை என்பதைவிட, அநீதியும் அக்கிரமங்களும் அதிகம் என்பதால். ஒரு கெட்ட மனிதன் இறக்கும்போது சக மனிதன் மட்டுமல்ல; மாறாக மரமும் செடியும் கொடியும் ஏன் விலங்குகள்கூட நிம்மதி பெறுகின்றன என்றால், அவனால் எந்த அளவுக்கு இவை அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

    சுய லாபத்திற்காக விவசாய நிலங்களை இல்லாமல் ஆக்கும் மனிதன், திருட்டுத்தனமாக வாய்க்கால் மணலை அள்ளி விற்கும் மனிதன், சாயக்கழிவுகளை ஆறுகளில் விட்டு நல்ல தண்ணீரையும் கெட்ட தண்ணீராக மாற்றும் மனிதன், மலைகளை வெட்டிஎடுத்து விற்பனை செய்யும் மனிதன், இவர்கள் அனைவரும் இறந்தால் ஏனைய படைப்புகள் நிம்மதி பெறும் என்பது பெருமானாரின் அமுத வாக்கு.

    ஏனெனில், இதுபோன்ற கெட்ட மனிதர்களால் ஏனைய படைப்புகள் நேரடியாகவே பாதிப்பு அடைகின்றன. அதனால்தான் இவர்கள் இறக்கும்போது அவை நிம்மதி பெறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.

    அதேவேளை நல்ல மனிதர்கள் மனித நெஞ்சங்களில் வாழ்கின்றார்கள். ஆம், அவர்கள் மறைந்தாலும் அவர்களின் நினைவுகள் ஒருபோதும் நெஞ்சைவிட்டு மறைவதில்லை. அவர் களின் மறைவுக்காக மனித மனங்கள் அழும். நல்லவராக வாழ்ந்த ஒரே காரணத்திற்காக பல சிரமங்களுக்கு அவர்கள் முகம் கொடுத்திருப்பார்கள். மரணித்துவிட்டால் உலகைவிட்டு நிம்மதியாகப் போய் சேர்கின்றார்கள்.

    எவ்வளவு பெரிய கருத்தை அந்த நபிமொழி உணர்த்திச் செல்கிறது என்பதைப் பாருங்கள்.

    வரலாற்றில் யாரெல்லாம் கெட்டவர்களாக வாழ்ந்திருக்கின்றார்களோ அவர்கள் அனைவரும் மனித மனங்களில் இன்னும் வெறுப்புக்குரியவர்களாகத்தானே வாழ்கிறார்கள். ஹிட்லரைக் குறித்து நினைவு கூரும்போதெல்லாம் நாஜிகளுடன் அவர் நடந்துகொண்ட விதம் குறித்தும், அவரது கொடுமை குறித்தும்தானே நமது நினைவுத்திரையில் வந்து போகின்றது. அவ்வாறெனில் அவர் இறந்தபோது யார் யாரெல்லாம் நிம்மதி அடைந்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

    நல்லவர்களாக வாழ்ந்தவர்கள், வாழும்போதே மரணம் எப்படி வருமோ என்று அஞ்சி நடுங்கியவர்களாகவே வாழ்ந்துள்ளனர். அதேவேளை கெட்டவர்கள், எதைக்குறித்தும் கவலைப்படுவது இல்லை.



    இஸ்லாமிய வரலாற்றில் ஹாரூன் ரஷீத் பிரபலமான ஆட்சியாளர். ஒருநாள் வேட்டைக்காக வெளியே சென்றபோது மண்ணறைகள் இருக்கும் பகுதியைக் கடந்துசென்றார். அங்கே பஹ்லூல் என்றொரு அறிஞர் இருந்தார். பஹ்லூல் ஒரு பேரறிஞர்.

    ‘எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள்’ என்று அவரிடம் ஹாரூன் கேட்டார்.

    ‘நம்பிக்கையாளர்களின் தலைவரே! உமது முன்னோர்கள் எங்கே?’ என்று பஹ்லூல் வினவினார்.

    ‘அனைவரும் இறந்துவிட்டனர்?’

    ‘அவர்களது கோட்டை எங்கே?’

    ‘அதோ அங்கே இருக்கின்றது’

    ‘இறந்தபின் அவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள்?’

    ‘இதோ இந்த மண்ணறைக்குத்தான்’

    ‘அது அவர்களுடைய கோட்டை, இது அவர்களுடைய மண்ணறை. அந்த கோட்டை அவர்களுக்கு எப்பயனையும் தரவில்லையே. அரசே! உலகின் செல்வங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து வைத்திருந்தாலும் மண்ணறைக்கு வரும்போது ஒன்று மில்லாமல்தான் வரவேண்டும். இதை மறந்துவிடாதீர்கள்’.

    அவ்வளவுதான், அழுதார் ஹாரூன் ரஷீத். வேட்டையாடாமல் அரண்மனைக்குத் திரும்பினார். படுத்த படுக்கையாக வீழ்ந்தார். அதுவே அவரது மரணத்திற்கான அறிகுறியாக மாறியது.

    பின்னர் தன்னுடைய படைகள் அனைத்தையும் ஓரிடத்தில் ஒன்றுகூட்டுமாறு கூறினார். ஒன்றுகூட்டப்பட்டது. எண்ணிலடங்கா வீரர்கள். அனைத்தையும் பார்வையிட்டபின் அழுதார்.

    ‘இறைவா..! நீங்காத ஆட்சிக்குரியவனே! என் மீது கருணை புரிவாயாக! இந்த அதிகாரம் நீங்கக்கூடியது என்பது எனக்குப் புரிந்துவிட்டது’.

    பின்னர் தனக்கென மண்ணறை தோண்டுமாறும், கஃபன் (இறந்தவர் உடலுக்கு அணிவிக்கப்படும் ஆடை) கொண்டுவருமாறும் கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது. பின்வரும் இறைவசனத்தை ஓதினார்: ‘இன்று என்னுடைய செல்வம் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லையே! என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடிந்துபோய் விட்டதே!’ (69:28,29)

    அழுத நிலையில் இதனை ஓதியவாறே மரணத்தைத் தழுவினார்.

    நாம் யாராக மரணிக்கப்போகின்றோம்? நம்மால் அடுத்தவர் நிம்மதி பெறும் அளவுக்கா? அல்லது இந்த உலகில் இருந்து நாம் நிம்மதி பெறும் அளவுக்கா? என்பதை யோசித்து முடிவெடுப்போம்.

    நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    Next Story
    ×