search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நம்பிக்கை துரோகத்தையும் மன்னித்த நபிகள் பெருமானார்
    X

    நம்பிக்கை துரோகத்தையும் மன்னித்த நபிகள் பெருமானார்

    ஒற்றர்கள் வழியாகச் செய்தி செல்வதை அல்லாஹ் தடுத்துவிட்டான். குறைஷிகளுக்கு எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. முஸ்லிம்கள் போருக்கு தயாராகி மக்காவிற்குப் புறப்பட்டனர்.
    மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை வருகிறது என்ற செய்தி இரகசியமாக இருக்க வேண்டும். மக்காவிற்குள் திடீரென நுழையும் வரை ஒற்றர்கள் மூலம் குறைஷிகளுக்கு இச்செய்தி தெரியாமல் இருக்க வேண்டுமென்று பார்த்துக் கொண்டார்கள் நபி(ஸல்) அவர்கள்.

    ஆனால் ஹாதிப் இப்னு அபீ பல்தஆ(ரலி) ஒரு பெண்ணின் மூலம் குறைஷிகளுக்குக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். இதனால் அவர் பிடிக்கப்பட்டார். நபி(ஸல்) அவர்களின் முன்பு ஹாதிப் இழுத்து வரப்பட்டார். உமர்(ரலி), “ஹாதிப் துரோகமிழைத்துவிட்டார், ஆணையிடுங்கள் அவருடைய கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று கூறினார். மிகப் பொறுமையுடன் நபி(ஸல்) அவர்கள் ஹாதிப்பை பார்த்து “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.

    அதற்கு ஹாதிப் “நான் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்று இப்படிச் செய்யவில்லை. இணைவைப்பாளர்களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் எனக்கு அங்கு செல்வாக்கு கிடைக்கும், அதன் மூலம் மக்காவிலிருக்கும் என் மனைவியும் மக்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்பியே இக்காரியத்தைப் புரிந்தேன்.

    நான் மக்காவில் வாழ்ந்தேனே தவிர நான் குறைஷியல்ல, என் குடும்பத்தைப் பாதுகாக்க எனக்கு அங்கு எந்தக் குறைஷி உறவினரும் இல்லை. உங்களுடைய தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் குடும்பத்தையும் அவர்களின் செல்வத்தையும் பாதுகாப்பதற்கு அங்கு அவர்களது மற்ற உறவினர்கள் இருக்கின்றார்கள். எனக்கு அப்படி யாரும் அங்கில்லை” என்று கூறினார்.



    இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “இவர் உண்மையைத்தான் சொல்கிறார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்கள். இருப்பினும் கோபத்தில் கொந்தளித்த உமர்(ரலி), “இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார், என்னை விடுங்கள், இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்” என்று மீண்டும் கூறினார்கள்.

    அப்போது நபி(ஸல்) அவர்கள், ”இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தவர். பத்ரில் பங்கெடுத்தவர்களை நோக்கி அல்லாஹ், 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன். உங்களுக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது' என்று கூறியிருக்கிறான். உமரே! இவர் பத்ரில் கலந்து கொண்டவர் என்பது உனக்குத் தெரியுமா?” என்றார்கள்.

    இதைக் கேட்ட உமர்(ரலி) ஸ்தம்பித்து நின்றார்கள். அவர்களின் கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹாதிப்பை மன்னித்து விடுவித்தார்கள்.

    ஒற்றர்கள் வழியாகச் செய்தி செல்வதை அல்லாஹ் தடுத்துவிட்டான். குறைஷிகளுக்கு எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. முஸ்லிம்கள் போருக்கு தயாராகி மக்காவிற்குப் புறப்பட்டனர்.

    ஸஹீஹ் புகாரி 4:64:3983

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×