search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஒப்பந்தத்தை மீறிய குறைஷிகளும் நபிகளாரின் கோபமும்
    X

    ஒப்பந்தத்தை மீறிய குறைஷிகளும் நபிகளாரின் கோபமும்

    நபி(ஸல்) பதில் பேசாமல் இருக்கவே அவர்களது கோபத்தைப் புரிந்து கொண்டு, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் தமக்காகப் பேசும்படி கேட்டார் அபூ ஸுஃப்யான்.
    “நபியவர்களுடன் சேர விரும்பியவர்கள் நபியவர்களுடனும் குறைஷிகளுடன் சேர விரும்பியவர்கள் குறைஷிகளுடனும் சேர்ந்து கொள்ளலாம். யாரும் யார் மீதும் அதிருப்தியால் தாக்குதல் நடத்த கூடாது” என்பதுதான்  ஹுதைபிய்யா ஒப்பந்தம். ஆனால் குஜாஆவினர் நபியவர்களுடன் சேர்ந்துவிட்டார்களென்று குறைஷிகளும் பக்ரு கோத்திரத்தினரும், குஜாஆவினர் அசந்த நேரத்தில் தாக்குதல் நடத்தினர்.

    அத்துமீறல் குறித்து நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது. குஜாஆவினர் நபி(ஸல்) அவர்களிடம் புகார் தெரிவித்து உதவும்படியும், நியாயம் கிடைக்கும்படியும் கேட்டுக் கொண்டனர். இதற்காகக் குறைஷிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிந்த குறைஷியினர் அவசரமாக அபூ ஸுஃப்யானை தங்களது தூதராக மதீனாவிற்குப் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த அனுப்பி வைத்தனர்.

    அபூ ஸுஃப்யான் மதீனாவை அடைந்து நபி(ஸல்) அவர்களிடம் பேசினார். நபி(ஸல்) பதில் பேசாமல் இருக்கவே அவர்களது கோபத்தைப் புரிந்து கொண்டு, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் தமக்காகப் பேசும்படி கேட்டார் அபூ ஸுஃப்யான். அபூ பக்ர்(ரலி) அவர்களும் மறுக்க, அதன்பின் உமர்(ரலி), அலி(ரலி), ஃபாத்திமா(ரலி) என்று ஒவ்வொருவரிடமும் சிபாரிசுக்காகச் சென்று தோற்று மீண்டும் மக்காவிற்குத் திரும்பினார் அபூ ஸுஃப்யான்.



    நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை மக்காவிற்குச் செல்லவும், அவர்களின் மீது போர் தொடுக்கவும் தயாராகும்படி கட்டளையிட்டார்கள். முஸ்லிம்களின் படை பலம் மக்காவாசிகளுக்குத் தெரியாமல் இருக்க, சிறு சிறு படைகளாக வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து சேர்ந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். இவ்விஷயம் குறைஷிகளுக்கு ஒற்றர்கள் மூலம் தெரிந்துவிடக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

    அப்போது நபி(ஸல்) அவர்களுக்கு ஒற்றர் மூலம் மக்காவிற்கு விஷயம் செல்லவிருக்கிறது என்ற செய்தியை அறிந்து, அதைத் தடுக்க அலீ(ரலி), அபூ மர்ஸத்(ரலி), ஸுபைர்(ரலி) மூவரையும் அனுப்பினார்கள். நபி(ஸல்) அவர்களின் போர் ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும் கடிதத்தை ஹாதிப் இப்னு அபீ பல்தஆ என்பவர் ஒரு பெண்ணின் மூலம் குறைஷிகளுக்குக் கடிதம் அனுப்புகிறார், அக்கடிதத்தைத் தடுக்க வேண்டும், அதனைக் கைப்பற்ற வேண்டுமென்று புறப்பட்டனர்.

    நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, மூவரும் அவளை வழி மறித்து அவளிடம், 'கடிதம் எங்கே?' என்று கேட்டனர். அவள், 'எம்மிடம் கடிதம் எதுவுமில்லை' என்று பதிலளித்தாள். சத்தியம் செய்தாள். அவள் அமர்ந்திருந்த ஒட்டகத்தை அவர்கள் படுக்க வைத்து அந்தக் கடிதத்தைத் தேடினர். ஆனால் கடிதத்தைக் காணவில்லை.

    உடனே அவர்கள் அப்பெண்ணிடம், 'நபி(ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாகக் கடிதத்தை எடுத்துக் கொடு; அல்லது உன்னைச் சோதிப்பதற்காக உன்னுடைய ஆடையை நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்' என்று பயமுறுத்தினர். அச்சத்தில் அவள் கூந்தல் நீண்டு தொங்கும் தன்னுடைய இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். அங்கிருந்து அந்தக் கடிதத்தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தனர்.

    ஹாதிப் இப்னு அபீ பல்தஆ ஏன் துரோகமிழைத்தார் என்று விசாரிக்க அழைக்கப்பட்டார்.

    ஸஹீஹ் புகாரி 4:64:3983

    -ஜெஸிலா பானு.
    Next Story
    ×