search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரோமானியர்களை வீழ்த்திய இஸ்லாமியப் படை
    X

    ரோமானியர்களை வீழ்த்திய இஸ்லாமியப் படை

    முஸ்லிம்களுடன் வம்பு செய்து வந்த பெரும்பாலான அரபு கோத்திரத்தினர், இப்போருக்குப் பின் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.
    முஃத்தா என்ற இடத்தில் நடந்த போரில் மூவாயிரம் பேர் கொண்ட முஸ்லிம் வீரர்கள் இரண்டு லட்ச வீரர்களுடன் சரிக்குச் சமமாக நின்று சண்டையிட்டனர்.

    தளபதியாகப் பொறுப்பேற்று முன்னேறிய ஸைத்(ரலி) கொடியை ஏந்தி கடுமையாகப் போர் புரிந்து வீரமரணமடைந்தார். அவர் கொல்லப்பட்டதும் அக்கொடியை ஜஅஃபர்(ரலி) பற்றினார். ஜஅஃபர்(ரலி) உடல் முழுக்க ஈட்டிக் காயங்களும் வாட்களின் காயங்களுமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட விழுப்புண்களைப் பெற்று வீர மரணமடைந்தார். அதன் பிறகு கொடியை ஏந்த முன் வந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களையும் எதிரிகள் வெட்டிக் கொன்றனர்.

    நபித் தோழர்கள் கொல்லப்பட்ட செய்தி மதீனாவை எட்டுவதற்கு முன்பே, இதையெல்லாம் இறை அறிவிப்பின் மூலமாக அறிந்த நபி(ஸல்) அவர்கள், நேரில் நின்று காண்பதுபோல் மதீனாவில் உள்ளவர்களுக்கு நேர்முக வர்ணணையாக விவரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.

    ஜஅஃபர்(ரலி) வீட்டுப் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுவதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி வந்தது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்கள் அவ்வாறு அழுவதைத் தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். ஒப்பாரி வைத்து அழுவது காரணமா மய்யித் (சடலம்) வேதனை செய்யப்படுகிறது என்று அறிவித்தார்கள்.



    அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) வீரமரணமடைந்து கீழே விழுந்தவுடன் மக்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். கொடியைக் கையில் எடுத்த காலித் (ரலி) எதிரிகளுடன் கடுமையாகப் போராடினார்கள். காலித்(ரலி) அவர்களின் ஒன்பது வாட்கள் உடைந்து, அகலமான யமன் நாட்டு வாள் ஒன்று மட்டும் கையில் உடையாமல் எஞ்சியிருந்தது. காலித்(ரலி) முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு ஒரு போர் தந்திரத்தைக் கையாண்டார். படைக்கு முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கினார். படையின் முற்பகுதியை பிற்பகுதியாகவும், வலப்பக்கத்தில் உள்ளவர்களை இடப்பக்கத்திலும் மாற்றி அமைத்தார்.

    மறுநாள் காலை போர் தொடங்கியபோது முஸ்லிம்களின் புதிய அமைப்பைப் பார்த்த எதிரிகள் தங்களுக்கு முன் நேற்று இல்லாத புதிய படை இருப்பதைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உதவிப்படை வந்திருக்கின்றது என்று அதிர்ந்தனர்‌. அவர்களது உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டது. முஸ்லிம்கள் ஏதோ சதி செய்கின்றனர் என்று எண்ணிய ரோம் வீரர்கள் முஸ்லிம்களைப் பின்தொடர்வதையும் விரட்டுவதையும் விட்டுவிட்டு பின்வாங்கி, தங்களது நாடுகளுக்குத் திரும்பி விட்டனர்.

    காலித் இப்னு வலீத்(ரலி) தலைமையில் முஸ்லிம்கள் அபார வெற்றி பெற்றனர். பேராற்றல் மிக்க ரோமர்களை முஸ்லிம்கள் வென்றார்கள் என்றால், முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவி கிடைக்கிறது. அவர்களது தலைவர் உண்மையில் அல்லாஹ்வின் தூதரே என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரிய சான்றென்று, முஸ்லிம்களுடன் வம்பு செய்து வந்த பெரும்பாலான அரபு கோத்திரத்தினர், இப்போருக்குப் பின் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.

    ஸஹீஹ் புகாரி 4:64:4260,4266, 2:23:1246, 1291,1299, 4:61:3630, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×