search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனாதைச் சிறுமியும் அண்ணலாரின் அழகிய தீர்ப்பும்
    X

    அனாதைச் சிறுமியும் அண்ணலாரின் அழகிய தீர்ப்பும்

    நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.
    நபி(ஸல்) அவர்கள் உம்ராவை முடித்துவிட்டு மக்காவிலிருந்து வெளியேறிய போது, உஹுதுப் போரில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஹம்ஸா(ரலி) அவர்களின் மகள் “சாச்சா, சாச்சா!” என்று தனது சிறிய தந்தையான முஹம்மது நபியை நோக்கி ஓடிவந்தார். தந்தையை இழந்திருந்த அந்தக் குழந்தையை அரவணைத்தார்கள் நபி(ஸல்) அவர்கள்.

    அச்சிறுமியைப் பார்த்த அலீ(ரலி) பரிவோடு அவளுடைய கையைப் பிடித்து அவர் மனைவி ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவள் உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை இடுப்பில் சுமந்து கொள்' என்று கூறினார்கள்.

    ஆனால் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் அந்த அனாதைச் சிறுமியை, 'நானே வளர்ப்பேன்' என்று ஒருவரோடொருவர் சச்சரவு செய்தனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். இவள் என் சிறிய தந்தையின் மகள்' என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள் மட்டுமல்ல இவளுடைய சிற்றன்னை அதாவது இவளுடைய தாயின் சகோதரி என் மனைவி' என்று கூறினார்கள். ஸைத்(ரலி), 'இவள் என் சகோதரரின் மகள்' என்று கூறினார்கள்.

    நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று தீர்ப்பளித்தார்கள். 'சிற்றன்னையே தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள், அதனால் அவள் ஜஅஃபர் வீட்டுக்குச் செல்வதே சரியாக இருக்கும்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்' என்று ஆறுதலாகச் சமாதானப்படுத்தினார்கள். ஜஅஃபர்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்' என்றார்கள் நபி(ஸல்). ஸைத்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் எம் சகோதரர். எம்மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ளவர்’ என்றும் கூறி அனைவரையும் சமாதானப்படுத்தினார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு அதன் அருகில் ‘ஸஃப்’ என்ற இடத்தில் தங்கினார்கள்.

    இந்த உம்ராவிற்கு ‘உம்ரத்துல் கழா’ என்று கூறப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, சென்ற ஆண்டு உம்ராவை நிறைவேற்ற முடியாமல் போனதற்குப் பகரமாக இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டதால் இப்பெயர் வந்தது. இரண்டாவது, ஹுதைபிய்யாவின் போது செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப இந்த உம்ரா அமைந்திருந்ததால் இந்தப் பெயர் வந்தது.

    ஸஹீஹ் புகாரி 3:53:2699, அர்ரஹீக் அல்மக்தூம்

    -ஜெஸிலா பானு.
    Next Story
    ×