search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நபித்தோழர்களின் ஆழமான இறை நம்பிக்கை
    X

    நபித்தோழர்களின் ஆழமான இறை நம்பிக்கை

    எல்லாப் பகுதியிலிருந்தும் படைப் பிரிவுகள் நபிகளாரிடம் திரும்பி செல்வதற்குள் உஸாமா செய்த வினையைப் பற்றிய செய்தி நபி(ஸல்) அவர்களைச் சென்றடைந்திருந்தது.
    தாதுர் கா போரில் வெற்றிப் பெற்றுத் திரும்புகையில் இணைவைப்பாளர் ஒருவரின் மனைவியை முஸ்லிம்கள் சிறை பிடித்திருந்தனர். அந்தப் பெண்ணின் கணவர் தன் மனைவியை மீட்க இவர்களைப் பின் தொடர்ந்து ‘ஒரு நபித் தோழரையாவது கொல்வேன்’ என்று சபதம் எடுத்து முஸ்லிம்கள் இரவில் தங்கியிருந்த இடத்திற்கு வந்து கண்காணித்தார்.

    பாதுகாப்புப் பணியில் இருந்தவரான அப்பாது இப்னு பிஷ்ர் (ரலி) என்பவர் தொழுது கொண்டிருந்தார். அதுதான் சமயமென்று இணைவைப்பாளர் அம்பெறிந்தார், அதைப் பிடுங்கி எறிந்தவராக அவர் தொழுகையை நிறுத்தாமல் தொடர்ந்தார். மூன்று அம்புகள் எறிந்தும் தொழுகையை அவர் கைவிடவில்லை. தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்த பிறகே அருகிலிருந்த தோழரை எழுப்பினார். அவர் எழுந்து “நீங்கள் என்னை எழுப்பியிருக்கலாமே?” என்று ஆதங்கப்பட்டார். “நான் ஒரு சூராவை ஓதிக் கொண்டிருந்தேன், அதை முறிக்க விரும்பவில்லை” என்று சொல்லும்போதே அவர் உயிர் பிரிந்தது.

    அந்த இடத்திலிருந்து பல படைப் பிரிவுகளாகப் பிரிந்து பல இடங்களுக்கு நபி(ஸல்) அவர்களால் அனுப்பப்பட்டனர். அதில் காலிபு இப்னு அப்துல்லாஹ்வின் படைப் பிரிவினர் எதிரிகளைத் தாக்கிவிட்டு அவர்களைத் தோற்கடித்து கால்நடைகளை ஓட்டி வந்தனர். அப்போது அவர்கள் எதிரிப்படை கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சுற்றி வளைத்தபோது அவர், ‘லா இலாஹ் இல்லல்லாஹ் அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை’ என்று சொல்லச் சொல்ல எல்லாரும் அவரைக் கொல்லாமல் விட்டுவிட்ட நிலையில் அவரை உஸாமா இப்னு ஸைத்(ரலி) குத்திக் கொன்றுவிட்டார்.

    எல்லாப் பகுதியிலிருந்தும் படைப் பிரிவுகள் நபிகளாரிடம் திரும்பி செல்வதற்குள் உஸாமா செய்த வினையைப் பற்றிய செய்தி நபி(ஸல்) அவர்களைச் சென்றடைந்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் ஆவேசமாக உஸாமாவிடம் வந்து ”அவர் ஏகத்துவ வாக்கியத்தை மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று கோபமாகக் கேட்டார்கள்.

    இதை எதிர்பாராத உஸாமா(ரலி) “நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல் இருக்க, தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் அவர் அதைக் கூறினார்” என்றார். சமாதானமாகாத நபி(ஸல்) ”அவர் உண்மையாளரா? பொய்யரா? என நீ அறிய அவரது உள்ளத்தைப் பிளந்தா பார்த்தாய்?” என்று கேட்டார்கள். உஸாமா தவறு செய்துவிட்டதாக ஆதங்கப்பட்டுத் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்த நபி(ஸல்) ’இப்படி இனி நிகழக் கூடாது’ என்று எச்சரிக்கையும் விடுத்தார்கள்.

    ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 4:64:4269, இப்னு ஹிஷாம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×