search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரகசியம் பேணுங்கள்
    X

    ரகசியம் பேணுங்கள்

    உங்கள் ரகசியங்களைத் தெரிந்தவன் ஒருநாள் உங்களைக் கைதியாக்கி விடுவான். அவனுக்கு நீங்கள் அறிந்தோ அறியாமலோ அடிமையாகிவிடுவீர்கள்.
    ‘இருவரைக் கடந்துவிட்டால் எதுவும் ரகசியமல்ல’ என்று பழைய சொலவடை ஒன்று இருக்கிறது. ‘யார் அந்த இருவர்?’ என்று ஒருவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், இரு உதடுகள் மீது விரல் வைத்து ‘இவர்கள்தான்’ என்று சுட்டிக் காட்டினார். உண்மைதான் இரு உதடுகளைக் கடந்துவிட்டால் எதுவும் ரகசியமல்ல.

    தெரிந்த ரகசியத்தை வெளியே சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும் மனோநிலையில்தான் இன்று அனேகமானவர்கள் அலைகின்றனர். அதைப்போன்று அடுத்தவர் ரகசியத்தை அறிந்துகொள்வதில் நாம் காட்டும் ஆர்வம் இருக்கிறதே அப்பப்பா... நமது சொந்த விவகாரங்கள் குறித்துகூட நாம் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லை.

    நமது கவலைகள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் நாம் நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவரிடம் மனம்விட்டுப் பேசுகின்றோம். பேசி முடித்த பின்னர் இதை யாரிடமும் கூறவேண்டாம் என்றும் நாம் சொல்லியிருப்போம்.

    அவரோ, ‘எனது வலக்கையில் சூரியனையும் இடக்கையில் சந்திரனையும் கழுத்தில் கத்தியையும் வைத்தால் கூட என் உதட்டில் இருந்து உங்களைக் குறித்து ஒரு வார்த்தைகூட வெளியே வராது, கவலைப்படாதீர்கள்’ என்று கூறி வழியனுப்பி வைப்பார். ஆனால் நமது தலை மறையும்வரைதான் அவரது அந்த வாக்குறுதி நீடித்திருக்கும். நாம் வீடு சென்று சேர்வதற்குள் ஊருக்கே நமது ரகசியம் தெரிந் திருக்கும்.

    நம்மை நம்பியவனுக்குத் துரோகம் இழைப்பதும்.. அவனது ரகசியத்தை வெளியே கசியவிடுவதும் ஒரே தரத்தில் இருக்கும் குற்றச் செயல்தான். ஒருவரைக் குறித்த ரகசியத்தைப் பேணுதல் என்பது ஆண்மையின் அடையாளம். உயர் குணத்தின் பிரதிபலிப்பு. கீழ்த்தரமான மனோபாவம் கொண்டவர்களே அடுத்தவர் குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்துவார்கள்.

    ரகசியங்களை வெளியே சொல்வது தீய குணம். அதன் மூலம் எத்தனை, எத்தனை நபர்களுடைய வாழ்வு பாதிக்கப் படுகிறது. ரகசியம் என்ற பெயரில் நாம் வெளிப்படுத்தும் ஒரேயொரு செய்தி மூலம் ஒருவருடைய தன்மானம், கண்ணியம், கற்பு, நல்லொழுக்கம், நல்லெண்ணம் அத்தனையும் அடித்து நொறுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே இதன் ஆபத்து புரியவரும்.

    அனஸ் (ரலி) அவர்களை (இறைத்தூதரின் பணியாளர்) நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் ஒரு பணி நிமித்தமாக வெளியே அனுப்பினார்கள். செல்லும் வழியில் தமது தாயாரைச் சந்திக்கின்றார் அனஸ் (ரலி).

    அனஸ் (ரலி) அவர்களுடைய தாயார் கேட்டார்கள்: ‘எங்கு செல்கின்றீர்?’

    அனஸ் (ரலி): ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வேலை நிமித்தமாக என்னை அனுப்பியுள்ளார்கள்’.

    தாயார்: ‘என்ன வேலை?’

    அனஸ் (ரலி): ‘அது ரகசியம். அல்லாஹ்வின் தூதருடைய ரகசியத்தை நான் வெளியே சொல்லக் கூடாது. சொல்லவும் மாட்டேன்’.

    தாயார்: ‘அவ்வாறெனில் யாரிடமும் அதை நீ கூற வேண்டாம்’. (புகாரி, முஸ்லிம்)

    தமது சொந்தத் தாயாரிடம் கூட அந்த ரகசியத்தை அனஸ் (ரலி) கூறவில்லை என்பதும், அனஸ் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் எதற்காக அனுப்பினார்கள் என்பதும் இறுதிவரை யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டதும் ரகசியம் பேணுவதின் முக்கியத்துவத்தை உணர்த்திச் செல்கிறது.

    இதுதான் இஸ்லாம் கற்றுத்தரும் பண்பாடும் பயிற்சியும். அதிலும் குறிப்பாக நமது குழந்தைகளுக்கு இதனைக் கற்றுக்கொடுக்க வேண்டும் எனும் பாடத்தையும் பயிற்றுவிக் கிறது.

    தொலைத் தொடர்பு சாதனங்களைவிட வேகமாக பிறரின் ரகசியத்தைப் பரப்பும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அனைவரைவிடவும் மிகவும் ஆபத்தானவர்கள் இவர்களே. இவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற தினத்தில் தாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட செய்தி உடனடியாக மக்காவின் வீதிகளில் ஒலிக்க வேண்டும் என்பதை விரும்பினார். ஆயினும் இன்றைய நாட்களைப் போன்று தொலைதொடர்பு சாதனங்கள் அன்று இருக்கவில்லையே. என்ன செய்தார் தெரியுமா..? பரம ரகசியம் என்று சொன்னால் உடனடியாக அதை அடுத்தவரிடம் பரப்பும் நபர் யார் என்று விசாரித்தார். ஜமீல் பின் மஅமர் என்பவரைக் குறித்து கேள்விப்பட்டார்.

    நேராக அவரிடம் சென்று, ‘உன்னிடம் ஒரு ரகசியம் சொல்வேன். நீ யாரிடமும் கூறக்கூடாது’ என்று கூறினார்.

    ‘என்ன ரகசியம்?’ என்று அவர் கேட்டார்.

    ‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். ஆயினும் இதை நீ யாரிடமும் கூறிவிடாதே’ என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.

    உமர் (ரலி) அவர்களின் தலை மறைந்ததுதான் தாமதம் ஜமீல் பின் மஅமர் எழுந்து, ‘உமர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.. உமர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்’ என்று கூறியவாறே மக்காவின் வீதிகளில் கண்ணில் படும் அனைவரிடமும் கூறியவாறு ஓடத் தொடங்கினான்.

    கொஞ்ச நேரத்தில் மக்காவாசிகள் அனைவரும் உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்ற செய்தியை அறிந்துகொண்டனர். உமர் (ரலி) அவர்களும் இதைத்தான் விரும்பினார்கள்.

    இதுபோன்ற மனிதர்களிடம்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களை இனம்கண்டு ஒதுக்கிவிட வேண்டும். அடுத்தவர் ரகசியங்களைப் பரப்புவதில் ‘செல்போன் டவர்’களைவிட அதிவேகமாக ஒருசிலர் செயல்படுகின்றனர்.

    எவ்வளவு தூரம் நீங்கள் ரகசியத்தைப் பேணுகின்றீர்களோ அவ்வளவு தூரம் மக்கள் உங்களை நம்புவார்கள். இதயங்களில் இடம் தருவார்கள். உங்களைக் குறித்த மதிப்பு அவர்களிடம் உயரும். ‘நம்பிக்கைக்கு உரியவர்கள்’ என்று உங்களைக் கருதுவார்கள். எனவே முடிந்தவரை உங்கள் ரகசியங்களை உங்கள் மனங்களிலேயே பூட்டி வையுங்கள். கூடவே பிறரது ரகசியங்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஒருபோது வெளிப்படுத்தாதீர்கள்.

    ஏனெனில் உங்கள் ரகசியங்களைத் தெரிந்தவன் ஒருநாள் உங்களைக் கைதியாக்கி விடுவான். அவனுக்கு நீங்கள் அறிந்தோ அறியாமலோ அடிமையாகிவிடுவீர்கள்.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    Next Story
    ×