search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரோமாபுரியின் மன்னர் வியந்த நபி பெருமானார்
    X

    ரோமாபுரியின் மன்னர் வியந்த நபி பெருமானார்

    அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன். இப்போது நான் அவரருகே இருந்தால் அவரின் பாதங்களைக் கழுவி விடுவேன்' என்றார் மன்னர்.
    முஹம்மது நபி(ஸல்) ரோமபுரி மன்னர் ஹெர்குலிஸுக்குக் கடிதம் எழுதி இஸ்லாத்திற்கு வரும்படி அழைத்தார்கள்.

    ஹெர்குலிஸ் மன்னர் விண் கோள்களை ஆய்ந்து சோதிடம் சொல்லுவதில் வல்லவர். கவலையுடன் காணப்பட்ட மன்னர் தம் கவலைக்கான காரணம் ‘தாம் நட்சத்திர மண்டலத்தை ஆராய்ந்தபோது விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களின் மன்னர் தோன்றிவிட்டதாக’ அறிந்ததாகக் கூறினார். “யூதர்களைத் தவிர வேறு யாரும் விருத்த சேதனம் செய்து கொள்வதில்லை.

    உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரகளுக்கெல்லாம் எழுதி அங்குள்ள யூதர்களைக் கொன்று விடுமாறு கட்டளையிட்டு விடுவோம்’ என்று சிரியாவிலுள்ள கிறித்தவர்களின் தலைமைக் குருவும் ரோமாபுரியின் மாமன்னர் ஹெர்குஸிலின் அருமை நண்பரும் அல்அக்ஸா ஆலயத்தின் நிர்வாகியுமான இப்னு நாத்தூர் ஆலோசனை வழங்கினார். அப்போதுதான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் இஸ்லாமிய அழைப்புக் கடிதம் வந்தது. அப்போது விருத்த சேதனம் செய்து கொள்வது யூதர்கள் மட்டுமல்ல அரபிகளின் வழக்கமும் என்று அறிந்த மன்னருக்கு விடை கிடைத்தது.

    அங்குத் தங்கி முகாமிட்டிருந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான குறைஷியர்களை - இறைநிராகரிப்பாளர்களை - மன்னர் வரவழைத்தார். அவைக்கு வந்து சேர்ந்த குறைஷிகளிடம் மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரின் மூலம் பேசத் தொடங்கினார். 'தம்மை இறைவனின் திருத்தூதர் என்று கருதிக் கொண்டிருக்கும் அம்மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?' எனக் கேட்டார். அபூ சுஃப்யான் தான் முஹம்மதுக்கு நெருங்கிய உறவினர் என்று சொன்னதும், மன்னர் அவரைத் தன் அருகில் அழைத்து, அபூ சுஃப்யானுடன் வந்திருப்பவர்களை அவருக்குப் பின்னால் நிறுத்த ஆணையிட்டார்.

    'நான் அந்த மனிதரைப் பற்றி அபூ சுஃப்யானிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறி விட வேண்டும். அபூ சுஃப்யான் தாம் பொய் கூறினால் மற்றவர்கள் சொல்லி விடுவார்களோ என்ற நாணத்தால் உண்மையை மட்டும் சொல்ல ஆயத்தமானார்.

    பிறகு மன்னர் அபூ சுஃப்யானிடம் கேட்ட முதல் கேள்வி, 'உங்களில் அவரின் குலம் எத்தகையது?' அதற்கு, அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர் என்றார். இவ்வாறு மன்னருக்கும் அபூ சுஃப்யானுக்குமான கேள்வி பதில் உரையாடலாகத் தொடர்ந்தது.  இறுதியாக மன்னர், 'அவர் அப்படி என்னதான் போதிக்கிறார்?' என்று கேட்டதும் 'அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்; உங்கள் முன்னோர்கள் கூறி வந்தவற்றையெல்லாம் விட்டுவிடுங்கள்' என்கிறார். தொழுகை, உண்மை, கற்பு நெறி, உறவினர்களுடன் இணங்கி இருத்தல் போன்ற பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார்’ என்று இதையெல்லாம் ஒரு குறையாகச் சொன்னார் அபூ சுஃப்யான்.

    எல்லாவற்றையும் கேட்ட மன்னர் 'அவரின் குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர் தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத்தூதர்களும் அப்படித்தான். அவர்களின் சமூகத்திலுள்ள உயர் குலத்தில்தான் அனுப்பப்பட்டுள்ளார்கள். உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன் செய்ததுண்டா? என்று கேட்டேன்.

    அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். இவருக்கு முன்னர் யாரேனும் இவ்வாதத்தைச் செய்திருந்தால், முன்னர் செய்யப்பட்டு வந்த ஒரு வாதத்தைப் பின்பற்றித் தான் இவரும் செய்கிறார் என்று கூறியிருப்பேன். இவரின் முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருக்கிறார்களா என்று உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்று சொன்னீர். இவரின் முன்னோர்களில் எவரேனும் மன்னராக இருந்திருந்தால், தம் முன்னோரின் ஆட்சியை அடைய விரும்பும் ஒருவர் இவர் என்று சொல்லியிருப்பேன்.

    இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்றுகின்றனரா? அல்லது சாமானியர்களா? என்று கேட்டேன். சாமானிய மக்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தாம் இறைத்தூதர்களை துவக்கத்தில் பின்பற்றுவோராய் இருந்திருக்கிறார்கள்.

    அவரைப் பின்பற்றுகிறவர்கள் அதிகரிக்கின்றனரா அல்லது குறைகின்றனரா என்றும் உம்மிடம் கேட்டேன். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை, நினைவு பெறும் வரை அப்படித்தான் வளர்ந்து கொண்டே இருக்கும். அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கின்றனரா? என்று உம்மிடம் கேட்டேன். நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். அப்படித்தான் இதயத்தில் நுழைந்த இறை நம்பிக்கையின் எழில் உறுதியானது.

    அவர் எப்போதேனும் வாக்கு மீறியதுண்டா? என உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றீர். இறைவனின் திருத்தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீற மாட்டார்கள். அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்? என்று உம்மிடம் கேட்டேன். அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாததென்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் சிலை வணக்கங்களிலிருந்து அவர் உங்களைத் தடுப்பதாகவும் தொழுகை, உண்மை, கற்புநெறி ஆகியவற்றை உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர்.

    நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் ஒரு காலத்தில் என்னுடைய இரண்டு பாதங்களுக்கும் இடையிலுள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார். இப்படிப்பட்ட ஓர் இறைத்தூதர் வெகு விரைவில் தோன்றுவார் என்று முன்பே அறிந்திருந்தேன். ஆனால் அவர் அரபிகளாகிய உங்களிலிருந்து தாம் தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை.

    அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன். இப்போது நான் அவரருகே இருந்தால் அவரின் பாதங்களைக் கழுவி விடுவேன்' என்றார் மன்னர். இதைக் கேட்டுக் குறைஷிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் கூச்சல்களும் அதிகரித்தது. அவையிலிருந்து குறைஷிகள் வெயேற்றபட்டனர்.

    ஸஹீஹ் புகாரி 1:1:7

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×