search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனம் திருந்தி இறைவழிக்குத் திரும்பியவர்கள்
    X

    மனம் திருந்தி இறைவழிக்குத் திரும்பியவர்கள்

    இறைநிராகரிப்பிலிருந்து செய்த அத்தனை பாவங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் தானாவே அழிந்துவிடுமென்று ஆறுதல் அளித்தார்கள் நபிகளார்.
    காலித் இப்னு வலீத் 200 குதிரை வீரர்களுடன் மக்காவை நோக்கி செல்லும் முக்கிய வழியில் போர் புரிவதற்காகத் தயாராக நின்றிருந்தபோது முஸ்லிம்கள் லுஹர் தொழுகையைத் தொழுவதைக் கண்டு, “தொழுகையில் ருகூவு ஸுஜூதில் (குனிந்து மண்டியிட்டு) இருக்கும்போது நம்மை இவர்கள் கவனிக்கவில்லை, அந்த நேரத்தில் நாம் தாக்கியிருந்தால் இவர்களுக்குப் பெரும் சேதத்தை விளைவித்திருக்கலாம். எனவே, இவர்களின் அடுத்தத் தொழுகையின் போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்றெண்ணி காத்திருந்தார்.

    ஆனால், அஸர் தொழுகைக்கு முன் ‘ஸலாத்துல் கவ்ஃப்’ அச்சமுள்ள நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ் இறக்கி விட்டான். முஸ்லிம்கள் அந்த அடிப்படையில் தொழுது கொள்ளவே காலிதின் நோக்கம் நிறைவேறாமல் போனது. அந்த நொடியிலிருந்து காலித் இப்னு வலீத்துக்கு இஸ்லாத்தின் மீது ஈர்ப்பு வந்தது. இஸ்லாத்தால் கவரப்பட்டவர் இறைத்தூதரின் குணநலன்களாலும் கவரப்பட்டுத் தன்னுடைய நோக்கத்தைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டார்.

    ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை நடந்து முடிந்ததும் அடுத்து என்ன முடிவை எடுப்பது என்ற குழப்பத்தில் இருந்த காலித் பின் வலீத் அவர்களுக்கு மதீனாவிலிருந்து ஒரு கடிதம் வந்தது. கடிதத்தைக் காலித்தின் சகோதரர் எழுதியிருந்தார். அவர் ஏற்கெனவே இஸ்லாத்தை ஏற்றவர். கடிதத்தில் காலித்தை நலம் விசாரித்ததோடு இறைத்தூதர் அவர்களும் காலித்தை விசாரித்த செய்தியை அதில் குறிப்பிட்டிருந்தார்.

    அதைப் படித்து மகிழ்ந்த காலித் தமது குழப்பத்திலிருந்து விடுபட்டார். காலித் பின் வலீத் அவர்கள் என்றாவது ஒருநாள் இஸ்லாத்தை ஏற்பார் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. அவரது அறிவு, ஆற்றல், சிந்தனைத் திறன், தொலை நோக்குப் பார்வை ஆகிய இறைவனின் அருட்கொடைகள் அனைத்தும், காலித் பின் வலீத் அவர்களை இதே நிலையில் விட்டு வைத்திருக்கப் போவதில்லை என்பதனையும் அதில் அவர் சகோதரர் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்.

    குழப்பத்திலிருந்து விடுப்பட்டவராக காலித் சிந்திக்கத் தொடங்கினார். தன்னுடைய வாழ்க்கையின் திசை மாறப்போகிறது, ஒளிமயமாகப் போகிறது என்பதை உணர்ந்தவர் மதீனாவுக்குச் செல்ல முடிவெடுத்தார். அவரைப் போலவே இஸ்லாத்தை ஏற்க முடிவெடுத்த உதுமான் பின் தல்ஹா அவர்களும் அமர் பின் ஆஸ் அவர்களும் காலித் பின் வாலீத்துடன் இணைந்து கொண்டனர். இஸ்லாத்தை ஏற்க மதீனா விரைந்தனார். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கரங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு தன் வாளின் பலத்தால் தாம் இஸ்லாத்திற்கு இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்புக் கோரினார் காலித்.

    இறைநிராகரிப்பிலிருந்து செய்த அத்தனை பாவங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் தானாவே அழிந்துவிடுமென்று ஆறுதல் அளித்தார்கள் நபிகளார். இருப்பினும் தமக்காகப் பிரார்த்திக்கும்படி வேண்டி கேட்டுக் கொண்ட காலித் பின் வலீத்(ரலி) அவர்களுக்காகவும், உதுமான் (ரலி) அவர்களுக்காகவும், அமர் பின் ஆஸ்(ரலி) அவர்களுக்காகவும் நபி(ஸல்) இறைவனிடம் அவர்களின் பாவங்களை மன்னித்துக் கருணை காட்டுமாறு பிரார்த்தனை செய்தார்கள்.

    ஆதாரம்: அர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 4:102

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×