search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உடன்படிக்கையை உறுதி செய்த நபிகளார்
    X

    உடன்படிக்கையை உறுதி செய்த நபிகளார்

    இறைநம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத் தாங்கள் செலவு செய்ததை அவர்கள் உங்களிடம் கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்;
    சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த காலக் கட்டத்தில் இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அல்லாஹ் இறைவசனத்தை அருளினான். அதில், "இறை நம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் 'ஹிஜ்ரத்' அதாவது மக்காவிலிருந்து தஞ்சம் புகுந்து மதீனா வந்தால் அவர்கள் நம்பிக்கையாளர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள். அவர்களின் நம்பிக்கையின் உண்மை நிலையை அல்லாஹ்தான் நன்கறிவான்.

    மேலும், அவர்கள் நம்பிக்கையாளர்கள் தான் என்று உங்களுக்குத் தெரிந்தால் நிராகரிப்பாளர்களிடம் அவர்களைத் திருப்பி அனுப்பாதீர்கள். அவர்கள் இறை நிராகரிப்பாளர்களுக்கு மனைவியராக இருக்க அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர். நிராகரிப்பாளர்களும் அவர்களுக்குக் கணவர்களாக இருக்க அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்.

    ஆனால், இப்பெண்களுக்காக அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய 'மஹ்ரை' (திருமணக் கொடையை) கொடுத்து அவர்களைத் திருமணம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாகப் பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை அவர்கள் போய்ச் சேருவோரிடம் கேளுங்கள்;

    அதேபோல் இறைநம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத் தாங்கள் செலவு செய்ததை அவர்கள் உங்களிடம் கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் இவ்வாறே தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (திருக்குர்ஆன் 60:10)

    இந்த இறைவசனத்தைக் கேட்டதும் உமர்(ரலி), இணைவைக்கும் மார்க்கத்திலிருந்த காலத்தில் தமக்கிருந்த இரு மனைவிமார்களைத் தலாக் (விவாகரத்து) செய்து விட்டார்கள். அவ்விருவரில் ஒருவரை முஆவியா இப்னு அபீ சுஃப்யான் அவர்களும் மற்றொருவரை ஸஃப்வான் இப்னு உமய்யா அவர்களும் மணந்தார்கள்.

    பெண்களைப் போல் ஆண்களும் மக்காவிலிருந்து மதீனாவிற்குத் தப்பி வந்தனர். குறைஷிகளில் ஒருவரான அபூ பஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் மதீனாவுக்கு வருகை தந்தார். உடனே, அவரைத் தேடுவதற்காக குறைஷிகள் இருவரை அனுப்பினர். நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி மக்காவிலிருந்து வந்வரை எங்களிடம் திருப்பி அனுப்புங்கள்’ என்றனர்.

    உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் அபூ பஸீரை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், ஒரு மரத்தடியில் தங்கினார்கள். இருவரில் ஒருவரை கொன்றுவிட்டு அபூ பஸீர்(ரலி) தப்பினார். கொலையைப் பார்த்து பயந்த மற்றவர் நபி(ஸல்) ஓடி வந்து விஷயத்தை விவரித்தார். "அபூ பஸீர்! போர்த் தீயை மறுபடியும் மூட்ட காரணமாகாதீர்கள்" என்று நபிகளார் சொல்லக் கேட்டவுடன், அபூ பஸீர் தாம் மறுபடியும் குறைஷிகளிடம் ஒப்படைக்கப்படுவோம் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.

    சமாதானம் பேச வந்த சுஹைலின் மகன் அபூ ஜந்தல்(ரலி) அவர்களும் குறைஷிகளிடமிருந்து தப்பியோடி அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்தார்கள். அவரைப் போன்றே இஸ்லாத்தைத் தழுவிய மற்றவர்களும் மக்காவிலிருந்து தப்பிச் சென்று அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார். அபூ பஸீருடன் ஒரு குழுவே திரண்டுவிட, வியாபாரக் குழுவினர் ஷாம் நாட்டைக் கடக்கவும் பயந்தனர்.

    எனவே, குறைஷிகள் அபூ பஸீரும் அவரின் சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று உத்தரவிடும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுத் தூதனுப்பினார்கள். மேலும், 'குறைஷிகளில், முஸ்லிமாக நபி(ஸல்) அவர்களிடம் வருகிறவர் அச்சமின்றி இருக்கலாம் அவரை எங்களிடம் திருப்பியனுப்ப வேண்டாம்' என்றும் கூறிவிட்டனர்.

    “முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி ஏற்றுக் கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது சாந்தியையும் அமைதியையும் இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.” –திருக்குர் ஆன் 48:18

    ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 3:53:2731,2732, திருக்குர்ஆன் 60:10, 48:18

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×